![](pmdr0.gif)
தாமரைப் பொய்கை
(சங்கநூற் காட்சிகள்)
கி. வா. ஜகந்நாதன்
tAmaraip poikai
(scences from Sangam literature)
of ki.vA. jekannAtan
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
of this work. The etext has been generated using Google OCR online. The raw text has been
corrected by K. Kalyanasundaram and proof-read by R. Navaneethakrishnan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
தாமரைப் பொய்கை
(சங்கநூற் காட்சிகள்)
கி. வா. ஜகந்நாதன்
-
Source
- தாமரைப் பொய்கை
(சங்கநூற் காட்சிகள்)
கி. வா. ஜகந்நாதன்
அமுத நிலையம் லிமிடெட்
சென்னை, 3ம் பதிப்பு 1967
-----------
முகவுரை | |
1. உமாபாகன் | 8. குறுங்கை இரும்புலி |
2. தாமரைப் பொய்கை | 9. பாலை குளிர்ந்தது |
3. நெல்லுடைய செல்வன் | 10. உடைத்தெழு வெள்ளம் |
4. அப்படியும் உண்டா? | 11. இன்ப வாழ்வு |
5. தழை விலை | 12. உண்ணா விரதம் |
6. உறக்கம் கெடுத்தவள் | 13. கடவுளை வழுத்தும் காதலி |
7. மணிகிற மால்வரை | 14. கண் புதைத்த காரிகை |
முகவுரை
தமிழில் பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் இரண்டு வகையாகப் பிரித்தார்கள். மற்ற மொழிகளில் எழுத்தையும் சொல்லையும் பற்றி இலக்கண நூல்கள் சொல்கின்றன. தமிழில் பொருளைப்பற்றியும் இலக்கண நூல்கள் வரையறுக்கின்றன, மிகப் பழைய இலக்கண நூல் என்று இப்போது வழங்கும் வரலாறுகளால் தெரிவது அகத்தியம். அதனை இயற்றியவர் அகத்தியர். அவர் தலைச்சங்கத்தில் இருந்தவர். தலைச்சங்கத்தாருக்கு அவருடைய நூலே இலக்கணமாக இருந்தது. அகத்தியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனியே இலக்கணம் இருந்தது.
நாளடைவில் இசைக்கும் நாடகத்துக்கும் தனி நூல்களாக இலக்கணம் இயற்றினார்கள் சில புலவர்கள். இடைச்சங்க காலத்தில் தொல்காப்பியர் இயற்றமிழுக்குத் தனியே இலக்கணம் இயற்றினார். அதுதான் தொல்காப்பியம் . இப்போது கிடைக்கும் நூல்களுக்குள் மிகவும் பழையதாக உள்ளது அது.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுதிகளையும் பற்றிய இலக்கணங்களை விரிவாகப் புலப்படுத்துகிறது; ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அதிகாரமாக வகுத்துச் சொல்கிறது.
பொருளதிகாரம் ஒன்பது பிரிவை உடையது, அவற்றில் அகப்பொருள், புறப்பொருள், செய்யுள், அணி, மரபு என்பவற்றைப்பற்றிய இலக்கணங்களைக் காணலாம்.
எழுத்து, சொல் என்ற இரண்டையும் பற்றித் தனியே இலக்கண நூல்கள் பிற்காலத்தில் எழுந்தன. பொருள் இலக்கணத்தைச் சார்ந்த பகுதிகளை விரித்துத் தனித்தனி நூல்கள் பலவற்றைப் புலவர்கள் இயற்றனார்கள். அகப்பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம், பிரபந்த இலக்கணம், பொருத்த இலக்கணம் என்று பல பிரிவுகளாகப் பொருளிலக்கணம் பிரிந்து தனி நூல்களில் சொல்லப் பெற்றது.
அகப்பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியத்துக்குப் பின் விரித்துச் சொல்லும் நூல்கள் வருமாறு: இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, வீரசோழியம் - பொருட்படலம், இலக்கண விளக்கம்-பொருளியல், தொன்னூல்-பொருள் அதிகாரம் முதலியன.
அகப்பொருளுக்கு இலக்கியமாக உள்ள நூல்கள் பல. பத்துப்பாட்டில் உள்ள முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அகத்துறைகள் அமைந்தவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பவையும், பரிபாடலில் சில பாடல்களும் அகத்துறை இலக்கியங்களே. பதினெண்கீழ்க்கணக்கில் கார் நாற்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணைஎழுபது, ஐந்திணை ஐம்பது, கைந்நிலை என்ற நூல்களும் நாலடியார், திருக்குறள் என்பவற்றில் உள்ள காமத்துப் பால்களும் அகத்துறைகள் அமைந்தவையே. பிற்காலத்தில் எழுந்த பல கோவை நூல்களும், கிளவிக்கொத்து, கிளவி மணிமாலை என்பன போன்ற நூல்களும் அகப்பொருள் இலக்கணத்துக்கு இலக்கியமாக உள்ளவை.
பொருளை அகமென்றும், புறமென்றும் பிரிக்கும் முறை தமிழுக்கே சிறப்பானது என்று தெரிகிறது. மக்களுக்கு உறுதி பயக்கும் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் ஆகும். இவற்றை உறுதிப்பொருளென்றும் புருஷார்த்தமென்றும் சொல்வார்கள். இந்த நான்கில் அகப்பொருள், இன்பத்தைப் பற்றிச் சொல்வது, அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பற்றிச் சொல்வது புறப்பொருள். இந்த மூன்றையும் பற்றிச் சொன்னாலும் புறப்பொருள் இலக்கணத்தில் பெரும்பாலும் பொருளின் பிரிவாகிய அரசியலைச் சார்ந்த போரோடு தொடர்புடைய செய்திகளையே காணலாம். சிறுபான்மை வேறு செய்திகளும் உண்டு.
காதலனும் காதலியும் ஒன்றுபட்டு இன்புறுவதைத் தலைமையாகக் கொண்ட அகம், அவர்களுடைய உணர்ச்சிகளின் வேறுபாட்டை விரித்துரைப்பது. உணர்ச்சி உள்ளத்தே எழுவது; அகத்தே அமைவது. ஆதலின் அகம் என்ற பெயர் வந்தது. ‘ஒத்த அன்பன் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக, இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்’ என்று நச்சினார்க்கினியர் இந்தப் பெயருக்குரிய காரணத்தைக் கூறுகிறார். உணர்ச்சியின் வேறுபாடுகள் மிகவும் நுட்பமான மெய்ப்பாடுகளால் புலப்படும். அவற்றை எளிதில் உணரவொண்ணாது உணர்ச்சியுடையார் தம் நினைவுகளைச் சொன்னால் ஒருவாறு அவ்வுணர்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம். உணர்ச்சி வசப்பட்டவர்கள் தம்முடைய செயலால் அதைப் புலப்படுத்துவதில்லை. பெரும்பாலும் செயலிழந்து நிற்பதே இயல்பு. ஆதலின் அகப்பொருள் இலக்கியமாகிய உணர்ச்சி பற்றிய கவிதைகள் அத்தனையும் கூற்றுவகையாக அமைந்திருக்கின்றன. தலைவன், தலைவி, தோழி முதலியவர்களின் கூற்றுக்களாகவே அகத்துறைப் பாடல்கள் எல்லாம் அமைந்திருப்பதைக் காணலாம்.
அறம், பொருள், வீடு என்பவற்றைப் பற்றிய செயல்கள் பலவாக இருக்கின்றன. அச்செயல்களைப் பிறர் கண்டு சொல்லலாம். அவை புறத்தாருக்குப் புலனாகின்றன. ஆதலின் அவற்றைப் புறம் என்று சொன்னார்கள், ‘ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாரும் துய்த்து உணரப்படுதலானும் இவை இவ்வாறு இருந்தவெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அது புறமெனவே படும்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
இன்பமாகிய காமத்தை மூன்று பிரிவாகப் பிரித்தார்கள். ஆணோ,பெண்ணோ யாரேனும் ஒருவர் மாத்திரம் காதல் கொள்வதைச் சொல்வது கைக்கிளை; அதை ஒருதலைக் காமம் என்றும் ஒருமருங்கு பற்றிய கேண்மை என்றும் சொல்வார்கள். சூர்ப்பணகை இராமனை விரும்பியது கைக்கிளை. வலிய இன்பம் நுகர்தல் முதலியவை பொருந்தாக் காமம், அதைப் பெருங்திணை என்பார்கள். இவை இரண்டும் தூய அகம் ஆகா. இவை அகத்துக்குச் சிறிது புறமாக இருப்பவை. ஆதலின் இவற்றை அகப்புறம் என்றுசொல்வார்கள். தாமரையின் புறவிதழ் போலவும் வாழைப்பழத்தின் தோல் போலவும் இருப்பவை இவை.
அகம் என்றே வழங்கும் காமத்தை அன்புடைக் காமம் என்று சொல்வார்கள். அதை ஐந்து திணைகளாகப் பகுத்துச் சொல்வதால் ஐந்திணைநெறி என்றும் வழங்குவார்கள். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற பெயருடைய இந்த ஐந்தையும் மூன்று வகையான பொருள்களால் புலவர்கள் விரித்துச் சொல்வார்கள். முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என்பவை அவை. நிலம், சிறுபொழுது, பெரும் பொழுது என்பவை முதற்பொருளின் வகை. இன்ன இடத்தில் இன்ன பருவத்தில் இன்ன போதில் இன்ன நிகழ்ச்சி நிகழ்ந்தது என்று அகப்பொருள் நிகழ்ச்சிகளை வருணிக்கும்போது நிலம் முதலியன வரும். அந்த அந்த நிலத்துக்கே உரிய தெய்வம், விலங்கு, பறவை, மக்கள், பண், உணவு முதலியவற்றைக் கருப்பொருள் என்று சொல்வார்கள். உரிப்பொருள் என்பது காதல் ஒழுக்கமாகிய நிகழ்ச்சி. இதுதான் தலைமையானது.
குறிஞ்சிக்கு நிலம் மலையும் மலையைச் சார்ந்த இடமும்; பெரும்பொழுது: கூதிர்காலம். முன் பனிக்காலம்; சிறுபொழுது: நடுயாமம்; கருப்பொருள் வகைகளாவன-தெய்வம்; முருகன்; உணவு: மலை நெல், தினை, மூங்கிலரிசி முதலியன; விலங்கு: புலி, யானை, கரடி, பன்றி முதலியன; மரம்: அகில், சந்தனம், தேக்கு, வேங்கை முதலியன;பறவை: கிளி, மயில் முதலியன; பறை: தொண்டகப்பறை, முருகியம்; தொழில்: தேன் அழித்தல், கிழங்கு அகழ்தல்,தினைவினைத்தல்,கிளிகடிதல் முதலியன; யாழ். குறிஞ்சியாழ்; பூ: காந்தள், வேங்கை, சுனைக்குவளை முதலியன; நீர் அருவி, சுனை; ஊர்: சிறுகுடி, குறிச்சி.
பாலைக்கு நிலம் தனியே இல்லை. வேனிற் காலத்தில் குறிஞ்சி நிலத்தின் சில பகுதிகளும், முல்லை நிலத்தின் சில பகுதிகளும் தம் வளப்பம் இழந்து தண்மையின்றி வெப்பம் மிக்குப் பாலை நிலமாகிவிடும். தமிழ்நாட்டில் இயற்கையாகப் பாலைநிலம் இல்லை. பெரும்பொழுது: இளவேனில், முதுவேனில், பின்பனி; சிறு பொழுது: நண்பகல்; கருப் பொருள்-தெய்வம்: காளி (இது பற்றி வேறுபட்ட கொள்கைகள் சில உண்டு); உணவு: வழிப்பறி, கொள்ளை இவற்றால் பெற்ற பொருள்கள்; விலங்கு: வலிமை யிழந்த யானை, புலி, செந்நாய் முதலியன; மரம்: இருப்பை, ஒமை, உழிஞை,ஞெமை முதலியன ; பறவை: கழுகு, பருந்து, புறா முதலியன; பறை: கொள்ளையடிப்போரும், மாடு பிடிப்போரும் அடிக்கும் பறை; தொழில்: வழிப்பறி,கொள்ளையிடுதல்; யாழ்: பாலை யாழ்; பூ: மரா, குரா, பாதிரி; நீர் : வற்றின கிணறும், சுனையும்; ஊர்: பறந்தலை.
முல்லைக்கு நிலம் காடும் காட்டைச் சார்ந்த இடமும்; பெரும் பொழுது: கார்காலம்; சிறுபொழுது: மாலை; கருப்பொருள் தெய்வம்: திருமால்; உணவு: வரகு, சாமை, பிற புன்செய்த் தானியம்; விலங்கு: மான், முயல் முதலியன; மரம் கொன்றை, குருந்து, காயா முதலியன; பறவை: காட்டுக்கோழி,சிவல் முதலியன; பறை ஏறுகோட்பறை: தொழில்: மாடு மேய்த்தல், வரகு முதலியன விதைத்தல் முதலியன; யாழ். முல்லை யாழ்; பூ முல்லை, பிடா, தளவு, தோன்றி, நீர் : காட்டாறு; ஊர்: பாடி, சேரி, பள்ளி.
மருதத்துக்கு நிலம் வயலும் வயலைச் சார்ந்த இடமும்; பெரும் பொழுது: கார், இளவேனில், முதுவேனில்; சிறு பொழுது: வைகறை, விடியற்காலம்; கருப்பொருள்-தெய்வம்: இந்திரன்; உணவு: செந்நெல்,வெண்ணெல்; விலங்கு: எருமை: நீர்நாய்; மரம்: மருதம், வஞ்சி, காஞ்சி முதலியன; பறவை: தாரா, நீர்க்கோழி முதலியன; பறை : மண முழவு, கிணை; தொழில்: நெல் வேளாண்மை; யாழ் : மருதயாழ்; பூ: தாமரை, கழுநீர்; நீர் : ஆற்றுநீர், பொய்கை நீர் முதலியன; ஊர்: ஊர் என வழங்குபவை.
நெய்தலுக்கு நிலம் கடலும் கடலைச்சார்ந்த இடமும்; பெரும் பொழுது: கார், இளவேனில், முதுவேனில்; சிறுபொழுது; எற்பாடு; கருப்பொருள்-தெய்வம்: வருணன்; உணவு மீனையும் உப்பையும் விற்றுப்பெற்ற தானியங்கள்; விலங்கு: எருது; மரம்: புன்னை, ஞாழல் முதலியன; பறவை: அன்னம், அன்றில் முதலியன; பறை: மீனைப் பிடிக்கும்போது அடிக்கும் பறை; தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், அவற்றை விற்றல் முதலியன, யாழ். நெய்தல் யாழ், பூ தாழம் பூ, நெய்தல் முதலியன ; நீர் : மணற் கிணறு, உப்புக் கிணறு, ஊர்: பட்டினம், பாக்கம்,
உரிப்பொருள்: குறிஞ்சிக்குப் புணர்தலும் அவற்றோடு சார்ந்தனவும்; பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும்; முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (தலைவன் பிரிந்து மீண்டு வரும் வரை அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி வீட்டில் இருத்தல்); மருதம்: ஊடலும் ஊடல் நிமித்தமும்; நெய்தல்: இரங்குதலும் அதன் நிமித்தமும்.
உரிப்பொருளாகிய நிகழ்ச்சி இன்ன நிலத்தில் இன்ன போதில் இன்ன பொருள்கள் சூழ்நிலையாக அமைய நிகழ்வது என்று கவிஞர்கள் பாடும்போது இந்த மூவகைப் பொருள்களையும் காணலாம். இந்தப்பொருள்கள் யாவும் வரவேண்டும் என்ற வரையறையில்லை. இவற்றில் சிலவும் பலவும் வரலாம். ஆனால் உரிப்பொருள் அவசியம் வரவேண்டும். அது இல்லாவிட்டால் அகத்துறையே இல்லை. திருக்குறள் காமத்துப்பாலில் இப்பொருள்களில் உரிப்பொருள் மாத்திரம் வந்த பாடல்கள் பல உண்டு.
குறிஞ்சியாகிய நிலத்தில் குறிஞ்சித் திணையின் உரிப் பொருளாகிய புணர்ச்சி நிகழ்வதாகச் சொல்லுவது கவி மரபு. இப்படியே அந்த அந்த நிலத்திற்குரிய ஒழுக்கத்தை இணைத்துச் சொல்வார்கள். உலகியலில் வேறு இடங்களிலும் காதலனும் காதலியும் ஒன்றுபடுவது உண்டு. இலக்கியத்திலும் அதையொட்டிப் பிற நிலங்களில் பிற ஒழுக்கங்கள் நிகழ்ந்ததாகச் சிறுபான்மை கூறுவார்கள். ஆனாலும் குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சிக் கருப்பொருள்களின் சூழலிடையே குறிஞ்சி உரிப்பொருளாகிய புணர்ச்சி நிகழ்வதாகச் சொன்னால் சுவை மிகுதியாகும். இலக்கியத்தில் சுவை மிகுவதற்காகக் கவிஞர்கள் தம் கற்பனையால் பலமுறைகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் புணர்தலென்ற நிகழ்ச்சிக்கு இயற்கை வளமும் தனிமையும் மிக்க குறிஞ்சி நிலத்தை ஏற்றதாக அமைத்தல் ஒன்று. பாட்டுக்கு ஏற்றபடி சுருதி அமைத்துக் கொள்வது போலவும் ஒவியத்துக்கு ஏற்ற நிலைக்களம் வரைவது போலவும் சிலைக்கு ஏற்ற பீடம் பொருத்துவது போலவும் காதல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற முதற்பொருளையும் கருப்பொருளையும் வகுத்துக்கொள்வதால் இலக்கியச் சுவை மிகுகின்றது.
பாலை நிலத்தில் பிரிவு நிகழ்வதாகச் சொல்வது கவி மரபு. பிரிவு அவலச்சுவை அல்லது சோக ரசத்தை உண்டாக்குவது. மருத நிலத்து ஊரிலே பிரிவு நிகழலாம்; குறிஞ்சி நிலமாகிய மலைச்சாரலிலும் பிரிவு நிகழலாம். ஆனால் எங்கும் வெப்பம் சூழ்ந்து மரங்களெல்லாம் கரிந்து ஓய்ந்த களிறும் வாடிய புலியும் தடுமாறும் பாலைநிலத்தில் பிரிவு நிகழ்வதாகச் சொன்னால், அவலச்சுவை பின்னும் சிறப்பாக இருக்கும்; சுருதியும் பக்க வாத்தியங்களும் சேர்ந்த பாட்டைப்போல இருக்கும். அதனால் தான் இந்த வரையறைகள் அமைந்தன. இவை கவிதைக்கு அமைந்த வேலி அல்ல; அதன் அழகை மிகுதிப்படுத்தும் அங்கங்கள்.
ஆயினும் மருதத்தில் புணர்ச்சி நிகழ்வதாகச் சொல்வதும், பிற நிலங்களில் வேறு வேறு நிகழ்ச்சிகள் நிகழ்வதாகச் சொல்வதும் புலவர்களின் செய்யுட்களில் உண்டு. அவை உலகியலைத் தழுவி அமைந்தன. முதல், கரு, உரி என்ற மூன்றும் இணைந்து அமைந்தவை கற்பனைத்திறன்; இதை நாடக வழக்கு என்று சொல்வார்கள்.
2
தனித் தனிப்பாடல்களின் தொகுப்பாக இல்லாமல், ஐந்து திணைகளுக்கும் உரிய பாடல்களைத் தனியே ஐந்து புலவர்கள் பாடிய நூல்கள் இரண்டு, எட்டுத் தொகையில் உள்ளன. அவை ஐங்குறுநூறு, கலித்தொகை என்பவை. ஐந்து திணைகளாகப் பகுத்து ஒரே ஆசிரியர் பாடிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கில் இருக்கின்றன. ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை என்ற ஐந்து நூல்களும் அவ்வாறு அமைந்தவை.
ஐங்குறுநூற்றிலிருந்து எடுத்த பதினொரு பாடல்களின் விளக்கம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
ஐங்குறுநூறு எட்டுத்தொகைகளில் அகப்பொருள் பற்றிய நூல்களில் ஒன்று. முதலில் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்தும், அப்பால் ஐம்பெரும் புலவர்கள் ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்களாகப் பாடிய ஐந்நூறு பாடல்களும் உடையது. மூன்றடி முதல் ஆறடி வரையிலும் அமைந்த பாடல்கள் இந்நூலில் இருக்கின்றன. குறிய அளவையுடைய நூறு பாடல்கள் அடங்கிய ஐந்து பிரிவை உடையதாக இருப்பதால் இதற்கு ஐங்குறுநூறு என்ற பெயர் வந்தது. இதில் திணைகள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசையில் அமைந்திருக்கின்றன. இவை நிலத்தைப்பற்றி வந்த பெயர்கள். அந்த அந்த நிலங்களில் வேறு நிலங்களின் ஒழுக்கமும் வந்திருக்கும். இந்தப் புத்தகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு மருதம் என்ற பிரிவில் வருவது. அதில் குறிஞ்சியின் உரிப்பொருள் வந்திருக்கிறது. இப்படியே வேறு சில பாடல்களில் இருப்பதைக் காணலாம். இந்த ஐந்து பிரிவுகளில் மருதத்தைப் பாடியவர் ஓரம்போகியார்; நெய்தலைப் பாடியவர் அம்மூவனார்; குறிஞ்சியைப் பாடியவர் கபிலர்; பாலையைப் பாடியவர் ஓதலாங்தையார்; முல்லையைப் பாடியவர் பேயனார். இந்தப் புத்தகத்தில் இந்த ஐவருடைய பாடல்களும் இருக்கின்றன. மருதம்: 2, 3; நெய்தல்: 4, 5, 6, குறிஞ்சி: 7, 8: பாலை 9, 10; முல்லை: 11.
மருதநிலத்துத் தலைவனாகிய ஊரனை இரண்டு பாடல்களிலும் நாம் காண்கிறோம். அவன் ஊரில் தண்டுறையும் மலர்ந்த பொய்கையும் அதன்கண் முகைத்த தாமரையும் காட்சி அளிக்கின்றன. வயல்களில் நெல் வளர்ந்து பூத்து அந்தப் பூ உதிர்ந்து கிடக்கிறது. அங்கே நண்டுகள் வளைகளில் வாழ்கின்றன. அந்த வளை நிறையும்படி நெல்லின் பூ உதிர்கின்றது. நண்டைக் கள்வன் என்றும் வழங்குவார்கள். நண்டினது கண் வேப்பம் பூவின் மொட்டைப்போல இருக்கிறதென்று புலவர் வருணிக்கிறார்.
நெய்தல் நிலத்துத் தலைவனைத் துறைவன் என்றும் கொண்கன் என்றும் அறிமுகப் படுத்துகிறார் புலவர். கடற்கரையில் மணல் மேடுகள் இருக்கின்றன. அங்கே புன்னையும் ஞாழலும் பூக்கின்றன, புன்னை பொன்னிறத்தை விரிக்கிறது. ஞாழலில் சில சமயம் பூ இல்லா விட்டாலும் அதன் தழையைப் பறித்துக் கோத்து மகளிர் தழையாடையாக அணிந்து கொள்கிறார்கள். பரதவர் முத்தெடுத்து அதை விற்கின்றனர்.
குறிஞ்சி நிலத்துக்கானவரையும் தலைவனுகிய நாடனையும் தெரிந்து கொள்கிறோம். மலைகளில் பல சிகரங்கள் உயர்ந்திருக்கின்றன. பெரிய மலை நீலமணி நிறம் பெற்றுத் தோன்றுகிறது, கானவர் மலைக்காட்டில் கிழங்குகளைத் தோண்டுகிறார்கள். அதனால் அங்கங்கே குழிகள் உண்டாகின்றன. அங்கேவளர்ந்து மலர்ந்திருக்கும் வேங்கையின் மலர்கள் உதிர்ந்து அந்தக் குழியை நிரப்புகின்றன, அந்த மலரைப் பார்த்தால் பொன்னைப் போல இருக்கிறது. பலா மரங்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. அவற்றில் பழங்கள் தொங்குகின்றன. அங்கங்கே குத்துக் குத்தாக உயர்ந்த புதர்கள் உள்ளன. அவற்றின் மறைவிலே பெண் யானை கன்று போட்டிருக்கிறது. அந்தக் கன்று நடுங்கி நடக்கிறது. அதை அறிந்த புலி பலாமரத்தின் நிழலிலே பதுங்கியிருந்து அந்தக் கன்றின்மேல் எப்போது பாயலாம் என்று பார்க்கிறது. இவ்வாறு கொலை புரிவதில் வல்லது புலி. அதன் முன் கால்கள் குறுகியவை. அவற்றைக் கையென்றும் சொல்வார்கள். ‘குறுங்கையிரும்புலி’ என்று புலவர் பாடுகிறார்.
பாலை நிலத்தில் ஓய்ந்த களிறு செல்கிறது. அது கீழே தன் துதிக்கை பட்டால் வெந்துவிடுமென்று அஞ்சி அதை மேலை தூக்கியபடியே செல்கிறது. எங்கே பார்த்தாலும் வெயிலால் மரங்கள் உருவமே தெரியாமல் உலர்ந்து போயிருக்கின்றன. மூங்கில் மாத்திரம் உயர்ந்து நிற்கிறது.
முல்லை நிலத்தின் அழகுகளை அதிகமாகத் தெரிந்து கொள்ளும் காட்சிகளை இதில் உள்ள ஒரே பாடலால் அறிய முடியவில்லை. ஆயினும் முல்லை நிலத்துக்குப் பெயர் தந்த முல்லைப்பூ இருக்கிறது. இல்வாழ்க்கை நடத்தும் காதலி அதைச் சூடிக்கொள்கிறாள். முல்லைப் பண்ணைப் பாணர்கள் பாடுகிறார்கள்.
தலைவன், (5, 9), தோழி (2, 3, 4, 5, 7, 8, 10), செவிலி (11) ஆகியோர் இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களில் பேசுகிறார்கள். களவுப் பகுதிக்குரிய நிகழ்ச்சிகள் ஆறும் (3;4, 5, 6, 7, 8) கற்புக்குரிய நிகழ்ச்சிகள் நான்கும் (2,9,10,11) அமைந்த, பாடல்கள் இதில் இருக்கின்றன.
தலைவன் பிறர் அறியாதவாறு தலைவியைச் சந்தித்து அளவளாவுவதும், பின்பு அவளைக் கல்யாணம் செய்து கொள்வது தான் நல்லது என்று உணர்ந்து அதற்காகப் பொருள் தேடச் செல்வதும், சென்ற இடத்தில் தலைவியின் நினைவாகவே இருப்பதும், உறங்காமல் பொழுதுபோக்குவதும், பிறகு மீண்டும் வந்து பரிசம் அனுப்புவதும், தலைவியின் பெற்றோர் கேட்டதைக் கொடுப்பதும், தலைவிக்குத் தழைவிலையாக நாட்டையே நல்குவதும் நமக்குத் தெரியவருகின்றன. பின்பு தலைவன் தலைவியை மணந்து வாழ்கிறான். இடையிலே பொருள் தேடிவரப் பிரிந்து செல்கிறான். அப்படிப் பிரிந்து செல்லும்போது தலைவியின் இனிய இயல்பையும் எழிலையும் தினந்து, பாலையின் வெம்மையை மறந்து நடக்கிறான். அவளுடைய பண்புகள் தண்மையை உண்டாக்குகின்றன. பிரியும்போது தலைவி பட்ட வருத்தத்தை உணர்ந்தவனாதலால், போன இடத்தில் நெடுங் காலம் தங்காமல் இன்றியமையாத அளவுக்குப் பொருளைச் சேமித்துக்கொண்டு மீண்டும் வருகிறான். வந்து இல்லறம் நடத்திப் புதல்வனைப் பெறுகிறான். காதல் மனைவியோடும் புதல்விகளோடும் கலையின்பம் நுகர்ந்து இன்ப வாழ்வு வாழ்கிறான்.
தலைவி தலைவனோடு பிறர் அறியாமல் அளவளாவுகிறாள். அப்போது அவனைக் காணும் போதிலும் காணாப் போது பெரிதாகையால் கொய்திடு தளிரைப்போல வாடுகிறாள்; கவினை இழக்கிறாள். அவள் உடம்பு வேறுபாட்டை அடைகிறது. தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் அவன் மலையைக் கண்டு. ஆறுதல் பெறுகிறாள். அது மறையும் போது அவள் கண்களில் நீர் மல்குகிறது. ஒரு தலைவி தன் காதலன் எப்படியும் தன்னை மணந்து கொள்வான் என்ற தைரியத்தால் மணம் செய்து கொண்ட பின்னர் எப்படி இருப்பாளோ அப்படி இருக்கிறாள். ‘வேந்தன் வாழவேண்டும்’ என்று வாழ்த்துகிறாள். தலைவனை மணந்துகொண்டு வாழ்கிறாள். அவன் பொருளுக்காகப் பிரியும்போது கண் கலங்குகிறாள்; உடைத்தெழு வெள்ளம் போலக் கண்ணீர் பெருக்குகிறாள். அவன் வந்தபிறகு புதல்வனைப்பெற்று வாழ்கிறாள். முல்லை மலரைச் சூடிக்கொள்கிறாள். செவிலித்தாய் கண்டு மகிழும்படி காதலனும் புதல்வனும் சேர்ந்து: இருக்க, பாணர் முல்லைப் பண்ணைப் பாட, அங்கே அவளும் ஒன்றி இருக்கிறாள்.
தோழி தலைவியின் நலத்தையே தன் நலமாக எண்ணி வாழ்கிறவள். களவுக் காலத்தில் தலைவிக்கு உண்டாகும் துயரத்தைக் கண்டு கண்டு துயரடைகிறாள். தலைவன் தலைவியை மணந்து கொண்டால் நல்லது என்ற நினைவினால், அவன் தலைவியைச் சந்திப்பதற்காக மறைவில் வந்து நிற்கும்போது தலைவியிடம்,தலைவர் பொருட்டு வருந்துவானேன் என்று கேட்பவளைப் போலப் பேசுகிறாள். அந்தப் பேச்சில், தலைவன் களவிலே வந்து தலைவியுடன் அளவளாவுதலோடு நிற்பவன் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். அதைக் கேட்டுத் தலைவன் திருமணத்துக்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யட்டுமென்பதே அவள் எண்ணம். ‘தலைவன் இவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் முயற்சியிலே ஈடுபடவேண்டும்; இவள் தந்தையும் அவனுக்கு இவளைக் கொடுக்கவேண்டும்’ என்று தெய்வத்தினிடம் வேண்டிக்கொள்கிறாள். தன்னுடைய தாயும் தலைவியை வளர்த்தவளும் ஆகிய செவிலியிடம், குறிப்பாகத் தலைவி தலைவனிடம் காதல் கொண்டுள்ளாள் என்பதைத் தெரிவிக்கிறாள். தெரிவித்த பிறகு, தலைவனுடைய கல்யாணத்துக்கு விட்டார், சம்மதித்த பிற்பாடு தலைவி முன்பட்ட வருத்தத்தைச் சொல்லி, 'உன்ளால் அந்த நிலைமாறி நன்மை விளைந்தது’ என்று செவிலியைப் பாராட்டுகிறாள். திருமணம் ஆன பிறகு தலைவனிடம், தலைவி தைரியத்தோடும் நம்பிக்கையோடும் இருந்ததைச் சொல்கிறாள்.
செவிலித்தாய் தலைவியும் தலைவனும் புதல்வனைப் பெற்று, இனிதாக இல்லறம் நடத்தி இன்ப வாழ்வு வாழ்வதை, அவர்கள் வாழும் வீட்டுக்குச் சென்று கண்டு, மீண்டும் வந்து தலைவியின் தாய்க்குச் சொல்கிறாள்.
கடவுள் வாழ்த்தில் சிவபிரான் அர்த்தநாரீசராகக் காட்சி தருகிறார். நீலமேனியையும் வாலிழையையும் உடைய உமா தேவியாரைத் தம் ஒரு பகுதியிலே கொண்ட அப்பெருமான் மூன்று உலகத்தையும் உண்டாக்குகிறார்.
ஆதன் அவினி என்ற சேர அரசன் பெயர் இரண்டாவது பாட்டிலே வருகிறது.
அரசர்கள் பகை தணிந்து வாழவேண்டுமென்றும் அவர்களுடைய வாழ்நாள் பெருகவேண்டுமென்றும் வாழ்த்துவது மரபு. உலகங்களை மேல் கீழ் நடு என்று வகைப்படுத்தி மூவகை உலகம் என்பார்கள். பழங்காலத்தில் மகளிர் தழையு டையைக்கட்டுவது உண்டு. அணிகளை அணிதலும், கற்புக்கு அடையாளமாக முல்லைப் பூவை அணிதலும்மகளிருக்கு வழக்கம். பாணர் இடத்துக்கு ஏற்ற பண்களைப்பாடுவார்கள். அவர்கள் பாடும் பாட்டை ஆடவர் மகளிர் குழந்தைகள் யாவரும் சேர்ந்து கேட்பார்கள்.
இந்தப் புத்தகத்தில் உள்ள பதினொரு பாடல்களைக் கொண்டு இவற்றை உணரலாம். இன்னும் புலவர்கள் ஒரு செய்தியைச் சொல்லும் முறையும் இயற்கையை வருணிக்கும் திறமும் உள்ளுறையுவமத்தால் குறிப்பாகச் செய்திகளைப் புலப்படுத்தும் வகையும் உள்ளே உள்ள விளக்கங்களிலிருந்து தெளிவாகும். சுருங்கிய உருவத்தில் பாடல் அமைந்திருந்தாலும், அப்பாடலாகிய கூற்றுக்குரிய நிலைக்களமும் பாட்டினூடே பல பல கருத்துக்களும் குறிப்புகளும் பாட்டின் பயனாகிய செய்தியும் விரித்து உணரும்படி அமைந்திருக்கின்றன. சங்கப் புலவர்களின் வாக்கில் எல்லாம் இந்தச் சொற் சுருக்கத்தைக் கண்டு மகிழலாம்.
3
பழங்காலத்தில் எட்டுத்தொகைநூல்களைத் தனித்தனியே தொகுக்கும்போது ஒவ்வொன்றையும் யாரேனும் ஒரு செல்வர் தொகுக்கச் செய்தார். ஒரு புலவர் அதைத் தொகுத்தார், ஐங்குறு நூற்றைத் தொகுக்கும்படி செய்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேர அரசர். அவர் வேண்டுகோளின்படி இதைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் புலவர் பெருமான்.
இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது சில குறிப்புகளை மாத்திரம் தருகிறதேயன்றிப் பொழிப்புரையாகவோ விரிவுரையாகவோ அமையவில்லை. இந்தப் புத்தகத்தில் வரும் பாடல்களுக்கு அவ்வுரையாசிரியர் எழுதியுள்ளவற்றை அங்கங்கே எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
ஐங்குறுநூற்றையும் அதன் உரையையும் ஆராய்ந்து செப்பஞ் செய்து முதல் முதலில் 1903-ஆம் ஆண்டில் என்னுடைய ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் வெளியிட்டார்கள். அவர்கள் எழுதிய முகவுரையில் இந்நூலின் பெருமையை, ‘சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தது. பொருள்களின் இயற்கை அழகையும் தமிழ்ப் பாஷையின் இனிமையையும் நன்கு தெரிவிப்பது. இத் தமிழ் நாட்டின் பழைய காலத்தின் நிலைமையையும் சில சரித்திரங்களையும் புலப்படுத்துவது’ என்று எழுதியிருக்கிறார்கள். சங்க நூல்களின் சுவையை நன்கு அறிந்து மகிழ்ந்து ஆராய்ச்சியும்: விளக்கமும் சரித்திரமும் கதையும் எழுதும் துறையில் பல அன்பர்கள் இக்காலத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், அத்தனைக்கும் வித்திட்ட பெருந்தகை ஸ்ரீமத் ஐயரவர்கள் என்பதை. நினைக்கும்போதும், அவர்கள் தாளிணைக்கீழ் இருந்து தமிழ் கற்கும் பேறு எளியேனுக்குக் கிடைத்தது என்பதை நினைக்கும்போதும் பெருமிதம் உண்டாகிறது. எல்லாம் முருகன் திருவருள்.
இதற்குமுன் வெளியான மனைவிளக்கைக் கண்டும் குறிஞ்சித்தேனை ச் சுவைத்தும் இன்புற்றுப் பாராட்டிய அன்பர்கள் இந்தத் தாமரைப் பொய்கையிலும் மூழ்கி உளம் குளிர்வார்கள் என்று நம்புகிறேன்.
7–3–52 கி. வா. ஜகந்நாதன்
குறிப்பு
இரண்டாம் பதிப்பில் புதியனவாக மூன்று பாடல்களின் விளக்கக் கட்டுரைகள் சேர்ந்திருக்கின்றன.
7–8–58 கி. வா. ஜ.
---------------------
1. உமாபாகன்
கண்ணாலே காணும் உலகம் எவ்வளவு விரிவாக இருக்கிறது ! ஆருயிர்கள் யாவும் உடம்பைத் தாங்கி வாழ்வதற்கு இடமாக இருப்பது இந்த உலகம். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகம் அல்லாமல் நமக்குத் தெரியாத பல உலகங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் மேன்மேலும் வளர்ந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சியிலே ஈடுபட்ட பேரறிஞர்கள் அகிலப்பிரபஞ்ச மென்பது எண்ணிக்கையில் அடங்காத அண்டங்களை உடையது என்று சொல்கிறார்கள். நாம் வாழும் பூமி நமக்கு ஒளியைத் தரும் கதிரவனை நாயகனாகக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்தது. சந்திரன் செவ்வாய் முதலிய கிரகங்கள் பூமியின் தோழர்கள். பூமியையன்றி மற்றக் கிரகங்களில் உயிர்கள் இருக்கின்றனவா, இல்லையா என்பதை இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை.
சூரியன் ஒன்றுதான் என்று ஒரு காலத்தில் நினைத்தோம். இன்று விஞ்ஞான ஆராய்ச்சியினால் பல கோடி சூரியர்கள் உண்டு என்று அறிஞர்கள் கண்டறிந்து சொல்கிறார்கள். வானத்தில் காணும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கதிரவனாம்.அந்தக் கதிரவனுக்குத் தனியே குடும்பங்கள் உண்டாம். இந்த விவரத்தை நாம் கேட்கப் புகுந்தால், நம்முடைய பூமி, அளவுக்கு அடங்காத அண்டங்களின் கூட்டத்தில் ஒரு சிறிய கடுகு என்றே நினைக்கத் தோன்றும். பூமியே அவ்வளவு சிறியதாகத் தோன்றமானால் தனி மனிதராகிய நாம் எவ்வளவு அணுப் பிரமாணமாக ஆகி விடுவோம்!
நம்முடைய முன்னோர்கள் பிரபஞ்சம் மிக மிக விரிந்தது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத அண்டங்கள் பல உண்டு என்று நூல்கள் சொல்கின்றன. மாணிக்கவாசகர் நூற்றொரு கோடிக்கு மேல் உள்ளன என்று சொல்கிறார்.
- “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி;
ஒற்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’’
புராணங்களில் பதினான்கு உலகங்கள் என்று ஒரு கணக்குச் சொல்லி யிருக்கிறார்கள். அவற்றையும் மூன்று வகைகளாக வகுத்தார்கள். மேல், கீழ், நடு என்று மூன்று அடுக்குகளாக உலகங்கள் இருக்கின்றன என்று கூறினர். அந்தர் மத்திய பாதலம் என்று வட மொழியிலே சொல்வார்கள்.
"முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டு"
என்று புறநானூற்றில் இந்த உலக வரிசையை ஒரு புலவர் எடுத்துச் சொல்கிறார். இவற்றை மூவகை உலகம், மூவுலகம் என்று பழம் புலவர்கள் வழங்குவார்கள்.
நாம் காணும் உலகமும் காணாத அண்டங்களும் மூவகை உலகினுள் அடங்கும். இந்த மூவகை உலகங்களிலும் உயிர்கள் வாழ்கின்றன. தோன்றி மறைகின்றன. உலகங்களுக்குத் தோற்றமும் ஒடுக்கமும் உண்டு. தோன்றிய உலகத்தை அவ்வாறு தோன்றும்படி செய்யும் ஒரு பொருள் என்றும் அழியாமல் இருக்கின்றது. தோற்றமும் ஒடுக்கமும் உடைய உலகங்களைப் படைப்பவன் அவற்றின் தோற்றத்துக்கு முன்பும், ஒடுக்கத்திற்குப் பின்பும் இருப்பவனாக இருந்தால்தான் அவற்றைப் படைக்க இயலும். ஆகவே உலகங்களை உண்டாக்கிய இறைவனுக்குத் தோற்றமும் ஒடுக்கமும் இல்லை என்று நூல்கள் சொல்கின்றன.
- அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு,
திருக்குறளின் முதற்பாட்டு உலகத்தைக் காட்டி அதை உண்டாக்கிய முதற்கடவுளையும் காட்டுகிறது.
மூவகை உலகமும் இறைவனிடத்திலிருந்து தோன்றின என்று நம் நூல்கள் கூறுகின்றன. பழந்தமிழ் நூல்களில் பல இடங்களில் இந்தக் கருத்தைக் காணலாம்.
'இறைவன் உலகத்தைத் தோற்றுவித்தான்’ என்பதையே பல விதமாகப் புலவர்கள் சொல்வார்கள். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் ஐங்குறு நூறு என்ற தொகை நூலில் கடவுள் வாழ்த்தாக உள்ள செய்யுளைப் பாடியிருக்கிறார். ‘உலகம் யாவும் இறைவனிடமிருந்து தோன்றின’ என்று அவர் கூறுகிறார். உலகம் தோன்றின என்று சொன்னாலும் இறைவனிடமிருந்து தோன்றின என்று சொன்னமையால் உலகங்கள் தாமே தோன்றுவன அல்ல, ஒருவன் தோன்றச் செய்தமையால் தோன்றின என்றுதானே கொள்ள வேண்டும்? திருக்குறளில் ‘உலகம் ஆதி பகவனாகிய முதலை உடையது’ என்று திருவள்ளுவர் சொல்கிறார். "ஆதிபகவன் முதற்றே உலகு" என்று அவர் கூறும் போது, உலகு எதையோ ஒரு பொருளை உடைய தென்று சொல்வது போல் இருக்கிறது. உலகம் ஒன்றை உடைய தலைமையைப் பெற்றது போலவும், ஆதிபகவன் அதனுடைய உடைமை போலவும் அந்த வாக்கியம் அமைந்திருக்கிறது. ஆனால் தலைமைப் பொருளாக நிற்பவன் இறைவன் தான். இதனை உணர்ந்த பரிமேலழகர் விசேடவுரையில் இந்த முதற்குறளின் கருத்தை விளக்குகிறார்.
"காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க"
என்று அவர் எழுதியிருப்பதைக் காண்க.
பெருந்தேவனர், ‘மூன்று வகை உலகங்களும் முறையாகத் தோன்றின’ என்று சொல்கிறார்.
மூவகை உலகமும் முகிழ்த்தன முறையே.
இறைவனுடைய திருவடி நிழலின்கீழ் இவை தோன்றின என்று சொல்ல வருகிறார். இறைவனே இவற்றைத் தோன்றச் செய்தான் என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாமல் உலகின் செயலாக வைத்துச் சொன்னதில் நயம் உண்டு. பரிமேலழகர் சொல்வது போல, ‘காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை’ கூறியதாக இருப்பது ஒன்று. மற்றொன்று இறைவன் ஒரு காரியத்தை நினைத்துச் செய்தான் என்று சொன்னால் அவனுக்கு அந்தக் காரியத்தைச் செய்வதில் ஒரு தனி முயற்சி இருப்பது போலத் தோன்றும். அவனுடைய அருளாற்றல் எப்போதும் ஒழியாமல் நிலவுகிறது. அதன்முன் உலகம் யாவும் இயங்குகின்றன. இதற்காக அவன் பெருமுயற்சியை மேற்கொள்வதில்லை. சூரியன் தோற்றும் போது அவனுடைய முன்னிலையில் தாமரை மலர்கிறது; குமுதம் குவிகிறது. அவை இயற்கையாக நிகழ்வனபோல அமைகின்றன. உலகினுடைய தோற்றமும் இயல்பாக அமைவது போலத் தோற்றுகிறது. இறைவன் முயற்சி செய்யாமல் தன் அருளாணையின் போக்கிலே உலகை முகிழ்க்கச் செய்கிறான். இதனால்தான் அவனுடைய செயல்களை விளையாட்டு என்று சொல்கிறோம்,
- உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே
'மூவகை உலகமும் முறையாக முகிழ்த்தன' என்று சொல்கிறார் புலவர். இறைவனுடைய படைப்பாகிய எதுவும் ஒழுங்கில் அடங்கியது. அதற்கு ஒரு முறை உண்டு. மனிதன் தன் அறியாமையால் முறையின்றி வாழ்கிறான். முறையின்றிச் செயல் செய்கிறான். கதிரவன் உதயமும் மறைவும், சந்திரன் தோற்றமும் மறைவும், ஐம்பெரும் பூதங்களின் நிலையும் யாவும் ஒழுங்குக்குள் அமைந்திருக்கின்றன. ஆருயிர்கள் பிறவி யெடுப்பது வாழ்வது இறப்பது ஆகியவற்றிற்கும் ஒரு முறை உண்டு. அதையே ஊழ்வினை என்றும் பால் என்றும் சொல்வார்கள். இறைவன் இந்தப் பாலை வரையறுப்பதனால் அவனைப் பால்வரை தெய்வம் என்று தொல்காப்பியம் குறிக்கிறது. ஊழ், பால், விதி என்பவை ஒரே பொருளைத் தரும் சொற்கள். முறை என்றும் ஊழ்வினையைக் குறிப்பிடுவது உண்டு.
- நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தேர்ந்தனம்
என்று கணியன் பூங்குன்றன் கூறுவதைப் புறநானூற்றில் காணலாம்.
உலகு என்பதற்கு உயிர்க் கூட்டம் என்றும் பொருள் கொள்ளலாம். மூவகை உலகு என்பதற்கு மூவகை உயிர்க் கூட்டங்கள் என்ற பொருள் கிடைக்கும். உயிர்க் கூட்டங்களைத் தேவர், மக்கள், விலங்கு முதலியவை என்று மூவகையாகப் பிரிப்பதுண்டு. புண்ணியத்தின் பயனாகச் சொர்க்க பதவியில் இருந்து இன்பம் நுகர்பவர்கள் தேவர்கள். பாவத்தின் பயனாகிய துன்பத்தை நுகர்பவை விலங்கினங்கள். புண்ணியம், பாவம் என்னும் இரண்டின் பயனையும் இன்ப துன்பமாக நுகர்பவர்கள் மனிதர்கள். இப்படி மூன்று வகையாகப் பிரித்துச் சொல்வதைத் தழுவி, இன்பமே நுகரும் உயிர்கள், துன்பமே நுகரும் உயிர்கள், இன்பமும் துன்பமும் கலந்து நுகரும் உயிர்கள் என்று மூன்றாகக் கொள்ளலாம். மூவகை உலகு என்பது இம்மூவகை உயிர்க் கூட்டங்களையும் சுட்டும். மூவகை உயிர்த்தொகைகளும் முறையாக, ஊழ்வினைக்கு ஏற்றபடி தோன்றுகின்றன.
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே
என்பதற்கு அப்படிப் பொருள் கொள்வதும் பொருத்தமாக இருக்கும்.
உயிர்களானலும் சரி, உலகங்களை ஆனாலும் சரி, அவற்றின் தோற்றத்தில் ஒரு முறை உண்டு. அவை முறைப்படி முகிழ்க்கும். அவற்றை அப்படி முறைப்படுத்தி முகிழ்க்கச் செய்கிறவன் இறைவன்.
இறைவன் அருள் நிரம்பியவன். இறைவன் வேறு, அருள் வேறு ஆவதில்லை. ஆனாலும் அருளைத் தனியே வைத்து நினைப்பதும் பேசுவதும் வழக்கமாகி விட்டன. என் உயிர் என்று சொல்கிறோம். உயிரினின்றும் நான் வேறு அல்ல; ஆனாலும் நான் என்பது வேறு, உயிர் என்பது வேறு என்று நினைக்கும்படியாக என் உயிர் என்று சொல்வது பேச்சளவில் வந்து அமைந்துவிட்டது. அவ்வாறே அருளென்பது கடவுளை விட்டு வேறாக நிற்பதில்லை யானாலும், பேச்சிலே வேறாக வைத்துப் பேசுவது வழக்கமாகி விட்டது. இறைவனிடம் உள்ள அருள்தான் உலகத்தைத் தோற்றுவித்துக் காப்பாற்றி அழிக்கிறது. இறைவனிடத்திலே இயக்கம் உண்டாவதே அருளால் தான். இறைவனென்னும் செம்பொருள் ஆருயிர் இயற்றும் செயல்கள் யாவும் அருட்செயல்களே.
இறைவனைச் சிவனென்றும், அவனிடத்தில் பிரிவின்றி அவனுக்கு வேறாக நில்லாமல் ஒன்றி நிற்கும் அருளைச் சக்தி என்றும் சொல்வார்கள். சிவபெருமானுடைய அருளே சக்தி என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இறைவன் உலகத்தைப் படைத்தான் என்று சொல்வதையே இறைவன் அருள் உலகத்தைப் படைத்தது என்றும் சொல்வதுண்டு. ‘நான் இதை எழுதினேன்’ என்று சொல்வதற்கும், ‘என் கை இதை எழுதியது’ என்பதற்கும் கருத்து ஒன்றுதான். ஆனலும் சொல்லும் முறையில் வேறுபாடு இருக்கிறது. சிவபிரான் உலகத்தைப் படைத்தான், சிவபிரான் திருவருள் உலகத்தைப் படைத்தது என்று இரு வகையாகச் சொன்னாலும் கருத்து ஒன்றுதான்.
இறைவன் திருவருளைச் சக்தி என்று வழிபடுவது வழக்கம். அந்தச் சக்தியைப் பெண்ணுருவாகக் கொண்டு அதற்கேற்ற கோலங்கள் புனைந்து ஞானப் பெருமக்கள் அன்பு செய்தனர். இறைவனுடைய ஒரு பகுதியாக உமா தேவி எழுந்தருளியிருக்கிறாள் என்று நூல்கள் சொல்கின்றன. இறைவனும் அவனருளும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே அளவில் நிற்கின்றனர். அவன் எது செய்தாலும் அது அருளின் வெளியீடே.
எம்பெருமாட்டி அருளின் திருவுருவம். அப்பெருமாட்டியின் திருமேனி நீல நிறமுடையது. எம்பெருமானுடைய இடப் பாகத்தில் ஒன்றிய அருளுருவப் பெருமாட்டிக்கு அமைந்த நீல நிறம் கண்ணைக் குளிர்விப்பது. அப்பெருமாட்டியின் அழகிய திருமேனியில் ஆபரணங்கள் இலங்குகின்றன. அவற்றை யாரும் கையால் செய்யவில்லை. ஒருவர் முயன்று செய்தால் அதில் குற்றம் இருக்கும். பிறரால் இயற்றப் பெறாமல் இயல்பாக அமைந்த தூய இழைகளை அம்மை அணிந்திருக்கிறாள். நீல மேனியும் வாலிய (தூய) இழைகளையும் படைத்த இந்தப் பெருமாட்டி இறைவனுடைய பாகத்தில் ஒன்றி விளங்குகிறாள்.
இழையணி சிறப்பிற் பழையோள்
என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அம்மை அணிகளை அணிந்திருப்பதை நினைக்கச் செய்கிறார்.
உமாதேவி பாகத்தில் இருப்பதனால்தான் இறைவன் செயல் செய்கிறான்.
- சிவமெ னும்பொருளும் ஆதி சக்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
அவள்பி ரிந்திடின் இயங்குதற்கும் அரிது
என்று சங்கராசாரியார் சொல்லியிருக்கிறார், பராசக்தி இறைவனிடத்தில் தோற்றாமல் ஒடுங்கியிருந்தால் இறைவன் எந்தச் செயலையும் செய்தல் இயலாதாம். நன்றாகத் தூங்குகிறவன் ஏதாவது வேலை செய்வானோ? மாட்டான். சிவமெனும் பரம்பொருளிடம் அருள் தோன்றினால்தான் உலகம் முகிழ்க்கும்.
பலர் சேர்ந்து இந்த உலகத்தை உண்டாக்கவில்லை. ஒருவனால்தான் உலகங்கள் தோன்றுகின்றன. அவனும் அருளோடு சாராதபொழுது அவை தோன்றுவதில்லை. அவன் அளவுக்குச் சரியளவு அருள் சார்ந்தால்தான் உலகம் முகிழ்க்கிறது. அவன் பாதி, அருள் பாதி; சிவன் பாதி, சக்தி பாதி. இந்த இரண்டும் சேர்ந்த ஒருவன் அவன்; இரண்டு பாதி சேர்ந்த ஒருவன், நீலமேனி வாலிழையைப் பாகத்தில் உடைய ஒருவன்; இப்படி அமைந்தவர் வேறு யாரும் இல்லாத ஒருவன், அவனுடைய தாள் நிழற் கீழே உலகங்கள் தோன்றின.
இறைவனோடு எதையேனும் தொடர்புடையதாகச் சொல்லும்போது அவனுடைய அடியோடு தொடர்புடையதாகச் சொல்வது வழக்கம். இறைவன் தொண்டர் என்று சொல்வதை விட இறைவன் திருவடித்தொண்டர் என்று சொல்வது உயர்வு. இறைவன் திருவடிக்குப் பிழை செய்தேன் என இரங்குவது மரபு.
ஆதலின், இறைவனிடமிருந்து உலகம் தோன்றின என்று சொல்வதைவிட இறைவன் திருவடியிலிருந்து தோன்றின என்பது இன்னும் சிறப்பு. அதைப் பின்னும் சிறப்பாக, 'இறைவன் திருவடி நிழலின்கீழ்த் தோன்றின’ என்று சொல்கிறார் புலவர்.
நீலத் திருமேனியையும் தூய அணிகளையும் உடைய உமாதேவி அருளின் உருவம். அப்பெருமாட்டியைத் தன் திருமேனியின் ஒருபாதியில் உடையவன் இறைவன். எம்பெருமாட்டியோடு இணைந்த ஒருவனாகிய அப்பெருமானுடைய திருவடியிணைத் தாமரை நிழலின் கீழே உலகங்கள் மூன்றும் முறையாகத் தோற்றின.
இவ்வாறு பெருங்தேவனார் பாடுகிறார்:
- நீல மேனி வால் இழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.
* நீல நிறமுடைய மேனியையும் (பிறர் கையால் செய்யாத) தூய்மையை யுடைய அணிகளையும் உடைய உமா தேவியை ஒரு பாகத்திலே உடைய ஒப்பற்ற இறைவனுடைய இரண்டு திருவடி நிழலின் கீழ் மூன்று வகை உலகங்களும் முறையாகத் தோற்றின.
மேனியென்பது உடம்பின் நிறத்தைக் குறிக்கும். வால் தூய; வான்மை-தூய்மை, இழை-ஆபரணம், வால் இழை-வால் இழையை அணிந்த உமாதேவி: அன்மொழித்தொகை. பாகம்-ஒரு பாதி. ஒருவன்-ஒப்பற்றவன். முகிழ்த்தன.தோன்றின. முறையே-முறையாக.*
பாகம் என்பது பாதி. இந்தப் பாட்டில் அரை, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நயமாக அமைந்திருக்கின்றன.
----------
2. தாமரைப் பொய்கை
ஆனால் தலைவியின் ஆருயிர்த் தோழிக்கு மாத்திரம் அந்தக் கவலை இருந்தது. ஒவ்வொரு நாளும் அவ்விரு காதலர்களும் ஒன்றுபடும்படி செய்வதில் எவ்வளவு இடையூறுகள் உள்ளன என்பதை அவள் அநுபவத்தில் உணர்வாள். ஒவ்வொரு கணமும் அவள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டவளைப்போல அஞ்சி நடுங்குவாள். ஆயினும் காதலர்கள் வருங்கால வாழ்வைப் பற்றிக் கவலை கொள்பவர்களாகத் தோற்றவில்லை.
தலைவனுக்குக் கவலை இல்லாமல் இருப்பது வியப்பன்று. அவன் ஆடவன்; மன உறுதி உடையவன். தலைவிக்கு அல்லவா அதைப் பற்றிய கவலை இருக்க வேண்டும்? அவளுக்கு இம்மியளவேனும் தன் இல்லற வாழ்வைப் பற்றிய சிந்தனை இல்லை. திருமணம் ஆகி விட்டால் எப்படியிருப்பாளோ அப்படி அல்லவா அவள் இருக்கிறாள் ? என்ன ஆச்சரியம்!
தோழி நினைக்கிறாள்; ‘தலைவர் இவளை வந்து சந்தித்துச் செல்கிறாரே ஒழிய, இவளை மணப்பதற்குரிய முயற்சிகளைச் செய்வதாகத் தெரியவில்லை. பரிசத்தோடு முதியவர்களை அனுப்பி மணப் பேச்சைத் தொடங்கச் செய்ய வேண்டாமோ? அவர் அவ்வாறு செய்தாலும் இவ் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவள் மணப் பருவத்தை அடைந்து விட்டதனால், இவளை விரும்பிப் பல பேர் மணம் பேச வருவார்கள். அவர்களுக்குள் தாய் தந்தையருக்கு விருப்பமுள்ள யாரேனும் இருத்தல் கூடும். அவர்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் பெரிய இன்னலாக வந்து முடிந்து விடுமே ! காரியம் மிஞ்சிவிட்ட பிறகு தலைவர் மணம் பேச முயன்றால் அது எளிதிலே கை கூடுமா? இவள் கற்புக்கு இழுக்கு வந்து விடுமே! இவளுக்கல்லவா அதைப் பற்றிய கவலை இருக்க வேண்டும்?’ என்று அவள் எண்ணுகிறாள்.
தலைவி அமைதியாக இருக்கிறாள்; தலைவனை மணம் செய்துகொண்ட பிறகு எப்படி அமைதியாக இருப்பாளோ, அப்படி இருக்கிறாள்.
தோழிக்கு அவள் மனநிலை விளங்கவில்லை. ஒரு நாள் தலைவியினிடமே இதைக் கேட்கிறாள்.
"இப்படியே களவொழுக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கலாம் என்று நீ எண்ணியிருக்கிறாயோ?" என்று கேட்டாள்.
தலைவி: ஏன் அப்படிக் கேட்கிறாய்?
தோழி: கட்டுக் காவலுக்கு அடங்கி நிற்கும் நாம் ஒவ்வொரு நாளும் பிறர் அறியாமல் தலைவரைச் சந்திக்கிறோம். இந்தக் களவு வெளிப்பட்டு விட்டால் எத்தனை பழி உண்டாகும் என்று நீ சிந்திக்கவே இல்லையே!
தலைவி: என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறாய்?
தோழி: உலகத்தில் ஆடவரும் பெண்டிரும் எப்படி வாழ்கிறார்களோ, அப்படி வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டாமா?
தலைவி: ஆடவரும் பெண்டிரும் காதல் செய்து வாழ்கிறார்கள். அந்த நிலையில்தானே நாங்கள் இருக்கிறோம்?
தோழி: கற்புக்கு இடையூறு நேராத வண்ணம் பாதுகாப்பைச் செய்துகொள்ள வேண்டாமா?
தலைவி: என் கற்புக்கு இடையூறு இனி நேர வழி ஏது? இந்த உலகமே தலை கீழானாலும் என் கற்பு நிலைக்குக் குறைவோ மாறுபாடோ உண்டாகாது. இன்னும் அதன் திண்மையை நீ உணர்ந்து கொள்ளவில்லை போலும்!
தோழி: உன் கற்புக்கு மாசு வருமென்று நான் சொல்ல வில்லை. என்ன இருந்தாலும் நீங்கள் இல்வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் மனைவியராக மாட்டீர்களே!
தலைவி : தனி வீட்டில் மக்களுடனும் உறவினருடனும் ஆணும் வாழ்ந்தால்தான் கணவன் மனைவியரா? அப்போது மாத்திரம் கற்புக்குத் தனிச்சிறப்பு வந்து விடுமா?
தோழி: அப்படி இல்லை. இப்போது நீ உன் காதலரைச் சில காலமே சந்திக்க முடிகிறது; பல காலம் பிரிந்து வாழ வேண்டியிருக்கிறது. மணம் ஆகி விட்டால் எப்போதும் பிரிவின்றி வாழலாம்.
தலைவி: மணம் ஆகிய பின் மாத்திரம் பிரிவு இல்லையா? ஆடவர்கள் தம் தொழில்களில் ஈடுபட்டுப் பகல் நேரத்தைப் போக்குவார்கள். அப்போது மனைவியருடன் இருக்க முடியுமா? பொருள் தேட வெளியூருக்குப் போனால் சில காலம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருக்கவேண்டி நேர்கிறது. அப்போது அவர்களிடையே உள்ள காதலுக்கும் கற்புக்கும் ஏதேனும் இழுக்கு உண்டாகிறதா? இப்போது அவரைப் பிரிந்து வாழும் நேரத்தை அத்தகையதென்றே நான் எண்ணி அமைதி பெறுகிறேன். கணவன் மனைவியராக வாழும் வாழ்க்கைக்கும் இந்த வாழ்க்கைக்கும் என் அளவில் வேறுபாடு ஒன்றும் இல்லை. அப்போது உள்ள இன்பம் இப்போதும் கிடைக்கிறது.
தோழி: இன்பம் கிடைப்பது உண்மைதான். நீங்கள் இருவரும் இல்லறம் புரிந்து வாழ வேண்டாமா?
தலைவி: நாங்கள் இருவரும் இல்லறம் புரிவதென்பது வார்த்தை அளவில்தான். உண்மையில் அவர்தாம் எதையும் செய்யும் தகுதியும் உரிமையும் உடையவர். நான் நிழலைப்போல் அவருடன் நிற்பவள். எனக்கென்று ஒரு தனிச் செயல் இல்லை. நான் அவருடைய அன்பைப் பெற்றிருக்க வேண்டும். அது இன்று முழுமையாக எனக்குக் கிடைத்திருக்கிறது.
தோழி: இப்படியே இருந்தால் போதுமா? திருமணம் செய்து கொள்ளவே வேண்டாமா?
தலைவி: யார் அப்படிச் சொன்னார்கள்? திருமணம் செய்துகொள்வது இல்வாழ்வு நடத்துவது ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர் அவரே. நமக்கு அவற்றைப் பற்றி எண்ணுவதற்குத் தகுதி இல்லை; எண்ண வேண்டியதும் இல்லை.
தோழி: அவர் அதைப்பற்றிக் கவலைப்படுபவராகத் தெரியவில்லையே!
தலைவி: அவர் உள்ளக் கருத்தை அவ்வளவு எளிதிலே உன்னால் அறிந்துகொள்ள முடியாது. அவர் எப்படி எப்படிச் செய்கிறாரோ அப்படி அப்படி அவரைப் பின்பற்றி ஒழுகுதல் என் கடமை. இன்று கனவிலே வந்து என்னைச் சந்தித்து என் உயிருக்கு மலர்ச்சியைத் தருகிறார். அப்படிச் செய்வதே அவர் திருவுள்ளமானால், அதை ஏற்று நடப்பதே எனக்கும் இன்பம். அவர் மணம் புரிந்து வாழ்வாரானால் அப்போது அவருடைய இல்லக் கிழத்தியாக வாழ்வதே எனக்கும் இன்பம். எப்படி இருந்தாலும் என் அன்பும் இன்பமும் கற்பும் வேறுபாடு அடைவதில்லை. நான் என்றும் அவரோடு இணைந்தவள். ஊரறிய மனைவியென்று தெரியாவிட்டாலும் என் உளமறிய நான் அவருக்கு மனைவிதானே?
தோழிக்குத் தலைவியின் பேச்சைக் கேட்கக் கேட்க வியப்பு அதிகமாயிற்று. இவள் சின்னஞ்சிறு பெண் பேசுவது போலப் பேசவில்லையே! கற்பரசியாக அல்லவா பேசுகிறாள்? அறிவிலே தலை சிறந்தவள் போலப் பேசுகிறாள். தெய்வத் திருவருளிலே உள்ளத்தைக் கரைத்துவிட்ட மெய்ஞ்ஞானியர்கள் நன்றானாலும் அன்றானாலும் இறைவன் திருவருளென்று சிந்தைச் சலனமற்றுச் சும்மா இருப்பார்கள் என்று சொல்வார்கள். இவள் மனநிலையும் அப்படித்தானே இருக்கிறது? என்று நினைந்து தலைவியை மனத்தால் வணங்கினாள்.
தலைவியும் தோழியும் நீராடச் சென்றார்கள். அழகான பொய்கையில் நீர் நிறைந்திருந்தது. விரிந்த பொய்கை அது. ஒரே சமயத்தில் பலர் வந்து ஆடுவதற்கு ஏற்றதாக இருப்பது. தாமரை மலர்கள் காலையில் விரிந்து மலர்ந்து மணந்து அழகுடன் நின்றன. இவ்வளவு நாட்களாக அந்தத் தாமரைப் பொய்கையைத் தோழி பார்த்திருக்கிறாள். இன்று அவள் பார்வை அந்தப் பொய்கையில் ஆழ்ந்து பதிந்தது. தன் கண்களை அகல விரித்து அதைப் பார்த்தாள். பொய்கையில் நீர் நிரம்பியிருந்தது. அதனால் அது பலருக்கும் பயனுடையதாயிற்று. அதில் ஆம்பல் அல்லி முதலிய மலர்களும் இருந்தன. அவற்றால் அந்தக் குளத்துக்குச் சிறப்பு உண்டாகவில்லை. அதைத் தாமரைப் பொய்கை என்று ஊரார் வழங்கினர்கள். அப்படிச் சிறப்பாகச் சொல்வதற்கு ஏற்ற தகுதியை அதற்கு உண்டாக்கியது அதில் தோன்றி வளரும் தாமரையே. அது வெறும் பொய்கையாக இராமல் பூம்பொய்கையாக அழகு பெற்று விளங்கியது; மற்றப் பூக்கள் இருந்தாலும் தாமரைப் பூ இருப்பது போல் ஆகுமா? வேறு பூ ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் தாமரை ஒன்று இருந்தாலே போதுமே! பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை அல்லவா? தமிழர்கள் தாமரையைக் கடவுட்பூ என்று போற்றுவார்கள். தாமரைதான் அந்தப் பொய்கைக்கே சிறப்பைத் தருவது; அருங்கலமாக, அணியாக இருப்பது.
தோழிக்குத் தலைவனுடைய ஊர் நினைவுக்கு வந்தது. ‘இங்கே இவள் நீராடுகிறாள். திருமணம் ஆன பிறகு தலைவர் இவளைத் தம் ஊருக்கு அழைத்துச் செல்வார். தம் இல்லத்துக்கு அரசியாக இவளை வைப்பார். அங்கும் இத்தகைய தாமரைப் பொய்கை இருக்கும். நீராடும் துறைகளிலே தாமரையை உடைய ஊர் அது. அந்தப் பொய்கையிலே இவள் நீராடுவாள். தாமரைத் தண்டுறை ஊரன் என்று புலவர் பாடும் புகழுடையவர் இவள் காதலர்.’
சட்டென்று அவள் நினைவு மாறியது. ‘இன்னும் அவர் இவளைத் திருமணமே செய்து கொள்ளவில்லையே! அவர் இல்லம் வெறும் பொய்கை போலல்லவா இருக் கிறது? அவர் ஊர்ப் பொய்கையில் தாமரை இருக்கிறது. ஆனால் அது அரும்பாக இருக்கிறது. அது மலர்ந்து விளங்க வேண்டாமா? வெறும் பொய்கை மாத்திரம் இருந்தால் சிறப்பு இல்லை. அதில் தாமரை இருக்க வேண்டும், காதலர் தம் இல்லத்துக்குரிய தாமரையைப் பெற்றிருக்கிறார். ஆனால் முகையாக உள்ள அந்தத் தாமரை, முகைந்த பூ, விரிய வேண்டாமா? யாவரும் தாமரையின் அழகை மொட்டாக இருக்கையில் உணர முடியுமா? அது விரிந்து மலர்ந்தால்தானே உணரலாம்? இவளைத் தன் மனைவியாக ஏற்று இல்வாழ்க்கையைத் தொடங்கினால்தான் இவள் பெருமையை யாவரும் உணர்வார்கள். இவர்கள் இல்வாழ்க்கை மலர்ச்சி பெற்று விளங்கும்.'
இப்படித் தாமரைப் பொய்கையை உவமையாக வைத்துத் தலைவன் இல்லத்தையும் தலைவியையும் எண்ணிய தோழி தலைவனுடைய ஊர்ப் பொய்கையைக் கற்பனை செய்து பார்த்தாள். அவள் எண்ணத்துக்கு ஏற்றபடிதானே அந்தக் கற்பனை இருக்கும்? மிகவும் விரிவான பொய்கை அது; மலர்ந்த பொய்கைதான். தாமரை இருக்கிறது. யாவரும் நீராடும் துறையும் இருக்கிறது. தாமரைத்தண் துறை என்று சொல்வதில் தவறு இல்லை. ஆனால் மலர்ந்த தாமரையைக் காணவில்லை. முகைப் பருவத்தில் உள்ள தாமரையைத்தான் அவள் கற்பனைக் காட்சியில் காண்கிறாள். முகைந்த தாமரைத் தண்டுறையை அவள் அகக் கண்ணில் நிறுத்துகிறாள்.
'இது மலர்ந்த தாமரைப் பொய்கை ஆகவேண்டும்’ என்பதே அவள் ஆசை.
நீராடினார்கள். வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டார்கள். பொய்கைக் கரையில் உள்ள சிறிய கோயிலுக்குச் சென்றார்கள், வழிபட்டார்கள். தோழிக்கு இப்போது ஒரு யோசனை தோன்றியது. ‘இவள் ஒரு கவலையும் இல்லாதவள் போலப் பேசினாள். ஆனாலும் மனசுக்குள்ளே கவலை இருக்கலாம். அதையும், கண்டு பிடிக்க வழி ஒன்று பண்ணவேண்டும்’ என்று எண்ணினாள். 'கடவுளிடம் நம் வேட்கையை விண்ணப்பித்துக் கொள்ளலாமே!’ என்று தோழி சொல்லவே, அவ்விருவரும் வேண்டிக் கொள்ளத் தொடங்கினார்கள். துணைவி என்ன வேண்டிக் கொள்கிறாள் என்று தெரிந்து கொள்வதில் தோழிக்கு மிகுதியான ஆவல் இருந்தது.
தலைவி, "கடவுளே, நம்முடைய அரசனாகிய ஆதன் அவினி வாழவேண்டும். அவ்வேந்தனுக்கு எந்தப் பகையும் இல்லாமல் இருக்க வேண்டும். அவன் பல்லாண்டு வாழவேண்டும்!“ என்று வேண்டிக் கொண்டாள்.
தோழி இதைக் கேட்டபோது அவள் உடம்பு புல்லரித்தது. ‘என்ன இது! இவள் மனசும் வாக்கும் ஒன்றாகவே இருக்கின்றனவே! தலைவர் தன்னை மணந்து கொள்ள வேண்டுமென்ற கவலை சிறிதளவும் இருப்பதாகத் தோன்றவில்லையே! அது மாத்திரமா தன்னலத்தை அடியோடு இழந்த நிலையை அல்லவா இவள் பெற்றிருக்கிறாள்? நாட்டுக்கு அரசன் வாழவேண்டுமென்றல்லவா பிரார்த்தனை செய்கிறாள்? குடிமக்கள் யாவரும் வாழ வேண்டும், மாதவர் வாழவேண்டும், மடவார் கற்புச் சிறக்க வேண்டும் என்று பல வகையில் வாழ்த்துவதற்குச் சமானமானது இந்த வாழ்த்து. வேந்தன் வாழ்ந்தால் குடி மக்கள் வாழ்வார்கள். மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இல்லையானால் இல்லையாகும்.* ஆதலின் அவன் வாழ்ந்தால் கோன்பு வாழும், கற்பு வாழும், நாடு வாழும். இதனை அறிந்த பெருமூதாட்டி போல, அரசன் வாழ்க என்று இவள் வாழ்த்துகிறாள் தன் நலத்தை மறந்து வாழ்த்துகிறாள்; இது பெரும் கருணையல்லவா? தாயின் தன்மை இதுதானே? இவள் எனக்குத் தோழி அல்ல, தாய். அறிவினாலும் அருளினாலும் தாய் என்று நினைக்கத் தகுந்தவள்’ என்று அவள் மனம் தலைவியின் வேண்டுகோளுக்குப் பல பல வகையிலே பொருள் விரித்தது.
* மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனின் இன்றால்." (மணிமேகலை, 22: 208-9.)
சரி, சரி. நாம் இவளைப் போன்ற உயர்ந்த நிலைக்கு வர எவ்வளவோ பிறவிகளை எடுக்க வேண்டும். நாம் இன்னும் நம் நலத்தை மறக்கும் ஆற்றல் பெறவில்லை. நாமாவது இவளுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். விரிந்த பொய்கையிலே முகைந்த தாமரையையுடைய தண்டுறையூரர் ஆகிய தலைவர் இவளை வரைவாராக என்று பிரார்த்தனை செய்வோம். அவர் மணம் பேச விடுவதை ஏற்றுக்கொண்டு எம் தந்தையாரும் இவளை அவருக்கு மணம் செய்து கொடுப்பாராக என்று தெய்வத்தினிடம் நம் வேண்டுகோளைச் சமர்ப்பிப்போம் என்று அவள் மேலும் எண்ணினாள்.
தலைவி, 'வாழி ஆதன்! வாழி அவினி! ஆதன் அவினியாகிய அவ்வேந்தன் பகை தணிக! அவன் வாழும் யாண்டுகள் பலவாகப் பெருகுக!' என்று வேண்டிக் கொண்டாள்.
தோழியோ, “மலர்ந்த பொய்கையில் முகைந்த தாமரையை உடைய தண்டுறையூரன் வரைக! எந்தையும் கொடுக்க “ என வேட்டாள்.
★
தோழியின் வேண்டுகோள் பலித்தது. தலைவன் தலைவியை மணந்து கொண்டான். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தலைவனும் தலைவியும் இல் வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்கள். தோழியும் உடன் இருந்தாள்.
ஒருநாள் தலைவன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தான். பழைய காலத்துக் கதையை யெல்லாம் இருவரும் பேசினார்கள்.
தலைவன், "நான் அவளை மறைவிலே சந்தித்து அளவளாவிய அந்தக் காலங்களில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்டான்.
தோழி, தலைவி வேண்டிக் கொண்டதையும், தான் வேண்டிக் கொண்டதையும் அவனுக்கு எடுத்துச் சொன்னாள்.
- 'வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!'
எனவேட் டோளே, யாயே ; யாமே,
'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை ஊரன் வரைக!
எந்தையும் கொடுக்க!’ எனவேட் டேமே.
# ‘ஆதன் வாழ்க! அவினி வாழ்க! அவ்வரசன் பகைவர்கள் தாழ்ந்து போவார்களாக! அவனுக்கு ஆண்டுகள் பல வளர்க!’ என்று தாய்த் தன்மையை உடைய இவள் வேண்டிக்கொண்டாள். நானும் என்னைச் சார்ந்த சிலரும், விரிந்த பொய்கையிலே அரும்பிய தாமரையையுடைய தண்ணிய நீர்த்துறையையுடைய ஊர்க்குத் தலைவனுகிய இவள் காதலன் இவளை மணந்து கொள்வானாக ! எம் தந்தையும் இவளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பானாக!' என்று வேண்டிக் கொண்டோம்.
ஆதன் அவினி என்பது சேர அரசன் ஒருவனுடைய பெயர், பகை பகைவர். வேந்தன் பகைமை தணிந்தவனாகுக என்றது பகைவர்கள் அடங்கிப் போகட்டும் என்றபடி. யாண்டு-வாழ்நாளாகிய ஆண்டுகள். நந்துக-பெருகுக. வேட்டோள்-விரும்பினாள்; வேண்டிக் கொண்டாள். யாய்-எங்கள் தாய். மலர்ந்த-விரிந்த, பொய்கை - மானிடர் ஆக்காமல் இயற்கையாக அமைந்த நீர்நிலை. முகைந்த - அரும்பின. ஊரன் - மருதநிலத் தலைவன். வரைக - கல்யாணம் செய்து கொள்ளட்டும். வேட்டேம் - வேண்டிக் கொண்டோம். தன்னைப் போலத் தலைவியுடன் நெருங்கிப் பழகும் தோழி யரையும் சேர்த்துப் பன்மையாகச் சொன்னாள். #
துறை : களவினிற் பல நாள் ஒழுகி வந்து வரைந்து கொண்ட தலைமகன் தோழியொடு சொல்லாடி, யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது? “ என்றாற்கு அவள் சொல்லியது.
[சொல்லாடி-பேசி. இழைத்திருந்த-செய்து கொண்டிருந்த, திறம்-செயல் வகை.]
ஐங்குறு நூற்றின் பழைய உரையாசிரியர் இந்தப் பாடலின் உரையில் எழுதியுள்ளவை வருமாறு:
"நின்னை எதிர்ப்பட்ட அன்றே நீ வரைந்தாய் எனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது தலைவி பிறிதொன்றும் நினைத்திலள்; யாங்கள், ‘அகன்ற பொய்கைக்கு அணியாகத் தாமரையை யுடைய ஊரனாதலால், அத்தண்டுறையூரன் மனைக்கு அணியாம் வண்ணம் இவளை வரைவானாக! எந்தையும் கொடுப்பானாக! என விரும்பினோம்” என்றவாறு.
”ஈண்டுத் தலைவியை யாயென்றது, எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டு ஒழுகுகின்ற சிறப்பை நோக்கி."
இது ஐங்குறுநாற்றின் முதற்பகுதியாகிய மருதத்தில், முதல்பத்தாகிய வேட்கைப்பத்தில் உள்ள ஆறாம் பாட்டு.
இதனை இயற்றிய புலவர் ஓரம்போகியார்.
------------
3. நெல்லுடைய செல்வன்
அவர்கள் சென்று தலைவியின் தந்தையை அணுகித் தாங்கள் வந்த செய்தியை முறைப்படி எடுத்துரைத்தார்கள். தலைவனுடைய சிறப்பையும் இயல்பையும் தலைவியின் வீட்டார் அறியாதவர்கள். அவளுக்குத் தாங்கள் அறிந்த நல்ல இடமாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். அத்தனை அழகும் அறிவும் வாய்ந்த பெண்ணுக்கு ஏற்ற கணவன் கிடைப்பது அரிதா? இந்த மைந்தனைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அயலூர்க்காரன் இவன். இவன் அழகு எப்படியோ? அறிவு எத்தகையதோ? செல்வ நிலை எவ்வாறு இருக்கிறதோ? தெரியாத இடத்தில்
பெண்ணைக் கொடுத்துவிட்டு, போன இடத்தில் வாழ்க்கை பொருத்தமாக இல்லாமல் அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றால் என்ன செய்வது? எந்தக் காரியத்தையும் ஆய்ந்து ஓய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். பெண்களின் கல்யாணத்தையோ பல தடவை யோசித்துத் தெரிந்து, பெண்ணுக்கு எவ்வகையிலும் ஏற்ற இடம் என்று உறுதியாகச் தெளிந்து கொண்ட பிறகே செய்ய வேண்டும்.
கண்மணியைப் போலப் பாதுகாத்து வரும் பெண்ணை நல்ல இடத்தில் கொடுத்தோம் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பெற்றோர்களுக்கும் மனஅமைதி கிடைக்கும்; பெண்ணுக்கும் இன்பம் உண்டாகும். அப்படியின்றிப் பெண் பேச வருபவர்களுடைய பேச்சிலே மயங்கியோ வேறு காரணங்களாலோ தகாத இடத்தில் பெண்ணைக் கொடுத்துவிட்டு, அவள் துன்புறும்போது மாற்ற முடியாமல் விழிப்பதைவிடப் பேதைமைச் செயல் யாதும் இல்லை.
வந்தவர்கள் தலைவனைப் பற்றி உயர்வாகத்தான் சொன்னார்கள் . அவர்கள் தம்மைச் சார்ந்தவரைப்பற்றிச் சிறப்பாகச் சொல்வதுதானே இயல்பு? அவர்கள் சொல்வதில் எவ்வளவு பகுதி உண்மையென்று தெரிந்து கொள்ள வழி இல்லை. பெருமுயற்சியை மேற்கொண்டு அவனைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்வது அவசியமா? பெண்ணுக்கு மணாளன் கிடைக்காமல் அவர்கள் திண்டாடவில்லையே!
இத்தனை எண்ணங்கள் தலைவியின் தமர்களுக்குத் தோன்றின்."அவருக்கு நல்ல செல்வம் இருக்கிறதா? நிலவளம் உண்டா? நல்ல பிரபுவா? கல்வியறிவுள்ளவரா?” என்ற கேள்விகளைக் கேட்டுத் தங்கள் ஐயங்களைப் போக்கிக் கொள்வது நாகரிகமாகத் தோன்றவில்லை.
ஆகவே, அவர்கள் இந்த மணத்திற்கு உடம்படவில்லை. ஏதோ ஒரு விதமாகத் தங்கள் கருத்தைக் குறிப்பித்துவிட்டார்கள்.
அவர்களுக்கு,"அவன்தான் தலைவியின் அன்புக்குரியவன், ஆருயிர்க் காதலன், வழிபடுதெய்வம்” என்ற செய்தி தெரியாது. அது தெரிந்தால் மறுத்திருக்கமாட்டார்கள்.
*
தலைவன் தலைவியை வரையும் பொருட்டுப் பெரியோர்களை அனுப்பியதையும், அவன் வரைவை ஏற்றுக் கொள்ளாமல் தந்தையும் பிறரும் மறுத்ததையும் தலைவி உணர்ந்தாள். இடி விழுந்த நாகம் போலாகிவிட்டாள். ஒரு மைந்தனிடம் காதல் பூண்டு அவனையன்றி வேறு தெய்வத்தை அறியாத கற்புத் திறம் அவளிடம் இருந்தது. அந்தத் தலைவனுக்கு வாழ்க்கைப்படாவிட்டால் அவள் வாழ்வு என்னாவது? இனி வேறு ஒருவனை மணந்து வாழ்வது என்பதை அவள் மனம் கற்பனை செய்யவும் அஞ்சியது. ‘இனி நமக்கு ஒரு முடிவுதான் உண்டு. நம் காதலரோடு வாழும் வாழ்க்கை நமக்கு இல்லை. இனி இந்த உடலில் உயிரைத் தாங்குவதாற் பயன் இல்லை’ என்று அவள் உறுதி பூண்டாள்.
அந்தக் கணத்திலிருந்தே அவள் உடம்பிலே பொலிவு குறையத் தொடங்கியது. முகம் மலர்ச்சியின்றி வாடியது. கண் ஒளி இழந்தது.
தோழி தலைவியின் நிலையைக் கண்டாள். தலைவி அவ்வாறு ஏங்குவதற்குக் காரணம் அவளுக்குத் தெரிந்ததுதானே? உயிரினும் சிறந்த கற்புக்கு இழுக்கு வருமென்று தோன்றினால் உயிரை விட்டுக் கற்பைக் காத்துக் கொள்வது உத்தம மகளிரின் இலக்கணம். கற்பைக் காப்பாற்ற இன்னும் வழியிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்த பிறகுதான் இத்தகைய முடிவுக்கு வரவேண்டும். தாய் தந்தையருக்கு உண்மை தெரியாமையால் இந்த இன்னல் வந்திருக்கிறது. ஆகவே அவர்களுக்கு உண்மையைத் தெரிவிப்பது தன் கடமை என்பதைத் தோழி தெளிந்தாள். அறத்தின் வழியே வாழ்க்கை நிகழ வேண்டும். மகளிருக்குத் தலைமையான அறம் கற்பு. மக்களுக்குத் தலைமையான அறம் உண்மை. இந்த இரண்டு. அறத்தையும் சிதறவிடாமல் அரண்செய்யத் தோழி முனைந்தாள். உண்மையைத் தாய் தந்தையருக்கு எடுத்துக் கூறி, தலைவன் மணம் செய்துகொள்ள விரும்புவதற்கு உடம்படச் செய்து, தலைவியின் விழைவை நிறைவேற்றி அவள் கற்பைக் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டாள். இது அறத்தின் வழி நிற்கும் நிலை; அறத்தொடு நிற்றல்.
உண்மையை எப்படித் தெரிவிப்பது? காதலன் ஒருவன்பால் தலைவி அன்புடையவளாக இருக்கிறாள் என்று சொன்னால் போதாது. யாருடைய மணத்தைத் தாய்தந்தையர் மறுத்தார்களோ அந்தத் தலைவனே தலைவியின் காதலன் என்பதைப் புலப்படுத்தவேண்டும். அவன் தங்கள் குலத்துக்கும் செல்வ நிலைக்கும் ஏற்றவன் என்பதையும் தெரிவிக்க வேண்டும். நேர்முகமாகத் தெரிவிக்காமல் மறைமுகமாக, குறிப்பாக அறிவிக்க வேண்டும்.
தந்தைக்கும் தமையன்மாருக்கும் இந்தச் செய்தியைத் தோழி அறிவிக்க அஞ்சினாள். அது முறையும் அன்று. தலைவியைப் பெற்ற தாய்க்குச் சொல்லலாமா? நற்றாயாகிய அவளுக்குச் சொல்வதற்கும் அவள் அஞ்சினாள். தலைவியை வளர்த்த தாய்க்குச் சொல்வதுதான் பொருத்தமென்று தோன்றியது. அந்தச் செவிலித் தாயே தோழியைப் பெற்ற தாய். தலைவியை இளங்குழந்தைப் பருவத்திலிருந்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறவள் செவிலி. அவளுக்குத் துன்பம் உண்டானால் அதை முதலில் உணர்ந்து பரிகாரம் தேடுகிறவள் செவிலி. அவள் உண்மையை உணர்ந்தால்
தலைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதையே விரும்புவாள். நற்றாயோ ஒருகால் குலம், கோத்திரம், பொருள் நிலை என்று யோசனை செய்யப் புகுந்து தடுமாறுவாள். செவிலித் தாய் உண்மையை உணர்ந்து கொண்டால் எப்படியாவது நற்றாய்க்குப் பக்குவமாகச் செய்தியைச் சொல்வாள். தலைவிக்குத் தோழி எவ்வளவு நட்புரிமை பூண்டவளோ, அதே வகையில் நற்றாய்க்குச் செவிலி தோழமை உடையவள். அந்த நற்றாயும் களவுக் காதல் செய்தவள். அப்போது இந்தச் செவிலியின் துணையைப் பெற்றுத் தன் காதலனைச் சந்தித்துப் பழகியவள். ஆதலின் செவிலிக்கு நற்றாயை உடம்படும்படி செய்யவும் வகை தெரியும்.
நற்றாய் இந்த மணத்துக்கு உடம்பட்டுவிட்டால் அவள் தன் கணவரிடத்தில் எடுத்துச் சொல்லி அவரையும் உடம்படச் செய்வது மிக எளிது. தலைவியின் தந்தையார் தம் காதலியின் உரைக்கு மாறு சொல்லும் இயல்புடையவர் அல்லர்.
இப்படியெல்லாம் யோசித்த தோழி, தன் தாயும், தலைவியை வளர்த்தவளும், தலைவியின் தாய்க்குத் தோழியுமாகிய செவிலிக்கு உண்மையைக் கூறி அறத்
தொடு நிற்க முடிவு செய்தாள்,
★
செவிலித்தாய்: இந்தப் பெண் உடம்பு மெலிந்து நிற்கிறாளே! என்ன காரணம்? தெரியவில்லையே!
தோழி: நான்கூட அதைக் கவனித்தேன். இவள் எவ்வளவு அழகியாக இருந்தாள்! இவளுடைய பேரழகு குறைந்து வருகிறது போலத் தோன்றுகிறது.
செவிலி: என்ன நோய் வந்திருக்கிறதோ, தெரியவில்லையே! நன்றாக இருந்த பெண் இப்படித் திடீரென்று மெலிவை அடைவது ஏன்?
தோழி: எனக்கு இவள் அழகு மங்குவதற்குக் காரணம் தெரியும். ஆனால் அந்தக் காரணத்தால் இவள் இவ்வளவு மெலிவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.
செவிலி: என்ன காரணம் அது?
தோழி: அன்று சிலர் இங்கே பெண் கேட்க வந்தார்களே!
செவிலி: ஆம்.
தோழி : நீங்கள் அந்த மணத்துக்கு உடம்படவில்லை. அது முதலே இவள் மெலிந்து வருகிறாள்.
செவிலி : ஏன் ?
தோழி: அன்றைக்குப் பெண் பேசும்படி பெரியவர்ளை வரவிட்ட செல்வனை நினைந்து நினைந்து உருகுகிறாள்.
செவிலி: அவன் யார்?
தோழி: நல்ல ஊரை உடையவன் அவன்.
செவிலி: நல்ல ஊர் என்று எதனால் சொல்லுகிறாய்?
தோழி: சொல்லுகிறவர்கள் சொல்லும் செய்தியைக் கேட்டுத்தான் சொல்லுகிறேன்.
செவிலி: நல்ல மக்கள் வாழுகிற ஊர் என்று சொல்கிறாயா ?
தோழி: நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள், அதோடு நீர்வளம் நிலவளம் நிரம்பிய ஊர் அது. அந்த ஊருக்கு உரியவன் அந்தத் தலைவன்.
செவிலி: நிலவளம் நிரம்பியதென்று எப்படித் தெரியும்?
தோழி: அவ்வூர் வயல் வழியே நம் ஊர்க்காரர் ஒருவர் போய்க் கொண்டிருந்தாராம். வரப்பின் மேலே போனாராம். நீர்வளம் நிரம்பித் தண்ணென்று இருந்ததாம். அங்கே நண்டுகள் மண்ணைப் பறித்து வளைகளைக் குடைந்திருந்தன. அந்த மண்ணளைகள் மேலாக நோக்குவோருக்குப் புலப்படுவதில்லை. நெற்கதிரில் இன்னும் பால் வைக்க வில்லை. பூத்து அந்தப் பூக்கள் உதிர்ந்திருந்தன. அப்படி உதிர்ந்த பூ நண்டின் வளைகளை மூடியிருந்தன. சிறிது நேரம் நின்று பார்த்தால் அந்தப் பூவின் குவியலிலிருந்து நண்டுகள் மொலு மொலு வென்று வெளி வருவதைக் காணலாம். அந்த நண்டுகளின் கண்ணைப் பற்றிக்கூட அவர் சொன்னார். வேப்பம் பூ மலர்வதற்கு முன் அரும்பாக இருக்குமே, அந்த அரும்பைப் போல அவற்றின் நீண்ட கண் தோன்றுமாம். வேப்பு நனையன்ன நெடுங்கண்ணையுடைய நண்டுகளின் தண்ணிய அகத்தையுடைய மண் அளை நிறைய நெல்லின் பூ உதிரும் ஊரையுடையவன் அந்தச் செல்வன். அவர் சொன்னதைக் கேட்டபோது அந்தச் செல்வன் நெல்லால் குறைவில்லாதவன் என்று தெரிந்து கொண்டேன். அவனை நினைந்து நினைந்து இவள் தன் கவினை இழந்து வருகிறாள். இப்படியும் ஒருத்தி உண்டோ? எதற்காக இவ்வாறு இருக்கிறாளோ தெரியவில்லை.
தோழி எதற்காகத் தலைவி மெலிவடைகிறாள் என்று சொன்னாலும், மறுபடியும் சாதுரியமாக, "எதற்காக இப்படிக் கவினை இழக்கிருளோ? “ என்று கேட்கிறாள். "இது என்ன பைத்தியக்காரத்தனம் ! “ என்று தொனிக்கும்படி, "எவன்கொல் அன்னாய்?” என்கிறாள்.
அவள் கேள்வி கேட்பது போலப் பேசினாலும் செவிலித் தாய்க்கு உண்மையைத் தெரிவித்துவிட்டாள். அதன் பயன் தலைவனைத் தாய் தந்தையர் ஏற்றுக் கொண்டு தலைவியை அவனுக்கு மணம் செய்விப்பதுதான்.
தோழி கூற்று வருமாறு:
- வேப்புநனை அன்ன நெடுங்கட் கள்வன்
தண்அக மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய்?
#அன்னையே, வேம்பினது அரும்பைப் போன்ற நீண்ட கண்களையுடைய நண்டினது குளிர்ந்த உள்ளிடத்தையுடைய மண்வளை நிறையும்படி நெல்லின் பெரிய பூ உதிரும் ஊரையுடைய தலைவனுக்காக இவள் தன் பெரிய அழகை இழப்பது என்ன பேதைமை! -
நனை-அரும்பு. கள்வன்-நண்டு. அளை-வளை. இரும்பூ-பெரிய பூ; செல்வப் பெருமைக்குக் காரணமாதலின் இரும்பூ என்றாள். உறைக்கும்-உதிரும், ஊரன்-மருதநிலத் தலைவன். கவின்-அழகு. எவன்கொல்-ஏன்.#
துறை, வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(வரைவு-தலைவனது மணத்தை. எதிர் கொள்ளார்-ஏற் றுக் கொள்ளாராகி. தமர்-தலைவியின் சுற்றத்தார். அவண்-தலைவியின் வீட்டில்.)
இதன் பழைய உரைகாரர், 'அலவன் மண் அளை நிறைய நெல்லின் பூ உறைக்கும் ஊரனென்றது, தலைவன் மனையிடத்து உளவாகிய வருவாய்ச் சிறப்புக் கூறியதெனக் கொள்க’ என்று எழுதுவர்.
ஐங்குறு நூற்றில் முதலாவதாகிய மருதத்தில் மூன்ருவது பத்தாகிய கள்வன் பத்து என்னும் பகுதியில் பத்தாம் பாட்டு இது.
இதைப் பாடியவர் ஓரம்போகியார். மருதப் பகுதியில் உள்ள நூறு பாட்டையும் பாடியவர் அவரே.
-----------
4. அப்படியும் உண்டோ?
மணம் புரிவதற்குரிய பெண் ஒரு விட்டில் இருந்தால் அவளை மணம் செய்து தரவேண்டுமென்று கேட்பதற்குப் பலர் வருவது இயல்புதான். வருகிறவர்களின் தகுதியை ஆராய்ந்து பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். இதில் புதுமையோ, பிழையோ ஒன்றும் இல்லை.
ஆனால் தலைவியும் தோழியும் அவ்வாறு எண்ணவில்லை. செய்யத் தகாத காரியம் ஒன்றைச் செய்வதற்கு எல்லோரும் திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக எண்ணினார்கள் அவ்விருவரும். அதற்குக் காரணம் என்ன? இனிமேல் ஒருவன் வந்து தனக்கு அவளை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிலையை அவள் கடந்துவிட்டாள். தனக்கு என்று ஒரு காதலனை அவள் தேடிக்கொண்டு விட்டாள். இல்லை, இல்லை; அவளுக்குரிய காதலன் அவளை யாரும் அறியாமல் கண்டு அவளைத் தன் காதலியாக ஏற்றுக்கொண்டு விட்டான். அப்படிச் சொல்வதுகூடப் பொருத்தம் அன்று. அவர் களுடைய நல்ல ஊழ்வினையானது அவர்கள் இருவரையும் ஒன்றுபடுத்தி விட்டது. யாராலும் பிரிக்க வொண்ணாமல் இறுகி அமைந்த உறவு அது.
ஆகவே, அவள் இப்போது கன்னிஅல்ல; ஊராருக்குக் கன்னி போலத் தோன்றி னாலும் அவள் ஒரு காதலனுக்கு உரியவளாகி, அருந்ததியும் தொழும் கற்புத்திறம் படைத்தவளாகி விட்டாள். இனி மற்றவர்கள் அவளை மணந்துகொள்ள நினைப்பதும், அதற்குரிய முயற்சிகளைச் செய்வதும் பயனற்ற செயல்களே ஆகும்.
இந்த உண்மை தலைவிக்குத் தெரியும்; தோழிக்குத் தெரியும். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாதே! ஆகவே, அவர்கள் வருகிற நொதுமலருக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கிற நிலையைப் பார்த்தால் அவர்களுக்கு அந்த ஆடவன் மனசு பிடித்தவனாகவே இருப்பானென்று தோன்றுகிறது. அவர்கள் அந்த ஆடவனை மருமகனாக்கிக் கொள்ளவும் உடம்படலாம்.
ஆனால் வேறு ஒருவனை ஏற்றுக்கொண்டால்? அது நிகழலாமா? நிகழும்படி விடலாமா? நிகழ்ந்தால் தலைவியின் கற்பு என்னாவது? தன் ஆருயிர்க் காதலனையன்றித் தெய்வம் வேறில்லையென்றும், உயிர் வேறில்லையென் றும், அவனின்றி வாழ்வே இல்லையென்றும் இருப்பவள் தலைவி. நொதுமலர் வரையும்படி அவள் விட்டுவிடுவாளா? அவள் இருக்கட்டும்; அவளுடைய உள்ளம் போலப் பழகும் தோழி விட்டுவிடுவாளா? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா? தோழியின் துணையைப் பெற்றே அவ்விருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். அவர்களுடைய காதல் படர்வதற்குத் தோழி கொழுகொம்பாக நின்றாள். அவள் எல்லாம் அறிந்தும், நொதுமலர் வரைவதைப் பார்த்துக் கொண்டிருப்பாளா ?
‘எப்படியாவது உண்மையைச் சொல்லித் தலைவனையே மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டும் என்று அவள் தீர்மானித்தாள்.
தன் தாயும் தலைவியின் வளர்ப்புத் தாயுமாகிய செவிலியை அணுகினாள்.
தோழி: அன்னாய்!
செவிலி : என்ன அம்மா, சமாசாரம்? உன் தோழிக்குக் கல்யாணம் வரும்போல் இருக்கிறதே!
தோழி : ஆம் நானும் கேள்வியுற்றேன். ஆனால்... .
செவிலி: ஆனால் என்ன?
தோழி: நீ வாழி! நாம் எல்லோரும் நன்றாக வாழவேண்டும். நம்முடைய பெண்ணும் இன்புற்று வாழ வேண்டும்.
செவிலி: அதற்குத்தானே நாங்கள் வேண்டிய முயற்சிகளைச் செய்கிறோம்?
தோழி: நான் சொல்லும் சில வார்த்தைகளை நீ கேட்க வேண்டும்; விரும்பிக் கேட்கவேண்டும்.
செவிலி: சொல், கேட்கிறேன்.
தோழி: அன்று ஒரு வீரன் இங்கே வந்தானே; நினைவு இருக்கிறதா?
செவிலி: அவன் யார்?
தோழி: பக்கத்து ஊரின் தலைவன். கடற்கரையில் உள்ள அவன் ஊரைப் பற்றிக்கூடச் சிலர் பேசினார்களே! நீ கேட்கவில்லையா?
செவிலி: நீ தான் சொல்லேன்.
தோழி: புன்னை மரங்கள் அடர்ந்த கடற்கரை அவன் ஊரில் இருக்கிறதாம். புன்னை பூத்தால் அதன் இதழினுடே கேசரங்கள் பொன்னைப் போல ஒளி விடும். புன்னை மரங்களில் பொன்னிறம் விரியும் பூக்கள் கெழுமிய துறைவன் அவன். அவனை நான் நன்கு அறிவேன். நானும் பிற தோழியரும் அவனைத்தான் எங்கள் தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நம் தலைவியும், ‘அவனே என் காதலன்’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
செவிலி: இதுவரையில் இதை நீ சொல்லவில்லையே!
தோழி: சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. தலைவியின் விருப்பத்தை நீங்கள் அறிவீர்களென்று எண்ணினேன். எப்படியும் அவன்தான் நம் வீட்டு மாப்பிள்ளை என்று தீர்மானம் செய்திருந்தோம். அது மாத்திரம் அன்று. வேறு யாரைப் பற்றியும் நாங்கள் நினைக்கவே இல்லை. இப்போது என் காதில் வேறு செய்தி விழுந்தது.
செவிலி: என்ன செய்தி? யார் சொன்னார்கள் ?
தோழி: கடவுளினுடைய திருவருளால் அவ்வளவு சிறப்புடைய துறைவன் நம் தலைவிக்கு வாய்க்கப் போகிறான் என்று நினைத்து மகிழ்ந்தோம். அவளுடைய ஊழின் பெருமையை நினைத்து அதை வாழ்த்தினோம், பிறவிதோறும் ஒன்றுபட்டு வருவது இந்த உறவு என்று பெரியார்கள் சொல்கிறார்களே! அப்படி வந்த உறவு புன்னைத் துறைவனுக்கும் இவளுக்கும் அமையப் போகிறது என்று முடிவு கட்டியிருந்தோம். ஆனால் அந்த ஊழ்வினை வேறு ஏதாவது செய்யக் காத்திருக்கிறதோ, என்னவோ?
செவிலி: இப்படியெல்லாம் நீ பேசக் காரணம் என்ன?
தோழி. இந்த ஊரார் தங்களுக்குள் பேசிக் கொண்டது காதிலே பட்டது. நாங்களெல்லாம் புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன் இந்த வீட்டு மாப்பிள்ளை என்றும், எங்கள் தலைவன் என்றும், தலைவியின் காதலன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த ஊரோ வேறு எதையோ சொல்கிறது. இவளுடைய மணத்துக்கு வேறு யாரோ திட்டம் போடுவதாக ஊரினர் பேசிக்கொள்கிறார்கள். அன்னாய், அதைக் கேட்டது முதல் என் உள்ளம் அமைதி இழந்து தவிக்கிறது. நாங்கள் நம்பியிருந்த நல்ல ஊழாகிய பால், நாங்கள் வாழ்த்தினோமே அந்த ஊழ், அப்படியும் செய்யுமோ!
செவிலி: எப்படி?
தோழி: 'ஊழின் நற்பயனாக இவள் தன் மனமொத்த காதலனை மணந்து கொள்வாள்; தாய் தந்தையர் இந்த மணத்துக்கு உடம்படுவார்கள்: இவள் கற்புத் தவறாமல் இன்பவாழ்வு வாழ்வாள்' என்பது நாங்கள் நினைத்த எண்ணம். ஆனால் ஊழ்வினை வேறாக முடிந்தால் தலைவியின் நிலை என்னாவது? அதை நான் வாயால் சொல்ல வேண்டுமா? சொல்ல நாக் கூசுகிறதே! அப்படியும் நடக்குமா? ஊழ்வினை நடக்க விடுமா? கற்புடைய காரிகையாகிய தலைவிக்கு வழி காட்டிய அந்த ஊழ் இப்போது வேறு வழியா காட்டும்? அப்படிக் காட்டினால் அது வாழ்ந்து போகட்டும்! தலைவி என்னவோ வாழமாட்டாள்.
தோழி எவ்வளவு பொருமலோடு பேசுகிறாள் என்பதைச் செவிலி தெரிந்துகொண்டாள். உண்மையையும் உணர்ந்தாள். தலைவியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலன் இன்னானென்றும், அவனுக்கு அவளை மணம் செய்து தராவிட்டால் அவள் கற்புக்கு ஏதம் வருமென்றும், அப்படி வருவதற்கு முன் அவள் உயிருக்கு அழிவு நேருமென்றும் தெளிந்தாள். இனி என்ன செய்யவேண்டும் என்பது அவளுக்குத் தெரியாதா?
நொதுமலர் வரைவை அந்த வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவன் மணம் பேசப் பெரியோரை அனுப்பினான்; அதை ஏற்றுக்கொண்டார்கள். திருமணம் நிறைவேறியது.
இவ்வாறு நிறைவேறக் காரணமாக இருந்தது தோழி செவிலியிடம் பேசின பேச்சு.
- அன்னை, வாழிவேண்டு அன்னை, புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை
என்றும் யாமே; இவ்வூர்
பிறிதுஒன் றாகக் கூறும்;
ஆங்கும் ஆக்குமோ? வாழிய பாலே?
# அம்மா, நீ வாழ்க, (நான் சொல்வதை) விரும்பிக்கேள்; அன்னாய், புன்னையானது பொன்னிறம் உள்ளே விரிந்த மலர்களோடு பொருந்திய துறையை உடையவனை என் தலைவன் என்று சொல்வோம் நானும் தலைவியும். (ஆனால்) இந்த ஊரில் உள்ளவர்களோ வேறு ஒன்றாகச் சொல்கிறார்கள்; அப்படியும் ஊழ்வினை ஆக்குமோ? அது வாழட்டும்!
வேண்டு-விரும்புவாயாக! நான் சொல்வதைக் கேட்க விரும்புவாயாக என்றபடி, புன்னையின் இதழ் வெள்ளையாக இருக்கும்; அதனுள்ளே உள்ள கேசரங்கள் பொன்னிறம் உடையன. பூ கெழு-மலர்கள் நிரம்பிய, துறைவன்-நெய்தல் நிலத் தலைவன். என் ஐ- என் தலைவன். தனித்தனியே சொல்வதை நினைத்துச் சொல்கிறாளாகையால் எம் தலைவன் என்னாமல் என் தலைவன் என்றாள். என் தலைவன் என்ற அர்த்தத்தில் முதலில் தோன்றிய என்னை என்ற சொல் பின்னால் எங்கள் தலைவன் என்ற பொருளிலும் வழங்கலாயிற்றென்று தோன்றுகிறது. வேறு ஒருவன் இவளுக்குக் கணவனாவான் என்று சொல்ல விருப்பமில்லாதவளாய்ப் ‘பிறிது ஒன்றாக’ என்று சொன்னாள். பிறிது என்றது அயலார் வரைவைக் குறித்தது, ஆங்கும்-அப்படியும். பால்-ஊழ்வினை. #
துறை : நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
[நொதுமலர் - அயலார், வரைவின்கண்-மணத்துக்குரிய முயற்சிகளைச் செய்யும்போது.]
தான் சொல்லும் செய்தி மிகவும் முக்கியமானது, ஆதலால் அதைக் கவனித்துக் கேட்கவேண்டுமென்று, "வேண்டு" என்றாள். வீட்டிலுள்ளோர் இப்போது செய்யும் முயற்சி தவறு என்பதைப் புலப்படுத்த வருகிற தோழி ஒருகால் அதுகேட்டுச் செவிலி சினங் கொள்ளக் கூடுமாதலால் “வாழி “ என்று சொன்னாள். அன்பு அதிகமாகத் தோன்றும்படி பேசுகிறாள். ஆதலின் இரண்டு முறை அன்னை என்று அழைக்கிறாள்.
தங்கள் மனத்துக்கு விருப்பம் இல்லாத ஒன்றை விரிவாகச் சொல்லத் தோழிக்கு வாய் வரவில்லே. அதனால் "பிறிது ஒன்று" என்று அதைக் குறித்தாள். இங்கே கம்பர் வாக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.
கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்ட போது அவன் எத்தனையோ பன்னிப் பன்னிச் சொல்லியும் அவள் தன் பிடிவாதத்தை விடவில்லை. தசரதன், “பரதன் நாட்டை எடுத்துக்கொள்ளட்டும், இராமனை மாத்திரம் காட்டுக்கு அனுப்பும்படி சொல்லாதே” என்று கெஞ்சுகிறான்.
- கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உண்ணேர் ஆவி வேண்டினும்
இன்றே உனதன்றோ ?
பெண்ணே, வண்மைக் கேகயன்
மானே, பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றதை
ஒன்றும் மறஎன்றான்.
இராமனைக் காட்டுக்குப் போகச் செய்தல் என்பதைத் தன் வாயால் சொல்வதை விரும்பாத தசரதன், “மற்றதை ஒன்றும்” என்று சுட்டுகிறான். அதுபோல, “இங்கே தோழி தாம் விரும்பாத நொதுமலர் வரைவைப் பிறிதொன்று” என்று சுட்டினாள்..
இது ஐங்குறுநூற்றில் இரண்டாவது பிரிவாகிய நெய்தலில் பதினோராம் பகுதியாகிய தாய்க்குரைத்த பத்தில் பத்தாவது செய்யுள்.
நெய்தல் முழுவதையும் பாடின புலவர் அம்மூவனார்.
--------------
5. தழை விலை
தோழி: நம்முடைய வீட்டில் உள்ளார் அனைவரும் இப்போது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
தலைவி: நம்மை விடவா அவர்களுக்கு மகிழ்ச்சி அதிகம்?
தோழி: நம்முடைய மகிழ்ச்சி ஒரு வகை; அவர்களுடைய மகிழ்ச்சி ஒரு வகை. l
தலைவி : மகிழ்ச்சியிலும் அப்படி வேறுபாடு இருக்கிறதா
தோழி : ஏன் இல்லை? ஒருவன் நல்ல பசியுடன் இருக்கிறான். அவனுக்கு ஒருவர் அறுசுவை உண்டி அளிக்கிறார், அதனை அவன் உண்டு மகிழ்ச்சி அடைகிறான். அவனுக்கு உணவு அளித்த அந்த அறப் பெருஞ் செல்வரும் மகிழ்ச்சி அடைகிறார். இருவருக்கும் மகிழ்ச்சி என்பது ஒன்றுதான். ஆயினும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உண்டவன் தன் பசி தீர்ந்ததனால் மகிழ்ச்சி அடைகிறான். அவன் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து உணவளித்தவர் மகிழ்ச்சி அடைகிறார்
தலைவி : இங்கே இந்த உவமையை எப்படிப் பொருத்திக் கொள்வது?
தோழி: நான் சொல்ல வேண்டுமா?
தலைவி: உணவு உண்டவன் யாருக்கு உவமை?
தோழி: உனக்குத்தான்.
தலைவி :நான் இன்னும் உண்ணவில்லையே!
தோழி: உண்ணவில்லையா? தலைவருடன் அளவளாவி இன்பத்தைப் பெறாமலா நீ இருக்கிறாய்?
தலைவி: ( நாணத்துடன்) போடி தோழி. அதற்கும். இதற்கும் என்ன தொடர்பு? என் தாய் தந்தையர் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று சொன்னாய். அந்த மகிழ்ச்சி தனி வகையானது என்று விளக்க வந்தாய். நடுவிலே அவரை ஏன் இழுக்கிறாய்?
தோழி: அவர் இல்லாமல் உனக்கும் மகிழ்ச்சி இல்லை; அவர்களுக்கும் மகிழ்ச்சி இல்லை.
தலைவி. சரி, சரி; உன் உவமையைப் பொருத்தமாக விளக்கிச் சொல்; கேட்கிறேன்.
தோழி: நீ பசியோடிருக்கிறாய் என்று உன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும். உனக்கு நல்ல உணவை வழங்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஏற்ற உணவு கிடைத்தது. அந்த உணவு நீ விரும்பிய உணவு என்று நீ மகிழ்ச்சி அடைகிறாய். அத்தகைய உணவை உனக்கு, வழங்குவதால் நீ மகிழ்ச்சி அடைவாய் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆதலால் உன் மகிழ்ச்சியை நினைந்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தலைவி: உன் உவமை எனக்கு விளங்கியது. தலைவரை நீ உணவு என்று சொல்கிறாய். நான் உணவா? அவர் உணவா? நான்தான் உணவு. அவர் உண்பவர். நல்ல உணவை நாயுண்ணுமல் தக்கோர் உண்ணுவதுபோல இறைவன் திருவருள் எம்பிரானை எனக்குக் காதலராக்கி வைத்தது என்று சொல்.
தோழி: நீ சொல்வது வேறு. நான் உன் பெற்றோர்களைப் பற்றிச் சொல்கிறேன். உன்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள். அறிவும் அழகும் திருவும் உள்ள மைந்தனை நாடிக் கொண்டிருந்தார்கள். தலைவர் மணம் பேசச் சான்றோர்களை அனுப்பினார். உனக்குப் பரிசமாகத் தம் ஆட்சிக்குள் அடங்கிய ஒரு நாட்டையே வழங்குவதாகச் சொல்லியனுப்பினார். அதைக் கேட்டு உன் பெற்றோர்கள் மிகவும் களிப்படைந்தனர்.
தலைவி: நாட்டையா கொடுத்தார்?
தோழி: உலகத்தையே கொடுத்திருப்பார். அவர் உலகம் அனைத்துக்கும் அரசர் அல்லவே! அவருடைய ஆர்வத்துக்கு எல்லையே இல்லை.
தலைவி : அவர் எனக்கு ஏற்றவர் என்பதை நாடு கொடுத்ததனால்தான் இவர்கள் உணர்ந்தார்களோ?
தோழி: வந்த சான்றோர்களின் இன்னுரையிலேயே உன் தாய் தந்தையர் மயங்கிவிட்டார்கள்.
தலைவி: அவர்கள் என்ன சொன்னார்கள்?
தோழி: தலைவருடைய பெருமையைப் பலபடியாக எடுத்துச் சொன்னார்கள். தமிழ்ச்சுவை உணரும் திறம் மிக்கவர் அவர் என்று சொன்னார்கள் . தமிழ்ப் புலவர்கள் பலர் அவருடைய பண்புகளையும் கொடைச் சிறப்பையும் பாடியிருக்கிறார்களாம். புலவர்கள் பாடும் புகழுடையவர் அவர் என்பது அவர்கள் சொல்லத்தான் எனக்குத் தெரியும்.
தலைவி :அப்படியா! என்னிடம் ஒரு முறைகூட அதைப் பற்றி அவர் சொல்லவில்லையே!
தோழி: தம் புகழைத் தாமே கூறிக் கொள்வாரா?
தலைவி : வந்த சான்றோர்கள் புலவர் பாடல்கள் எவற்றையேனும் சொன்னார்களா?.
தோழி: சொன்னார்கள் . அவருடைய நாட்டையும். அந்த நாட்டுக் கடற்கரையையும் அங்குள்ள சோலையையும் பற்றிப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். மலரையும் தழையையும் அழகுபெறக் கோத்து ஆடையாக அணிவது அந்த நாட்டு மகளிருக்கு வழக்கம் என்பது தெரிந்த செய்தி தான். நாமும் அத்தகைய தழையாடையை அணிகிறோமே, தலைவர் பரிசமாகத் கொடுத்தாரே அந்த நாடுகூடத் தழை விலையாகத் தந்தது தானே?
தலைவி: அந்த நாட்டு மகளிர் தழையுடையை உடுத்துகிறார்கள் என்பது வியப்பான செய்தி அல்லவே?
தோழி: மலரும் தழையும் கலந்து கோத்து அணிவது வழக்கம். மலர் இல்லாவிட்டாலும் தழையையே கோத்து அணிவார்களாம்.
தலைவி : ஏன் அப்படிச் செய்யவேண்டும்?
தோழி : நெய்தல் நிலத்தின் கடற்கரையில் மணல்மேட்டில் ஞாழல் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அம்மரங்கள் மலரும் பருவம் ஒன்று உண்டு. அவை மலரோடு இருந்தால் மலரையும் தழையையும் பறித்துத் தழையாடையைப் புனைவார்கள். மலராத பருவமானால் அம்மகளிருக்கு மலர் கிடைக்காது. அப்போது எக்கரில் வளர்ந்த ஞாழலின் தழையையே விரும்பிப் பறித்துத் தழையாடை புனைவார்களாம். ஒள்ளிய தழையை விரும்பும் மகளிர் இயல்பு நம் பெருமானுடைய இயல்பைப் போலவே இருக்கிறது.
தலைவி :உனக்கு எதையும் உவமை காட்டிப் பேசும் பழக்கம் உண்டாகிவிட்டது.
தோழி : அது தவறா? கருத்து விளங்கவேண்டுமானல் உவமையைச் சொல்லி எளிதில் விளங்க வைக்கலாம். சுற்றிச் சுற்றிப் பல சொல்லி விளக்குவதை விடத் தக்க உவமை ஒன்றால் தெளிவாகக் கருத்தைப் புலப்படுத்திவிடலாம்.
தலைவி: பெரும் புலமைப் பிராட்டியாரே, தங்கள் உவமையைத் தயை செய்து முற்றும் கூறி விளக்குங்கள். (புன்னகை பூக்கிறாள்.)
தோழி: (சிரித்தபடி) எக்கர் ஞாழலின் மலர் பெறாத மகளிர், ஒண் தழையை விரும்பும் துறைவர் என்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள். மலர் இல்லாத மகளிர் அதன் தழையை விரும்பினார்கள்; அந்தத் துறையை உடைய தலைவரோ உலகத்தையே உனக்குத் தழை விலையாக வழங்கவேண்டுமென்ற ஆர்வமுடையவர்; அவரிடம் உலகம் இல்லாமையால் நாட்டை வழங்கினர்.
தலைவி: உன் உவமை நன்றாக இருக்கிறது. அவருடைய வரவை நம்மவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது உறுதிதானே ?
தோழி: என்ன அப்படிக் கேட்கிறாய்? ஊர் முழுவதும் - அதேபேச்சாக இருக்கிறது. இப்போதே திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தலைவர் உன்னை மணந்து கொள்ளப் போகும் செய்தி எங்கும் பரவிவிட்டது. எல்லோருக்கும் பெருங்களிப்பு. உன் தலைவர் தழை விலையாக நாட்டைத் தந்தாரே. அதனால் வந்த மாட்சி இது.
- எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண் தழை விலைஎன நல்கினன் நாடே.
# கடற்கரையில் உள்ள மணல் மேட்டில் ஞாழல் மரத்தில் தமக்கு வேண்டிய மலர் இல்லாமற் போன பெண்கள் வளப்பமான அதன் தழையைத் தம் ஆடைக்காக, விரும்பிக்கொள்ளும் துறையையுடைய தலைவன் உன்னுடைய தண்ணிய தழைக்கு விலையென்று நாட்டை வழங்கினான்.
எக்கர்-மணல் மேடு, ஞாழல்-கடற்கரைச் சோலையில் வளரும் ஒருவகை மரம்; பலினி என்றும் சிலர் சொல்வர். அயரும்-விரும்பும், தழை விலை-தழையாடைக்கு உரிய விலை;. மணமகளுக்குரிய பரிசம். நல்கினன்-கொடுத்தான்.#
துறை : சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.
'தலைவியின் தாய் தந்தையராகிய உறவினர் தம் மகளுக்குப் பரிசமாக விரும்பிக் கேட்டவற்றைக் கொடுத்துத் தலைவன் தன் கல்யாண முயற்சியைச் சிறப்புறும்படி செய்ததைத் தெரிந்துகொண்ட தோழி, மகிழ்ச்சியைப் பெற்ற மனத்துடன் தலைவியிடம் சொல்லியது’ என்பது இதன் பொருள்.
இதன் உரையில் பழைய உரையாசிரியர்,’ஞாழல் மலர் இல்லாத மகளிர் அதன் தழையை விரும்பும் துறைவன் என்றது உலகை வழங்க வேண்டும் உள்ளத்தன், அஃது இன்மையால் நாட்டை வழங்கினான் என்பதாம்’ என்று எழுதியுள்ளார். இதனை உள்ளுறை உவமை என்று கூறுவர். வெளிப்படையாக இல்லாமல், உள்ளே உபமேயத்தை அடக்கி வைத்திருத்தலால் அந்தப் பெயரைப் பெற்றது.
தழையென்பது மலராலும் தழையாலும் அழகாகப் புனைந்து மகளிர் உடுக்கும் உடை வகை; பழந்தமிழ் நாட்டில் சில விசேட காலங்களில், இத்தகைய, ஆடையை அலங்காரமாகப் புனைந்துகொள்வது வழக்கமென்று தெரிகிறது. இன்றும் மலையாளத்தில் மலையில் வாழும் சில சாதியினரும், அமெரிக்காவில் உள்ள சிவப்பு இந்தியரும், பலித் தீவிலுள்ள மகளிரும் ஒரு வகைத் தழையுடையை அணிவது உண்டு.
தலைவன் தலைவியைத் தோழியின் மூலம் சந்திக்கலாம் என்ற எண்ணத்தோடு அவளை அணுகும்போது தலைவியிடம் சேர்ப்பிக்கும்படி ஏதேனும் கையுறையைக் கொண்டு வருவது வழக்கம். பெரும்பாலும் அது தழையாடையாகவே இருக்கும். ஆடை அளித்துக் காதலியைப் பெறும் வழக்கம் மலைநாட்டில் இன்றும் உண்டு : ‘முண்டு கொடுத்து’ மனைவியாக்கிக் கொள்வார்கள்.
ஒரு பெண்ணை மணம் பேசும் பொருட்டுக் தக்க பெரியோர்களை விடுக்கும்போது ஏதேனும் பரிசம் போடும் வழக்கம் இக்காலத்தும் பல சாதியினரிடம் இருக்கிறது. இந்தப் பரிசத்தை, மணமகளுக்குப் பயன்படும் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி வழங்குவது வழக்கம். மணமகளின் மஞ்சட்பூச்சுக்குப் பயன்படக் கொடுத்ததாகக் கருதி "மஞ்சட் காணி" என்று நிலத்தை வழங்குவது இன்றும் வழக்கில் இருக்கிறது. அவ்வாறே தழைவிலை என்று பரிசத்தைக் குறிப்பது பழங்கால வழக்கம். முலை விலை என்றும் பழைய இலக்கிய இலக்கணங்களில் இதை வழங்குவர் புலவர். நாற்கவிராச நம்பி என்பவர் இயற்றிய அகப் பொருள் விளக்கம் என்ற நூல் உரையில் இந்த ஐங்குறுநூற்றுப் பாட்டு மேற்கோளாக வருகிறது. ‘காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல்’ என்ற துறைக்கு உதாரணமாக இது காட்டப் பெற்றுள்ளது. அங்கே சொன்ன முலைவிலையும், பாட்டில் வரும் தழை விலையும், வழக்கில் உள்ள பரிசமும் ஆகிய எல்லாம் ஒன்றுதான்.
இது நெய்தற் பிரிவில் பதினைந்தாகிய ஞாழற் பத்தில் உள்ள ஏழாவது பாட்டு, இதைப் பாடியவர் அம்மூவனார்.
-----------
6. உறக்கம் கெடுத்தவள்
படுக்கையில் படுத்தபடியே கண்ண முடினான். அவன் அகக் கண்முன் அவள் வந்து நின்ருள்; அவனுடைய ஆருயிர்க்காதலிதான். அவளை முதலில் பகற் காலங்களிலே சந்தித்தான். பிறகு இரவுக் காலங்களிலே சந்தித்தான். எவ்வளவோ இடையூறுகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அவன் அவளைச் சந்திக்கப் போவான். எந்தப் பொருளும் தெளிவாகத் தெரியாத செறிந்த இருளில் காடென்றும் மலையென்றும் பாராமல் போவான். மழைபெய்து காட்டாற்றில் வெள்ளம் ஒடும் அதில் நீந்திச் செல்வான். வழியிடையே வன விலங்குகள் வரும்; அவற்றிற்கு அஞ்சாமல் வழி கடப்பான். இத்தனை இன்னல்களுக்குமிடையே தன் காதலியை நிச்சயமாகச் சந்திக்கலாம் என்ற உறுதிதான் அவனுக்கு ஊக்கத்தை அளித்தது.
`காதலியோடு ஒருவரும் அறியாமல் காதல் செய்தான். அந்த இன்ப நினைவுகள் இப்போது அவன் உள்ளத்தில் ஓடின. இடையிலே கண்ணைத் திறந்து பார்த்தான். தானும் தனிமையுமாக இருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டான்.
படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டான். இந்த ஊரில் அவன் மன நிலையை உணர யார் இருக்கிறார்கள்? அவனுடைய ஊரானால் பாங்கனிடம் தன் னுடைய துயரைச் சொல்லிக் கொள்ளலாம். இதுவோ அயல் ஊர். இங்கே அவன் பொருள் ஈட்டுவதற்காக வந்திருக்கிறான். வந்திருக்கிற ஊரில் தன் சோர்வைக் காட்டலாமா? சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்தால்தான் போதிய பொருளை விரைவில் ஈட்ட முடியும்.
களவுக் காதலில் ஈடுபட்டிருந்த காதலனும் காதலியும் மணம் செய்துகொள்ள நினைத்தார்கள். இருவரும் நினைக்கலாமேயன்றி அதற்கு வேண்டிய முயற்சியைச் செய்ய வேண்டியவன் காதலன்தான். அவளை மணம் செய்துகொள்வதற்குமுன் அவளுக்கு ஏற்ற வகையில் பரிசம் அளிக்க வேண்டும். அவள் தகுதிக்கு ஏற்ற சிறப்புள்ள பரிசமாக அது இருக்க வேண்டும். அவன் தானே ஈட்டிய பொருளாக இருந்தால்தான் சிறப்பு. வரைந்துகொள்வதைக் காரணமாகக் கொண்டு அதற்குரிய பொருளை ஈட்டுவதற்கு ஆடவர் வேற்றுாருக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தத் தலைவனும் வந்திருக்கிறான். தானும் காதலியும் களவிலே ஒன்று படுவதைச் சிறிது நிறுத்தி, வரைந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தை இடையிலே வைத்து அதற்குரிய பொருளுக்காகப் பிரிந்து வந்திருக்கிறான்.
வரைவு இடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்து வந்துள்ள இந்தத் தலைமகன், தலைவியைக் காணாததற்கு முன்பு தனியே வாழ்ந்தான். அக் காலத்தில் அந்தத் தனிமை அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்க வில்லை; இயற்கையாக இருந்தது. ஆனால் தலைவியோடு அன்பு செய்து பழகிய பிறகு அவளைப் பிரிந்து வாழும் ஒவ்வொரு கணமும் அவனுக்குத் துன்பம் தருவதாத் இருக்கிறது.
இங்கே வந்த சில நாளாக அவளைக் காண முடியாத நிலையில், சிறைப்பட்டவனைப் போல அவன் இருக்கிறான். பொருளின்பொருட்டு அவன் தானே மேற்கொண்ட சிறை இது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதுதான் கற்றோர்க்கு அழகு. ஒருவன் தான். விரும்பிய காதலிக்கு வேண்டிய பரிசம் வழங்குவது மரபாகிவிட்டது. அதை அக்காதலி விரும்பவில்லை, அவள் விரும்புவது ஒன்றே; அவனுடைய அன்பென் னும் ஒன்றைத்தான் அவள் விரும்பினாள். ஆனால் அவளுடைய சுற்றத்தார், "என்ன பரிசம் வழங்குவீர்கள்? “ என்று கேட்பார்களே! அது வழிவழி வந்த பழக்கமாகி விட்டது. அதனால் நல்லவர் மதிக்கவும் தலைவியின் சுற்றத்தார் கொண்டாடவும் முறையறிந்து பரிசம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தால் பொருள் தேட வந்திருக்கிறான் தலைவன்.
வந்த இடத்தில் இரவெல்லாம் தனிமை அவனைத் துன்புறுத்துகிறது. பகலில் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபடுகிறான். ‘இரவே இல்லாமல் பகலாகவே இருக்கலாகாதா?’ என்று நினைக்கிறான். அது நடக்கிற செயலா? ‘பகலும் இரவும் மாறி மாறி வருவதே இயற்கை நியதி. அப்படியே இன்பமும் துன்பமும் மாறி வருவதும் இயற்கையே. பிரிவும் கூட்டமும் மாறி வருவதும் அந்த வகையில் சேர்ந்ததுதானே? சேசே! அப்படி அன்று. இப்போது இந்தப் பிரிவு ஒன்றுதான் நம்மைத் துன்புறுத்துகிறது. இப்போது பொருள் ஈட்டிக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்து அவளை மணந்து கொண்டேனானால் பிறகு என்றும் அவளோடு பிரிவின்றி வாழ்வேன்.'
விரிந்து பரந்து கிடக்கும் கடலே அவர்களுக்குச் சொந்தமென்று சொல்வதில் பிழை என்ன? நினைத்த போது நினைத்த இடத்தில் தோணியை விடலாம்: படகை விடலாம்; பாய்மரக் கப்பலை ஒட்டலாம், என்றும் வற்றாத நீரையும் பொருளையும் உடைய கடலைத் தமக்குரிய விளை நிலமாகப் பொருந்திய நெய்தல் நிலத்து மக்களின் தலைவன், அந்த மடமகளிள் தந்தை.
அந்தக் கடல் கெழு கொண்கனுக்கு ஏவலராக உள்ள பரதவர் எத்தனை சுறுசுறுப்பு உள்ளவர்கள்? கடலிலே சென்று ஆழமான நீரில் மூழ்கி முத்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள். நாற்றமுடைய மீனைப் பிடித்து அதை விற்று வயிறு வளர்க்கும் வலைஞர்கள் அல்ல. சங்குகள் நிரம்பியது கடல், அந்தச் சங்குகள் கடலின் ஆழத்தில் முத்துக்களைத் தம் அகத்தே பொதித்து வாழ்கின்றன. இந்தப் பரதவர் முத்தைத் தரும் சங்குகள் எத்தனை ஆழத்திலே இருந்தாலும் அஞ்சாமல் சலியாமல் சென்று மூழ்கி அவற்றைத் திரட்டி எடுத்து வருவார்கள். அவற்றில் உள்ள முத்துக்களை எடுத்து நகரங்களில் விற்பார்கள். முத்து வியாபாரம் எவ்வளவு சிறந்த தொழில்!
முத்தைப் பரதவர் விலை பகர்ந்து விற்பனை செய்வதற்கு உதவியாக இருப்பது கடல். அந்தக் கடல் கெழு கொண்கனுடைய அன்புக்குரிய இளைய மகள் இந்தத் தலைவனுடைய காதலி. அந்தப் பரதவர் மூழ்கி எடுத்துக் கைக்கொள்ளும் முத்து உயர்ந்த பொருள்; பொன்னோடும் மணியோடும் சேர்ந்து அணிகலன்களிலே பொலிவு பெறுவது. அந்த நிலத்துத் தலை மகனிடத்திலும் ஒரு முத்து இருக்கிறது. அது ஈடும் எடுப்பும் இல்லாத முத்து; அழகே வடிவான முத்து: எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்துக்கு ஒளியைத் தரும் முத்து; யாவரும் எளிதிலே பெறுவதற்கரிய முத்து. தலைவியாகிய முத்து.
பரதவர் முத்தை விற்கிறார்கள். தக்க விலை கொடுப்பவர்கள் அவர்கள் எடுத்த முத்தைப் பெறுகிறார்கள். கடல் கெழு கொண்கனும் தன் மகளைப் பிறருக்குத் தருபவன்தான். தக்க விலை கொடுப்பாருக்குத் தருபவன். அந்த முத்தை இப்போது இந்தக் காதலன் பெற்றுக் கொண்டுவந்து தன் இல்லத்திக்கு அணியாக்கிக் கொள்ள நினைத்திருக்கிறான்...அந்த முத்துக்கு விலையாகப் பொருள் தரவேண்டுமே! அதை ஈட்டவே இங்கு வந்திருக்கிறான், அந்த முத்தை அவன் இனி மேல் புதிதாகத் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. முன்பே அவனுக்கு உரியதாகி விட்டது. விலை கொடுத்து வீட்டுக்கு எடுத்துவர வேண்டியதுதான்.
வளையிலே (சங்கிலே) படும் (உண்டாகும்) முத்தைப் பரதவர் பகரும் (விற்கும்) கடல் கெழுகொண்கனுடைய காதல் மடமகள் இவனுக்கு எத்தனை இன்பம் தந்தாள்! இன்று அவளே துன்பத்தையும் தருகிறாள். இந்தத் தனிமைத் துன்பம் நீங்கக் கூடிய தாக இல்லை, படவேண்டியதாகவே இருக்கிறது. தனிமை இருக்கும் வரையில் அது கெடல் அருந் துயரமாகவே இருக்கும். கண் படுவதற்கு இனிதாக இருந்த படுக்கையையும் அவள் பறித்துக்கொண்டாள். படுக்கையிற் படுத்தோம், சுகமாகத் தூங்கினோம் என்பது இல்லாமல், தன்னை நினைந்து, படுக்கை முள்ளாக உறுத்த இரவெல்லாம் விழித்திருக்கும்படியாக அவள் செய்துவிட்டாள். உறக்கங் கெடுத்தவள் அவள். கண்படுதற்கு இனிய பாயலே வெளவினாள்: கெடலருங் துயரத்தை நல்கினாள்.
இப்படி எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுகிறான் தலைவன்.
- வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படல்இன் பாயல் வெளவி யோளே!
# சங்கிலே தோன்றும் முத்துக்களைப் பரதவர் விற்பதற்குக் காரணமாகிய கடலைப் பொருந்திய நெய்தல் நிலத் தலைவனுடைய அன்புக்குரிய இளைய மகள், கெடுவதற்கரிய துயரத்தைத் தந்து, இதற்கு முன் படுத்து உறங்குவதற்கு இனியதாக இருந்த பாயலைப் பறித்துக் கொண்டாள்.
வளை-சங்கு. படு-உண்டாகும். பரதவர்-வலையர். பகரும்-விற்கும்; கொள்முதல் இவ்வளவு, லாபம் இவ்வளவு என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பதால் விற்பனைக்குப் பகர்தல் என்று பெயர் வந்தது. கொண்கன்-நெய்தல் நிலத்துத் தலைமகன். காதல்-அன்பு. படல் இன் பாயல்-கண் உறங்க இனிய படுக்கை.வெளவியோள்-பறித்துக்கொண்டாள்.பாயலை வெளவியோள் என்பது உறக்கம் வராமற் செய்தவள் என்ற கருத்தை உடையது.
துறை: வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய
ஆற்றானாய்ச் சொல்லியது.
[வரைவு-மணம். இடை வைத்து-இடையிலே நிறுத்தி வைத்து.]
‘பெறுவதற்கு அரிய முத்தைப் பரதவர் விற்கும் கடல் கெழு கொண்கன் என்றது, அவர்கள் தாராதார் அல்லர், யாம் அவர்களுக்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளமாட்டாது வருந்துகின்றோம் என்பதாம்’ என்பது பழைய உரை. .
நெய்தலில் 20-ஆவது பத்தாகிய வளைப்பத்தில் ஐந்தாம் பாட்டு இது. இதைப் பாடிய புலவர் அம்மூவனார்.
----------------
7. மணிநிற மால்வரை
பழங்கள் இயற்கைத்தாய் தரும் உணவு. அப்படியே பலவகைக் கிழங்குகளும் அவர்களுடைய உணவு வகைகள் ஆகின்றன. வள்ளிக் கிழங்கென்ருல் அவர்களுக்கு உயிர். அதைச் சுட்டுத் தேனோடு கலந்து தின்றால் எத்தனை சுவையாக இருக்கும் ! கவலைக் கிழங்கு வேறு இருக்கிறது; மலைக் காட்டில் எங்கே பார்த்தாலும் கவலை கொடியோடிக் கிடக்கிறது. கொடியைப் பார்த்த அளவிலே கிழங்கு எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பார்த்துப் பார்த்துப் பழக்கமான கண்கனை உடையவர்கள் அல்லவா? கிழங்கு நன்றாகப் பருத் திருக்குமென்று தெரிந்தால் அவர்கள் உடனே அதைப் பறித்து விடுவார்கள். இதனால் அந்த இடத்தில் அங்கங்கே குண்டும் குழிகளுமாக இருக்கும். கிழங்கு எவ்வளவு ஆழமாகச் சென்றிருந்தாலும் விடாமல் அடியோடு அகழ்ந்துவிடுவார்கள். இவ்வாறு கானவர் கிழங்கு அகழ்ந்த நெடுங் குழிகள் பல அங்கே இருக்கும்.
மலைச் சாரலிலே மழை வளத்துக்குக் கேட்க, வேண்டுமா? நல்ல மழை பெய்வதனால் குறிஞ்சி நிலத்துக்குரிய மரங்களாகிய கடம்பு, சந்தனம் முதலியவை வளம் பெற்று ஓங்கியிருக்கும். வேங்கை மரங்கள் நன்றாக வளர்ந்திருக்கும். உரிய காலங்களில் அவை மலர்ந்து அழகு பெற்று விளங்கும்.
வேங்கை மரம் மலர்ந்தால் குறமகளிருக்குக் கொண்டாட்டம். அந்தப் பருவத்தில் தினையை அறுத்து விடுவார்கள். தினை விளைந்து வேங்கை மலர் மலரும் காலத்தில் குறிஞ்சி நிலத்து ஊர்களில் எல்லோரும் விழாக் கொண்டாடுவார்கள்; மணம் செய்வார்கள். சிறு பெண்கள் வேங்கை மரத்தின்மேல் ஏறி அதன் பூவைப் பறிப்பார்கள்.
வேங்கை மலர் மஞ்சளாகப் பொன்னைப்போல இருக்கும். புதியதாக வேங்கை மரங்கள் பூத்து நிற்கின்றன. அந்த மரங்களின் அடியிலே கவலைக்கொடி படர்ந்திருக்கிறது. சில இடங்களில் கவலைக் கிழங்கைக் கானவர் அகழ்ந்துவிட்டார்கள். அந்தக் கிழங்கை அகழ்ந்த இடங்களில் நெடுங்குழிகள் இருக்கின்றன. இதற்கு முன் அவை கண்ணிற் பட்டன. யாரேனும் இந்தப் பக்கமாக கடந்தால் குழிகளைத் தெரிந்து ஒதுங்கி கடக்கலாம். வேங்கை பூத்த பிறகோ வேடிக்கையான காட்சியை அங்கே காண்கிறோம்
சில பெண்கள் வேங்கை மரத்தில் ஏறிப் பூப்பறிக்க வருகிறார்கள். மரத்தை நாடி வரும்போது அதன் அடியிலெல்லாம் மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றள. சமநிலம் என்று எண்ணி அவர்கள் கடந்து வரும்போது திடுக்கென்று அவர்கள் கால் கீழே புதைகிறது. அங்கே ஒரு குழி. அந்தக் குழியின்மேல் பூ உதிர்ந்து மறைத்து விட்டது. கானவர் கிழங்கை அகழ்ந்த குழி அது; அது நிறையும்படி வேங்கையின் பொன் நிறம் மலர்ந்த புதுப் பூவானது உதிர்ந்து பரந்திருக்கிறது. அதனால் தான் அந்தப் பெண்கள் நொடித்தார்கள். உடனே கலகல என்று சிரிக்கிறார்கள்.
கிழங்கு, மலர், சிரிப்பொலி இத்தனை சிறப்போடு அமைந்த இந்த மலைச் சாரலுக்குத் தலைவன் ஒருவன் இருக்கிறான். அவனைக் காதலித்தாள் ஒரு பெண். அவள் அந்த மலையை அடுத்த வேறு ஒரு மலைச் சாரலில் வாழ்கின்றவள்.
இருவரும் களவுக் காதலில் ஈடுபட்டார்கள். சில நாட்கள் அவர்கள் கலந்து அளவளாவ முடியாமல் போய்விடும். அப்பொழுதெல்லாம் காதலிக்கு உண்டாகும் துன்பத்துக்குக் கங்கு கரையே இல்லை. தன் உள்ளத் துயரத்தைப் பிறர் கண்டால் பழி வருமே என்று அஞ்சுகிறாள். அவளுடைய துயரமோ அடக்க வொண்ணாதபடி மீதுார்ந்து நிற்கிறது. இந்த நிலையில் என்ன செய்வது?
அவளை காணா விட்டாலும் அவனோடு தொடர்புடைய எதையாவது கண்டு ஆறுதல் பெறலாம் என்று எண்ணினாள். அவன் அளித்த கையுறையைக் கண்டு துயரை மறக்கலாம். ஆனால் பகல் நேரத்தில், நாலு பேருக்கு நடுவில் அதை வைத்துக் கொண்டு பார்க்க முடியுமா? துயரத்தினால் மனம் நைந்து சாம்பினாள்.
விடிந்தது. செங்கதிரோன் தன் சோதிக் கரங்களை வீசி உலகப் பொருள்களுக்கெல்லாம் உயிரையும் எழிலையும் ஊட்டினான். ‘இன்றைப் பொழுது எப்படிப் போகப் போகிறதோ?’ என்ற கவலையோடு எழுந்தாள் தலைவி. எழுத்து வந்து வீட்டு வாசலில் நின்ருள். அவள் கண் எதிரே நோக்கியது. அதுகாறும் அவளுக்கு இல்லாத மகிழ்ச்சி ஒன்று திடீரென்று ஏற்பட்டது. கண்ணைத் துடைத்துக்கொண்டு பார்த்தாள். தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.
தன் பேதைமையை நினைத்துத்தான் அவள் சிரித்தாள். தலைவனோடு தொடர்புடைய பொருளைப் பார்த்துக்கொண்டிருந்தால் தன் துயரத்தை ஆற்றிக் கொள் ளலாமென்று நினைத்தாளே; அப்போது அவள் நினைத்துப் பார்க்காத ஒரு பெரிய பொருளை அவள் தன் எதிரே இப்போது கண்டாள். அந்தப் பொருளை யாருக்காகவும் மறைக்கவே வேண்டாம்; மறைக்கவும் முடியாது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தால் யாரும் தவறாக எண்ணமாட்டார்கள். அந்தப் பொருள் என்ன? தலைவனுடைய மலை! அதுதான் வானளவும் ஓங்கிப் பெரிதாக எதிரே தோன்றுகிறதே; அவ்வளவு பெரிய பொருளை அவள் நினைக்கவில்லை; அதைப் பார்த்துப் பார்த்துத் துயர் ஆறலாம் என்ற எண்ணம் இதுகாறும் அவளுக்கு உதிக்கவில்லை. இப்போது கதிரவன் உதயத்தில் அவ் வெண்ணம் தோன்றியது. தெளிவாகத் தெரியும் ஒன்றை வெள்ளிடை மலையென்று சொல்வார்கள். அந்த மலையையே அவள் மறந்திருந்தாள். இது பேதைமை அல்லவா? அவள் அதைத் தினந்தோறும் கண்டும் காணவில்லை. அவள் சிந்தை, அது தலைவர் மலை என்ற எண்ணத்தைக் கொள்ளவில்லை.
இப்போது அந்த எண்ணம் வந்துவிட்டது. இனி விடுவாளா? தலைவனைக் காணாமல் வருந்தும் காலங்களில் அந்த மலையைப் பார்த்து ஆறுதல் பெற்றாள். மற்றவர்களுக்கு இந்த இரகசியம் தெரிய வழியில்லை.
பகல் காலத்தில் மலையைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். பெரிய மலை அது; அந்த மால்வரை, வளம் பெற்றமையால் மணி போன்ற நீல நிறத்தோடு விளங்கியது. பகல் நேரம் குறையக் குறைய அவளுக்கு வருத்தம் ஏறும். கதிரவன் மறைந்தால் மெல்ல மெல்ல மலையும் மறையும். அதன் உருவம் மறைய மறைய அவள் கண்களில் நீர்ப்படலம் படரும். பாத்தியிலே நன்றாக நீரைத் தேக்கிக் கருவிள மலரை வளர்த்தால் அது கரு கருவென்று வளரும். அதன் தோற்றத்தை அவளுடைய கண்கள் பெற்றிருந்தன; தலைவனுடைய மணிநிற மால்லரை மறையுந்தோறும் மலர் போன்ற அவளுடைய நீண்ட கண்களில் நீர்த்துளிகள் நிறையும்,
பகல் நேரத்தில் செவ்வி நேரும்போதெல்லாம் தலைவி தன் வீட்டிற்கு எதிரே சிறிது தூரத்தில் தோன்றும் மலையைப் பார்த்துக்கொண்டே நிற்பதை மற்றவர் யாரும் கவனிக்கவில்லை; ஆனால் அவளுடைய உயிர்த் தோழி அதைக் கவனித்தாள். தலைவியின் உள்ளத்தை நன்றாக உணர்ந்தவள் அவள். மலையைக் கண்டு ஆறுதல் பெறுவதையும், அது மறைந்தால் கண் கலங்குவதையும் அவள் கூர்ந்து நோக்கினாள். தலைவியின் செயலுக்குரிய காரணமும் அவளுக்குத் தெரியும்.
தலைவி வரவர மெலிந்து வந்தாள். தலைவனைக் காணாமல் உள்ள காலம் மிகுதியாக இருப்பதுதான் அதற்குக் காரணம். இனி இப்படி இருந்தால் இவளுக்குத் தீங்கு நேரும். தலைவனுக்கும் இவளுக்கும் திருமணம் நிறைவேறும்படி ஏற்பாடு செய்யவேண்டும்' என்று தோழி தீர்மானித்தாள். தலைவியின் உடம்பு மெலிவை அறிந்த தாய்மார்கள் கவலைப்பட்டார்கள். அந்தச் சமயம் பார்த்துத் தோழி தலைவியின் செவிலித் தாய்க்கு உண்மையை உணர்த்தினாள்; அறத்தோடு நின்றாள். செவிலித் தாய் தோழியைப் பெற்ற தாய் அல்லவா? ஆதலின் தோழி தெளிவாகத் தன் கருத்தை அவளிடம் சொல்ல முடிந்தது.
செவிலித் தலைவியைப் பெற்ற தாய்க்குப் பக்குவமாக உண்மையை எடுத்துச் சொன்னாள். தம் ஊருக்கு அணிமையில் உள்ள மலைக்கு உரிய தலைவன் பால் தம் மகள் காதல் பூண்டிருக்கிறாள் என்பதை அவளுக்குப் புலப்படுத்தினாள். தோழியின் தூண்டுதலால் தலைவன் தலைவியை வரையும்பொருட்டுப் பரிசம் அனுப்பினான். தலைவியைப் பெற்றோர் அவனுடைய வரைவை ஏற்றுக் கொண்டார்கள். திருமணத்துக்கு, வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடைபெற்றன.
தலைவியின் மனம்போல் வாழ்வு அமையப் போகிறதென்பதை அறிந்த தோழி மிக்க மகிழ்ச்சியை அடைந்தாள். இந்த நிலை செவிலித் தாயினால் அமைந்தது. என்பதை அவள் அறிவாள். ஆகவே அவளை அணுகி, "அம்மா, இத்தனையும் நின்னால் வந்த நன்மை" என்று குறிப்பாகப் படும்படி சொல்கிறாள் : "அன்னையே, வாழ்வாயாக! நான் சொல்வதை விரும்பிக் கேள். இவள் எத்தனை துன்பப்பட்டாள் என்பதை நான் நன்கு அறிவேன். கானவர் கிழங்கை அகழும் நெடுங்குழி மல்கும் படியாக, வேங்கையின் பொன்மலி புதுப் பூவானது உதிர்ந்து பரவும் அந்தத் தலைவனுடைய காட்டில் அதோ பெரிய மலை ஒன்று நிற்கிறது பார். அந்த மணிநிற மால்வரை இராக் காலத்தில் மறை தொறும் இவள் மலர் நெடுங்கண் பனி ஆர்ந்தன. வரையில், அது நின் அருளால் மாறியது’ என்று சொல்லிப் பாராட்டுகிறாள். .
- அன்னாய்! வாழிவேண்டு அன்னை ! கானவர்
கிழங்குஅகழ் நெடுங்குழி மல்க, வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர்நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு இவள்
அறைமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.
# அன்னையே, நீ வாழ்வாயாக! நான் சொல்லும் இதனைக் கேட்க விரும்புவாயாக; அன்னையே, குறவர் கிழங்குகளைப் பறித்த ஆழமான குழிகள் நிறையும்படியாக வேங்கை மரத்தின் பொன்னிறம் மிக்க புதிய மலர் உதிர்ந்து இறைந்து கிடைக்கும் தலைவருடைய நாட்டில் உள்ள, நீலமணி போன்ற நிறத்தையுடைய பெரிய மலை மறையும் போதெல்லாம் இவளுடைய, பாத்தியிலே வளர்ந்த மலர் போன்ற நீண்ட கண்கள் நீர்த் துளிகள் நிரம்பின.
வேண்டு-விரும்பு. கானவர்-மலையில் வாழும் குறவர். அகழ்-பறித்த, பொன்-பொன் நிறம். வீ-மலர், தாஅம்-தாவும்: பரக்கும். மால்-பெருமை. வரை-மலை. அறை-பாத்தி. ஆர்ந்தன-நிறைந்தன. பனி-நீர்த்துளி. #
துறை : செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி அவளால் வரைவு மாட்சிமைப்பட்ட
பின்பு, “இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னில் தீர்ந்தது”
என்பது குறிப்பில் தோன்ற அவட்குச் சொல்லியது.
[வரைவு மாட்சிமைப்பட்ட பின்பு-மணத்துக்குரிய ஏற்பாடு சிறப்பாக அமைந்த பிறகு. நின்னில்- உன்னால். அவட்கு- செவிலிக்கு.]
தலைவனுடைய நாட்டை வருணிக்கும்போது, ‘கானவர் அகழ்ந்த குழி நிறைய வேங்கையின் மலர் உதிர்ந்து நிரம்பும்’ என்று தோழி சொல்கிறாள். இப்படி அந்த நிலத்தில் உள்ள பொருள்களைப் பற்றிச் சொல்லும் பகுதிகள் அப்பொருள்களின் தன்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வதோடு, தலைவன் தன்மையையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றன என்று கொள்வது புலவர் மரபு. இப்படிக் குறிப்பாக அமைந்த கருத்து, வெளிப்படையாக உள்ள வருணனைக்குள்ளே உறைவது. அந்த உட்கருத்தை உள்ளுறை யென்பர். வருணனையில் வரும் பொருள்கள் அவற்றிற்கு ஒப்பான வேறு ஒரு கருத்தை அறிவதற்குப் பயன்படுவதனால் உவமை போல இருக்கின்றன. ஆதலின் இவற்றை உள்ளுறை யுவமம் என்று புலவர் வழங்குவர். சாதாரண உவமையானால் உபமேயமும் இருக்கும். இங்கே அப்படி இல்லை. ஆனாலும் உவமை போலக் கொண்டு இவற்றிற்கு ஒப்பான வேறு பொருளை நினைக்க முடிவதால் இதை உவமப் போலி என்றும் இலக்கண நூல் கூறும். .
இந்தப் பாட்டில், ‘கானவர் கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப் பொன்மலி புதுவீத் தாஅம்’ என்பது உள்ளுறை உவமம். இதற்குத் தலைவனுடைய இயல்பை விளக்கும் உட்கருத்தாகிய உள்ளுறை ஒன்று உண்டு. கிழங்கு கானவருக்குப் பயன் பட்டது. ஆனால் தரையில் குழி அமைந்துவிட்டது. அந்தக் குழி குழியாகவே இராமல் மலர் அதை நிரப்பியது. அதுபோலத் தலைவன் பலருக்கு உபகாரம் புரிபவன். அதனால் அவனுக்குப் பொருட் குறைவு நேர்வது இயல்பே. ஆனால் அந்தக் குறைவு தோன்றாதபடி அவனுக்குப் புகழ் வந்து நிரம்பும்.
பழைய உரையாசிரியர் இவ்வாறு இந்த வருணனைக்கு உள்ளுறை விரித்துள்ளார். ‘கிழங்கு அகழ் குழி நிறைய வேங்கை மலர் பரக்கும் என்றது, கொள்வார்க்குப் பயன்பட்டுத் தமக்கு வந்த குறையைத் தம் புகழ் நிறைக்கும் பெருமை உடையார் என்பதாம்.’
இந்தப் பாட்டு மூன்றாம் பகுதியாகிய குறிஞ்சியில் 21-ஆவதாகிய அன்னாய் வாழிப் பத்தில் உள்ள எட்டாவது பாட்டு. குறிஞ்சிப் பகுதியில் உள்ள நூறு பாடல்களையும் பாடின புலவர் கபிலர்.
-------------
8. குறுங்கை இரும்புலி
தலைவிக்கோ வரவர உடம்பு மெலிகிறது. தலைவனைக் காணும் பொழுதைவிடக் காணாதபொழுது மிகுதியாக இருப்பது ஒரு காரணம். அவன் இரவிலே வரும் போது வழியிலும் வந்த இடத்திலும் ஏதேனும் இடையூறு நேர்ந்தால் என் செய்வது என்ற அச்சம் ஒரு காரணம். இனியும் தன் உள்ளத்துள்ளே மறுகும் படியாகத் தலைவியை விடக்கூடாது என்று எண்ணினாள் தோழி. அவளையும் வைத்துக்கொண்டு, மணந்து கொள்ள வேண்டுமென்று தலைவனிடம் வற்புறுத்தலாம் என்று நினைத்தாள். ஆனால் அது நயமாக இராது. ஆதலின் அவன் காதிலே படும்படி குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது என்று முடிவு கட்டினாள்.
அன்று வழக்கம்போல் தலைவன் தன் காதலியைச் சந்திக்க வந்திருக்கிறான் வந்து மறைவான ஓரிடத்திலே நின்றுகொண்டு தன் வரவைச் சில ஒலிகளால் புலப்படுத்துகிறான். இரவுக் காலம். மனைக்குப் புறம்பே குறிப்பிட்ட இடம் ஒன்றில் அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவுவார்கள். தோழி தலைவியை அழைத்துக்கொண்டு அவ்விடத்தருகே சென்று விட்டுவிட்டு வருவாள்.
இன்றும் அப்படியே தலைவியை அழைத்துச் சென்றாள். தலைவன் மறைவாக, சிறைப்புறமாக நிற்கிறான். அருகே தலைவியுடன் தோழி சென்றாள். தலைவியைத் தனியே விட்டுச் செல்வது வழக்கம். இன்று தன் கருத்தை எப்படியாவது வெளிப்படுத்தி விடவேண்டும் என்று அவள் உறுதி செய்திருக்கிறாள். ஆகையால் சிறிது நேரம் தலைவியுடன் அங்கே நின்று அவளிடம் பேசத் தொடங்கினாள். அவளோடு பேசினாலும் அந்தப் பேச்சு மறைவிலே நிற்கும் தலைவன் காதில் விழ வேண்டும் என்பதுதான் அவள் விருப்பம்.
தோழி : இந்த இரவில் காட்டு வழியில் வருவது எவ்வளவோ அச்சத்தைத் தருவது.
தலைவி : ஒவ்வொரு நாளும் நான் அதை எண்ணித்தானே மறுகுகிறேன்?
தோழி : புலிகள் உலாவும் காடுகள் பல, மலையைச் சார்ந்த இடங்களில் இருக்கின்றன.
தலைவி : அவை உயிரை வெளவும் கொடுமையை உடையன ஆயிற்றே!
தோழி : நம்முடைய தலைவருடைய காட்டில் அத்தகைய கானகங்கள் பல உண்டு.
தலைவி : புலி உலாவும் காட்டில் வேறு ஏதும் இருக்க முடியாதே!
தோழி : புலி வெளிப்படையாக உலவுமா? அது மிகவும் தந்திரமுள்ள விலங்கு.
தலைவி : பின் என்ன செய்யும்?
தோழி : அது மறைந்து நின்று தனக்கு ஏற்ற இரைக்காகக் காத்திருக்கும்.
தலைவி : அதற்கு ஏற்ற இரை எது? மனிதனா?
தோழி : புலிக்கு யானைக் குட்டியென்றால் விருப்பம் அதிகம். பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண் எதிர்ப்பட்டதைக் கொன்றுவிடும் இயல்புடையது அது; கொலையிலே வன்மையுடையது. ஒரு விலங்கைப் பிடித்துவிட்டால் தன் முன்னங் காலாலே அறைந்தே கொன்றுவிடும். பின்காலை விட அவை குறுகியவை. ஆகையால் குறுங்கை என்று சொல்வதுண்டு. உடம்பு பெரிதாகத் தான் இருக்கும். குறுங்கை இரும்புலி மரத்தின் நிழலிலே ஒளிந்திருக்கும். பலா மரங்களில் குலை குலையாகப் பழங்கள் தொங்கும். அந்த மரத்தின் வளப்பமான நிழலில்தான் புலி ஒளிந்திருக்கும். பலாக் காயும் பழமும் இலையும் அடர்ந்த அங்கே அது ஒளிந்திருப்பது கண்ணுக்குத் தெரியாது. பலாவின் பழம் தொங்கும் கொழு நிழலில் குறுங்கை இரும்புலி ஒளிந்திருப்பது எதற்காகத் தெரியுமா? அந்தப் பழத்தை அது உண்ணுமா என்ன? காட்டில் எங்கும் செடிகள் அடர்ந்த புதர்கள் உள்ளன. அடர்ந்து உயர்ந்த புதருக்குள் பெண்யானை குட்டி போட்டிருக்கும். நெடும் புதரில் கானத்து வாழும் மடப்பிடி ஈன்ற குட்டி பிறந்தபொழுதே நடக்கும். ஆனால் அது நடுங்கி நடுங்கி நடக்கும். அந்த இளங்கன்றை இரையாகக் கொள்ளவேண்டுமென்று புலிக்கு நாவில் நீர் ஊறும். பிடி இருக்கும்போது ஏதாவது செய்தால் அது பிளிறும். அது கேட்டுக் களிறு வந்துவிடும். அது புலியை எளிதில் விடாது. புலிக்கும் களிற்றுக்கும் போர் மூண்டால் எது வெல்லும் என்று சொல்லமுடியாது. களிறு தன் கொம்பினால் புலியைக் குத்திக் கொல்வதும் உண்டு. புலி அப்படிச் சண்டை போட விரும்பாமல், ஒளிந்திருந்து சமயம் பார்த்து இரையைத் தட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கும்.
தலைவி : புலி வலிமையுடைய விலங்காயிற்றே?
தோழி : இருந்தால் என்ன? உலகத்தில் ஆண்மையும் ஆற்றலும் உடையவர்கள் எவ்வளவு பேர் இப்படி மறைந்து இன்பம் தேடுகிறார்கள்?
தலைவி : மனிதருக்குள்ளும் விலங்குத் தன்மை படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான்.
தோழி : உண்மையென்று ஒரு முறை சொன்னால் போதாது. முக்காலும் உண்மை. குறுங்கையிரும் புலியாகிய கொலைத் தொழிலிற் சிறந்த ஆண் விலங்கு காட்டிலே செய்கிறதும், இந்த ஆடவர்கள் நாட்டிலே செய்கிறதும் ஒன்றாகவே இருக்கின்றன. அந்தப் புலியேற்றை (ஆண் புலி) நெடும் புதலையுடைய கானத்தில் மடப்பிடி ஈன்ற நடுங்கு நடைக்குழவியை இரையாகக் கொள்ள விரும்புகிறது. இந்த ஆடவர்கள் பெண்களின் நலத்தை வெளவ விரும்புகிறார்கள். புலி பலவின் பழம் தூங்கும் கொழு நிழலில் ஒளித்து வெளவுகிறது. இவர்களோ ஊரினர் அறியாமல் மறைவிலே
வந்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். நேர்மையான முறையில் உலகவர் அறிய மணம் புரிந்து கொள்ளலாம். அதை விட்டுவிட்டு மறைந்து மறைந்து வந்து பெண் நலத்தை வெளவுவது ஆண்மையாகுமா ?
தலைவி : புலி, யானை என்றெல்லாம் நீ சொல்வதைக் கேட்டால் என் உடம்பு நடுங்குகிறது.
தோழி: உன் உடம்பைப் பார்த்தால் என் உள்ளம் கரைகிறது. எப்போதும் கவலைப்பட்டுப் பட்டு உன் உடம்பின் பொலிவே மங்கிவிட்டது; வாட்டம் அடைந்துவிட்டது; பசலை பூத்திருக்கிறது. மரத்தில் இருக்கும் தளிர் போலத் தள
தளவென்று இருந்தாயே! இப்போது கொய்து போட்ட தளிர் வாடிக் கிடப்பது போல அழகிழந்து நிற்கிறாய். தலைவரை நினைந்து இப்படி மறுகுகிறாய். அவரோ உன் நிலையை உணர்ந்து கொண்டவராகவே தெரியவில்லை. அவர் நாட்டுக் காட்டில் உள்ள குறுங்கையிரும்புலியின் தன்மை தான் இப்போது என் நினைவுக்கு வருகிறது. குறுங்கையிரும்புலி நெடும்புதற் கானத்தில் மடப் பிடி ஈன்ற நடுங்கு நடைக் குழவியை இரையாகக் கொள்ளும் பொருட்டுப் பலவின் நெடுநிழலில் ஒளிக்கும் நாடர் பொருட்டு நீ கொய்திடு தளிரைப் போல வாடி, மேனி நிறம் வேறுபடுவது ஏன் அம்மா ?
இந்தப் பேச்சைக் கேட்ட தலைவன் தன் கடமை இன்னதென்பதை உணர்ந்து வரைவுக்கு வேண்டியவற்றை உடனே செய்ய முற்படுவானென்று தோழி நினைக்கிறாள். அன்பும் அறிவும் உடைய தலைவன் அவ்வாறு செய்வது இயல்புதானே ?
- குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
நெடும்புதற் கானத்து மடப்பிடி ஈன்ற
கடுங்குநடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய்?
# குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய புலியினது கொலையில் வல்ல ஆணானது, உயர்ந்த புதர்கள் நிறைந்த காட்டில் மென்மையான பிடி ஈன்ற, நடுங்கும் நடையையுடைய கன்றை இரையாகக் கொள்ளும்பொருட்டு, பலா மரத்தின் பழங்கள் தொங்கும் வளப்பமான நிழலில் ஒளித்திருப்பதற்கு இடமாகிய நாட்டை உடையவன் பொருட்டு, கொய்து கீழே போட்ட தளிரைப் போல வாட்டம் அடைந்து, நின்னுடைய உடம்பு பொலிவிழந்து வேறுபடுவது ஏன் அம்மா?
இரும்புலி-பெரிய புலி. கோள்-கொலை. ஏற்றை-ஆண் விலங்கு. புதல்-புதர். செடிக்குப் பெயராக இருந்து செடிகள் அடர்ந்த கூட்டத்துக்கு இப்போது வழங்குகிறது. குழவி. யானைக் கன்று. கொளீ இய-கொள்ளும் பொருட்டு. பலவின்- பலாமரத்தின். தூங்கு-தொங்கும். நாடன்-குறிஞ்சி நிலத் தலைவன், கொய்து இடு தளிரின்-பறித்துக் கீழே போட்ட தளிரைப்போல. பிறிது ஆதல் - இயற்கையான எழில் மாறி வேறுபடுதல். எவன்.ஏன். கொல்: அசை, #
துறை: வரைவு நீட, ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது.
[நீட - தாமதமாக. ஆற்றாளாகிய - சகிக்கமாட்டாத, சிறைப்புறம்-மறைவிடம், ]
புலியேற்றை பிடியீன்ற குழவியைக் கொள்ள வேண்டிக் காலம் பார்த்து மறைந்திருக்கும் நாடன் என்றது, தன் வஞ்சனையால் நின் பெண்மையை வெளவுகின்றான் என்பதாம் என்பது பழையவுரை.
இது குறிஞ்சிப் பகுதியில் 22-ஆவதாகிய அன்னாய் பத்தில் உள்ள ஆறாவது பாட்டு. பாடியவர் கபிலர்.
----------
9. பாலை குளிர்ந்தது
பொறிகளையும் வரிகளையும் உடைய வளைந்த துதிக்கை அது. அதை நீட்டிவிட்டால் தரையிலே புரளும். ஆனால் அது அவ்வாறு செய்யாமல் சுருக்கிக் கொண்டு நடக்கிறது. துதிக்கை நிலத்திலே பட்டால் வெந்துவிடுமே! அதனுடைய முரட்டு அடிக்குக் கூட இந்தப் பாலைவனத்தின் வெம்மை உறைக்கிறது. அப்படி இருக்க மிகவும் நுட்பமான நுனியை உடைய துதிக்கை அந்த வெப்பத்தைத் தாங்குமா? பொறிவரித் தடக்கை வேகுமென்று அஞ்சி அந்தத் துதிக்கையால் நிலத்தைத் தொட்டு நடக்கவில்லை. மனிதருடைய கண்ணே இங்குள்ள வெம்மையால், விரியாமல் சுருங்கிக் கூசுகிறது. யானைக்குக் கண் சிறியது. அதன் கண் கூசுவதற்குக் கேட்பானேன்? அது மெல்ல மெல்ல நடக்கிறது; ஒய்ந்து போய் நிற்கிறது. அவ்வளவு கடுமையான வெப்பம் செறிந்த சுரம் இது.
முன்பு, மரங்கள் அடர்ந்த சோலைகள் இங்கே நன்றாக வளர்ந்து வளம் பெற்றிருக்கவேண்டும். எங்கே பார்த்தாலும் கரிந்து போன மரங்களும் மொட்டை மரங்களுமாக இருக்கின்றன. வெயிலால் எல்லாம் வற்றி உலர்ந்து வாடித் தீய்ந்து போயின. மூங்கில்கள் மாத்திரம் ஓங்கி நிற்கின்றன. வெயிலால் முளிந்த (உலர்ந்த) சோலையை உடையன. இந்தப் பாலை நிலத்தில் உள்ள இடங்கள்; வேய் (மூங்கில்) உயர்ந்த சுரம் இது.
இத்தகைய பாலை நிலத்தின் வழியே அவன் வருகிறான். தன் இல்லக்கிழத்தியை விட்டுப் பிரிந்து பொருள் தேடும்பொருட்டு வருகிறான். விரைவிலே பொருளைத் தேடிப் பெற்று மீளவேண்டும் என்ற ஊக்கத்தோடு அவன் வந்துகொண்டிருக்கிறான். பொருள் கிரம்பப்பெற்று மீண்டு தன் ஊர் சென்றால் முன்னையினும் பல மடங்கு வசதிகளைப் பெற்று இன்புறலாம் என்று எண்ணினான்.
அவன் தலைவியைப் பிரிந்து வந்தாலும் அவன் நினைவு முழுவதும் அவளிடமே இருக்கிறது. அவளுடைய எழில் அவன் அகக்கண்ணினூடே நிற்கிறது. கரிய கூந்தலும் புன்முறுவல் பூத்த முகமும் அவன் உள்ளத்தைத் தூண்டில் போட்டு இழுக்கும் கண்களும் அவனுடைய நினைவிலே இப்போது நடமிடுகின்றன. அடிக்கு ஒரு தடவை அவன் இதழ்க்கடையில் புன்முறுவல் அரும்புகிறது. அவளுடைய இனிய குணங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறான். மெத்தென்று மொழி பேசி அன்பைக் காட்டித் தன் குறிப்பை அறிந்து வேண்டியவற்றைச் செய்துவைக்கும் திறத்தை எண்ணிப் பார்க்கிறான். எத்தனை வேலைகள் இருந்தாலும் சலிப்பின்றி முகங் கடுக்காமல் செய்துவிட்டுத். தன்னுடன் சிரித்துச் சிரித்துப் பேசும் அவள் பொறுமையை எண்ணி வியக்கிறான், அவன் எப்போதாவது சினங் கொண்டாலும் அதனால் வருந்தாமல் அவ னுடைய உள்ளத்துக்கு ஏற்ற வகையிலே பழகி, ‘நாம் இவளை ஏன் கோபித்துக் கொண்டோம் !' என்று அவனையே இரங்கும்படிச் செய்யும் அவளுடைய உயர்ந்த பண்பு அவன் உள்ளத்திலே இப்போது தண்மையைப் பெய்தது.
விருந்தினர்களை உபசரிப்பதில் அவளுக்கு ஈடு அவள்தான். அவள் வீட்டு விஷயங்களைத் திருத்தமாக அமைக்கும் திறனும், வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்யும் மாட்சியும் அவனுடைய இல்வாழ்விலே அறம் பொருள் இன்பம் என்ற மூன்றையும் பெருக்கி வந்தன.
மறுபடியும் அவளுடைய எழிற்கோலம் நினைவுக்கு வந்தது. அவளுடன் கொஞ்சிப் பேசிய பேச்சுக்களையும், உள்ளம் ஒன்றிப் பேசிய உரைகளையும், அளவ ளாவிக் குலாவிய இன்பத்தையும் நினைந்து நினைந்து புளகம் போர்த்தான்.
இப்படி அவன் உள்ளம் இன்பவுலகத்திலே உலவிக் கொண்டிருக்கிறது. உடம்போ பாலை நிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
ஓய்ந்த யானையும் உலர்ந்த சோலையும் உயர்ந்த மூங்கிலும் உள்ள சுரத்தில் நெடுந்துாரத்தை அவன் கடந்துவிட்டான். கால் நடந்துகொண்டே இருக்கிறது; கருத்து அவனுடைய காதலியின் பண்புகளை நினைந்து இன்புறுகிறது. ஆதலின் வெப்பம் தெரியவில்லை.
ஓரிடத்தில் யானை வெப்பம் தாங்காமல் பிளிறியது. அது காதில் விழுந்தவுடன் அவனுடைய உள்ளத்திலே ஒடிக்கொண்டிருந்த இன்பக் காட்சிகள் நின்றன. கண்ணோடு கருத்து இணைந்தது. கண் திறந்திருந்தும் முன்னேயுள்ள பொருள்களைக் காணாமல் நடந்துகொண்டிருந்தவன், இப்போது அவற்றைக் கண்டான். இதுகாறும் கண் இருந்தும் குருடனைப் போல இருந்தான். நினைவெல்லாம் உண்முகமாக இருந்தது. இப்போது நினைவு வெளிமுகப்பட்டது. கண் முழு உணர்ச்சியோடு பார்த்தது. கண்ணாற் கண்ட பொருள்களில் கருத்துச் சென்றது.
‘என்ன இது ' என்று அவனே வியப்பில் மூழ்கினான். ‘பாலை நிலத்தில் நெடுந்தூரம் வந்துவிட்டேன் போல் இருக்கிறதே! அசையும் விலங்கும் அசையா மரமும் வாடி வதங்கும் இந்த நிலத்தின் வெப்பம் எனக்கு இதுகாறும் தோன்றவில்லையே! எவ்வளவு இன்னல் தரும் வழி இது ! பொறியும் வரியும் உள்ள தடக்கை வேகும் என்று அஞ்சி நிலத்தைத் தொடாமல் செல்லுகின்றன, சிறு கண் யானைகள். சோலைகள் வெயிலால் உலர்ந்திருக்கின்றன. மூங்கில்கள் மாத்திரம் தனியே ஓங்கி நிற்கின்றன. இத்தகைய கொடுமையான இடமாக இருந்தாலும் எனக்கு இதுகாறும் இந்த வெம்மை தெரியவில்லையே! தண்ணென்று இருந்ததே! இது என்ன ஆச்சரியம்! இத்தனைக்கும் காரணம் என்ன? என் மனத்துக்குள்ளே கோயில் கொண்டிருக்கிருளே, என் காதலி, அவளுடைய நினைவுதான் அந்தத் தண்மையை உண்டாக்கியது. அவளுடைய இனிய குணங்களை நினைக்க, நினைக்க பாலை நிலத்திலே போகிறேன் என்ற நினைவே இல்லாமற் போய்விட் டது. அற்புதமான எழிலும் அதிசயமான பண்புகளும் உடையவள் என் காதலி. இத்தகையோள் பண்பே இந்த அரிய வழியில் தண்மையைச் செய்தன.
இதை எண்ண எண்ண அவனுக்கு வியப்பு மீதுர்கின்றது. உடனே, இத்தகையவளை விட்டுவர நேர்ந்ததே! என்ற வருத்தமும் உண்டாகிறது.
பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்
சிறுகண் யானை நிலம்தொடல் செல்லா,
வெயில்முளி சோலைய, வேய்உயர் சுரனே;
அன்ன ஆரிடை யானும்,
தண்மை செய்த இத் தகையோள் பண்பே.
# புள்ளிகளையும் மடிப்புக் கோடுகளையும் உடைய, வளைந்த துதிக்கையானது வேவதற்குப் பயந்து சிறிய கண்ணையுடைய யானைகள் அந்தக் கையால் நிலத்தைத் தொட மாட்டா; வெயிலால் உலர்ந்த சோலைகளை உடையன மூங்கில் உயர்ந்து நிற்கும் பாலை நிலத்துப் பகுதிகள்; அத்தகைய நடப்பதற்கு அரிய வழியிலும் குளிர்ச்சியைச் செய்தன, (நான் நினைத்து இன்புறும்) இத்தகைய தலைவியின் குணங்கள்.
பொறி-புள்ளி. வரி-கோடு. தட-வளைவு. தொடல் செல்லா-தொடமாட்டா. முளி-உலர்ந்த. வேய்-மூங்கில். சுரன்-பாலை நிலம். அன்ன-அத்தகைய. ஆர்இடையானும்-நடப்பதற்கு அரிய வழியிலும். செய்த-செய்தன. தன் மனத்திலே நினைத்திருந்ததால் அவளை இத்தகையோள் என்று சுட்டிக் கூறினான். இப்படி உள்ள சுட்டை நெஞ்சறி சுட்டு என்று சொல்வார்கள். பண்பு-குணங்கள். #
துறை : பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலை மகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது.
[இடைச்சுரத்தின்கண் – பாலை நிலத்தின் நடுவழியில் இரங்கி-வருந்தி,]
இது ஐங்குறுநூற்றின் நான்காவது பகுதியாகிய பாலையில் 33-ஆவதாகிய இடைச்சுரப்பத்தில் ஏழாவது பாட்டு, பாலைப் பகுதியைப் பாடியவர் ஓதலாங்தையார்.
-------------
10. உடைத்தெழு வெள்ளம்
அவள்பால் வஞ்சகம் இல்லை. அவளுடைய அன்பு அவ்வளவு செறிந்தது; ஆழ்ந்தது. காதலன் பிரியப் போகிறான் என்று தெரிந்தது முதல் அவள் உடம்பிலே வாட்டம் உண்டாயிற்று. உணவு இறங்கவில்லை. ஒன்றைச் செய்யப்போனால் மற்றொன்றைச் செய்கிறாள். அடிக்கடி பெருமூச்சு விடுகிறாள். அடக்கி அடக்கிப் பார்த்தாலும் கண்ணிலே நீர் ததும்புகிறது.
இந்த நிலையைத் தலைவன் கவனித்தான். அவளைப் பிரிவது பாவம் என்றே தோற்றியது. ஆயினும் பொருளின்றி இவ்வுலகமே இல்லையே! இல்வாழ்வானுக்கு அறமும் இன்பமும் நிரம்ப வேண்டுமானால் பொருள் நிறைய வேண்டுமல்லவா? அவனுக்குப் பொருளை ஈட்டும் திறம் நன்றாக இருக்கிறது. வேற்று நாட்டுக்குச் செள்று பொருளைத் தேடவேண்டும். அது வரையில் அவன் காதலி அவனைப் பிரிந்து வாழ்க்
திருப்பது அரிது.
பொருள் தேடாமல் இருந்தால் நாலு பேருக்கு நடுவில் மதிப்புடைய மகனாக வாழமுடியாது. எப்படியோ சில நாட்கள் போய்விட்டு வந்தால் பின்பு கிடைத்த பொருளைக் கொண்டு இன்பமாக வாழலாம். தலைவியினுடைய துயரத்தை மட்டும் நினைந்து, போகாமல் இருந்தால் வறுமையென்னும் புலி வாயைத் திறக்கத் தொடங்கும். அதன்முன் வேறு என்ன சிறப்பு இருந்தாலும் பயன் இல்லை.
இவ்வாறு தலைவன் பலவற்றைச் சிந்தித்தான். ஆனால் தலைவியைக் காணும்போதெல்லாம் அவள் தன் பிரிவை ஆற்றமாட்டாள் என்பதை அறிந்தான். இனிமேல்தான் அவன் பிரியப் போகிறான். அதற்குள்ளே அவள் படும் துயரம் பெரிதாக இருக்கிறது.
கடைசியில், பொருள் இன்றி வாழ இயலாதென்ற நினைவே அவனைப் பிடர் பிடித்து உந்தியது. புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
போன இடத்தில் அவன் மனம் அமைதி பெறவில்லை. தலைவியின் வருத்தத்தைக் கற்பனை செய்து பார்த்தான். தான் பிரிவதற்கு முன்பே அவள் கண்ணும் கண்ணீருமாக நின்றதைப் பார்த்தவன் அவன். 'இப்பொழுது எப்படியெல்லாம் ஏங்கித் தவிக்கிறாளோ ! உடம்பு எவ்வாறு மெலிந்து போயிற்றோ !‘ என்று எண்ணி எண்ணி மனம் கலங்கினான். பொருள் தேடாமல் திரும்பிச் செல்வது கூடாது. மிகுதியாகப்
பொருள் தேடின பிறகே திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவன் எண்ணவில்லை. போதுமான அளவுக்குத் தேடவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். இப்போதோ உடனடியாக வேண்டிய அளவுக்கு ஈட்டினால் போதும் என்று நினைந்தான். விரைவாக ஈட்டி அதைக் கைக்கொண்டு திரும்பவேண்டும் என்ற ஆவல் உண்டாகிவிட்டது.
அப்படியே விரைவில் அவன் ஓரளவு பொருளை ஈட்டினான். அதனை எடுத்துக்கொண்டு தன் ஊர் வந்தடைந்தான்.
அவன் வந்ததைக் கண்ட தோழி வியப்பில் ஆழ்ந்தாள். அவன் இன்னும் சில காலம் தங்கிப் பொருள் சேமித்துக்கொண்டு வரக்கூடும் என்று அவள் எண்ணி யிருந்தாள். அவனோ, போனேன், வந்தேன் என்று விரைவில் வந்துவிட்டான். அதற்குக் காரணம் என்ன?
'இவள்தான் போவதற்கு முன்பே வருத்தமடையத் தொடங்கிவிட்டாளே! அப்போதே இவள் கண்ணில் நீரூற்றுத் தோன்றிவிட்டது. அதை இவர் பார்க்காமலா இருந்திருப்பார்? அதன் பயனாகவே, சட்டுப் புட்டென்று தம் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிட்டார்.’
இப்படித் தோழி எண்ணினாள்.
ஊரில் உள்ளவர்கள் பேசிக் கொள்வதை அவள் கேட்டிருக்கிறாள், பல மலைகளையும் காடுகளையும் கடந்து நெடுந்தூரம் சென்று பொருள் தேடவேண்டும் என்று அவர்கள் சொல்வதுண்டு. அப்படித் தலைவனும், உயர்ந்த சிகரங்களையுடைய பல மலைகளைக் கடந்து போயிருப்பான் என்று அவள் எண்ணியிருந் தாள்.
‘எவ்வளவு தூரந்தான் இருக்கட்டுமே கோடு (கொடுமுடி) உயர் பன்மலை கடந்தாராயினும், அங்கே அவரைத் தங்கும்படி விடுமா, இவள் கண்?’
இந்த நினைவோடு பழைய காட்சி ஒன்று அவள் அகக்கண்முன் எழுந்தது. -
”ஏன் நீ அழுகிறாய்? அவர் விரைவிலே வந்து விடுவார். அவர் உன் இன்பத்தைக் கருதித்தானே பிரிந்தார்?” என்று தோழி கூறினாள். -
தலைவி அதைக் கேட்டும் கேளாதவளைப்போல அழுது கொண்டிருந்தாள்.
"நீ இப்படி அழுதால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? உன்னை இகழ்வது இருக்கட்டும். உன் தலைவரை இகழ்வார்களே! அதை நினைத்துப் பார்த்தாயா? அதற்காவது உன் அழுகையை அடக்கிக் கொள்ளக்கூடாதா ? “
தலைவி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சிறிது நேரம் சும்மா இருந்தாள், ஒரிடத்தில் உட்கார்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள் : நீடு நினைந்தாள். உடனே மீண்டும் கண்ணிலிருந்து வெள்ளம் எழுந்து விட்டது.
"இப்போதுதானே சொன்னேன்? அவர் உன் வருத்த மிகுதியை நன்ருக உணர்வார்; ஆதலின் வந்துவிடுவார். உலகில் ஆடவர் சில காலம் பிரிந்து சென்று பொருனீட்டி வருவர். அந்தக் காலத்தில் மகளிர் பின் விளையும் அறத்தையும் இன்பத்தையும் நினைந்து அந்தப் பிரிவுத் துன்பத்தை அடக்கிக்கொண்டு இருப் பார்கள். அதுதானே அறிவுடைமையாகும்? நீ பேதை போல இவ்வாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது” என்று மறுபடியும் தோழி சொன்னாள்: தலைவி தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். சிறிது நேரம் ஏதோ வேலையைக் கவனித்தாள். அப்போது கூடக் கண்ணை அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.
மறுபடியும் சிறிது இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்தாள். சிந்தனையில் மூழ்கினாள். எதையோ நினைந்து நெடுநேரம் இருந்தாள். அப்போது மீட்டும் திடீரென்று கண்ணிலிருந்து உடைப்பெடுத்துக் கொண்டதுபோல நீர் பெருகியது. உடைத்து எழுந்த பெருவெள்ளமாகக் கண்ணீர் பாய்ந்தது. அந்த வெள்ள மயமாகவே, கண்கள் ஆகிவிட்டன.
*
இந்தப் பழைய காட்சி தோழியின் அகக்கண்முன் நின்றது. ‘அப்போதே நினைத்தேன். அவர் இவள் வருத்தத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறார்; அங்கே பல நாள் தங்கமாட்டார் என்று நினைத்தேன். அது சரியாகிவிட்டது. அவர் கோடு உயர் பன்மலை இறந்தனர் (கடந்தனர்) ஆயினும் அங்கே அவர் நீண்ட நாள் இருக்க முடியுமா? இவளுடைய கண் துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கியது; அது உடைத்து எழு பெரு வெள்ளம் ஆகியது; அது அவரை அங்கே நீடும்படி விடுமா? இந்தக் கண்ணையும் கண்ணீரையும் அவர் நினைத்தால் போதுமே, மலை கடந்து கோடு கடந்து நாடு கடந்து இவள் கண் இழுத்து வந்து விடுமே! அது அங்கே அவரை நீடவிடுமோ?’ என்று தானே சொல்லிக் கொள்கிறாள்.
- கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும்,
நீட விடுமோ மற்றே, நீடுநினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடைத்துஎழு வெள்ளம் ஆகிய கண்ணே.
# (தலைவர்) சிகரங்கள் உயர்ந்திருக்கின்ற பல மலைகளைக் கடந்து சென் றாரானாலும், நெடுநேரம் நினைந்து(வருந்தி அழுது) துடைக்குந்தோறும் துடைக்குந்தோறும் (அடங்காமல்) கலக்கத்தை அடைந்து, கரையை உடைத்துப் பொங்கி வருகின்ற பெரிய வெள்ள மயமாக ஆகிய (இவள்) கண்கள் (தலைவரைப் போன இடத்தில்) நீண்ட நாட்கள் தங்கும்படி விடுமா?
கோடு-கொடுமுடி. இறந்தனர்-கடந்து சென்றனர். நீட-நீட்டிக்க; நெடுநாள் தங்க. மற்று, ஏ: அசை நிலைகள். நீடு-நெடு நேரம். உடைத்து-கரையை உடைத்து. நீரினால் மறைந்து கண்ணே தெரியாமையால் வெள்ளமாகிய கண் என்றாள். ஏ. அசை நிலை. கண் நீட விடுமோ? #
துறை: தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாக, தோழி சொல்லியது.
(ஆற்றாமை கண்டு-தன் பிரிவைப் பொறுக்காததை உணர்ந்து. வந்தனனாக-வர.)
இது பாலைப் பகுதியில் 36-ஆவதாகிய வரவுரைத்த பத்தில் எட்டாவது பாட்டு. இதை இயற்றியவர் ஓதலாந்தையார்
---------------
11. இன்ப வாழ்வு
வீட்டில் எல்லாம் நிரம்பியிருந்தன. பொருளும் பண்டங்களும் குறைவின்றி நிறைந்தன. மனத்திலும் நிறைவு இருந்தது. ஒத்த அன்புள்ள தலைவியோடு அவன் வாழ்ந்தான். இருவருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றுதான். அவர்களுடைய காதல் கனிந்தது; அந்தக் கனியின் வித்தே போல ஒர் ஆண் குழந்தை பிறந்தது.
பொருள் நிரம்பிய , அப் பொருளைக் கொண்டு, காதலனும் காதலியும் ஒன்றுபட்டு அறச்செயல்களைச் செய்தார்கள். தமக்கு வரும் மன நிறைவை எண்ணியே அவற்றைச் செய்தார்கள். விருந்தினர்களை நகைமுகங் காட்டி வரவேற்று, இன்னுரை பேசி, அறுசுவை யுண்டி அளித்துப் போற்றினார்கள். செல் விருந்தை ஓம்பி வருவிருந்தைப் பார்த்து நின்றார்கள். செல்வத்துக்கு அழகு இது தான் என்று சான்றோர் பாராட்டும் வண்ணம் உறவினர்களைத் தாங்கினார்கள்.
காதலின்பத்தைத் தேவர்களைக் காட்டிலும் சிறப்பாக நுகர்ந்தார்கள். கலையின்பத்திலும் ஈடுபட்டார்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இசையும் ஒவியமும் இணையில்லாத இன்பத்தைத் தந்தன. பிறருக்குக் கொடுப்பதில் கற்பகம் போலத் தலைவன் வாழ்ந்தான். கற்றவர்க்கு நற்றுணையாக இருந்தான். தண்டமிழ்ப் புலவர்கள் அவனை நாடி வந்தனர். அவன் செய்யும் உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அவன் புகழை இனிய தமிழ்ப் பாவிலே அமைத்தனர். அப்படியே பாணரும் கூத்தரும் அவனுடைய பாராட் டையும் பரிசையும் பெற்றார்கள். வரிசையறிந்து பரிசில் நல்கும் திறம் படைத்தவனாகத் தலைவன் விளங்கினான்.
மனத்துக்கு இசைந்த மனைவியும் அழகு நிரம்பிய புதல்வனும் பொருள் வளமும் இணைந்த அவனுக்குக் குறை ஏது? நல்லவர்கள் வாழும் ஊர் அது. அவனுடைய வாழ்வுக்கு இணையான இன்ப வாழ்வை வேறு யாரிடம் காணமுடியும்?
தன் வீட்டு முற்றத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவன் உயர்ந்த குணங்கள் நிரம்பியவன் நெடுங் தகைமை உடையவன்; அந்த நெடுந்தகை நிலா முற்றத்தில் மனநிறைவோடு இனிது இருந்தனன். தனியே இருந்தால் அத்தனை இனிமை இருக்குமா? அருகில் அவனுடைய காதல் மனைவி இருந்தாள்.
அவள் கற்பிலே தலைசிறந்து நின்றாள். ஊரினர் யாவரும் அவளைப் புகழ்ந்தார்கள். அவளுடைய அறிவையும், விருந்தினரைப் பேணும் திறமையையும், இல்லறம் கடத்தும் ஆற்றலையும், எப்போதும் புன்னகை பூத்த முகத்தோடு தோன்றும் எழிலையும், இன்னுரையையும், நாயகன் மனம் கோணாமல் நடக்கும் சிறப்பையும், அவனையே தெய்வமாக மதித்து ஒழுகும் பெருமையையும், பெருந்தன்மையையும் தனித்தனியே மக்கள் எடுத்துப் பாராட்டினார்கள். பொருளிலே குறைவு இருந்தால்கூட அது புறத்தாருக்குப் புலனாகாதபடி மறைத்து, செய்ய வேண்டியவற்றை நன்றாகச் செய்யும் திறமை அவளிடம் இருந்தது. அப்படி இருக்க, பொருள் நிரம்பிய இல்லத்தில் அவள் நடத்தும் இல்லறம் உலகத்துக்கே உதாரணமாக அமைவது வியப்பா? இல்லற வாழ்க்கையில் தன் தலைவனுக்கு எத்தகைய கவலையும் சாராமல் எல்லாவற்றையும் தானே கவனித்துக்கொண்டு, பின் வருவதை முன் அறிந்து, அதற்கு ஏற்ற பாதுகாப்பைச் செய்து கொள்ளும் அறிவு படைத்தவள் அவள். ஏதேனும் சிறு வருத்தம் தன் கணவனுக்கு வரினும் அதைத் தன் இனிய உரையாலும் உபசாரத்தாலும் போக்கிவிடும் சதுரப்பாடு அவளிடம் இருந்தது.
அவளும் அங்கே அமர்ந்திருக்கிறாள். அவள் அழகே வடிவாக அமைந்தவள். திருமகளின் அருள் நிரம்பிய அந்த இல்லத்தில் அணிவகைகளுக்குக் குறைவில்லை. அவள் உடம்பிலே பொன் இழைகள் சுடர் விடுகின்றன. அவளுடைய நெற்றியில்தான் என்ன ஒளி ! வாள் நுதலுடைய அந்த அரிவையைப் பார்த்தால், ‘திருமகள்தான் இப்படி வந்திருக்கிருளோ?’ என்று தோன்றும்.
அவள் தலை நிறையப் பூச் சூடியிருக்கிறாள். கற்புக்கு அடையாளமாக முல்லைப் பூவைச் சொல்வார்கள். நிறத்தால் கண்ணை ஏமாற்றும் மலர்களைப் போல் இல்லாமல், மணத்தால் சிறப்படைந்த பூ அது. பெரிய இதழ்களை விரித்துத் தன் மணத்தை விளம்ப ரம் செய்யும் இயல்பு அந்த முல்லைக்கு இல்லை. அடங்கிய பெண்ணைப்போல அளவிலே அடங்கி இருந்தது. ஆனால் அவளுடைய புகழைப்போல அது மணம் வீசியது. இல்லக்கிழத்தி எத்தனைதான் அடங்கியிருந்தாலும் அவள் இருப்பதனால் அந்த வீடு விளக்கம் பெறும்; அவள் புகழ் அவளை உணரும்படி செய்து விடும். முல்லை மலரும் தான் இருக்குமிடத்துக்கு அழகு தருகிறது. சுற்றிலும் மணத்தைப் பரப்புகிறது.
தன் கன்னங் கரிய கூந்தலில் வெள்ளை வெளேரென்ற முல்லை மலரை அவள் மலைந்திருந்தாள். அவர்கள் வாழும் இடம் காட்டைச் சார்ந்த முல்லை நிலத்து ஊர். அங்கே முல்லைக்கொடி மிகுதியாக உண்டு. முல்லை, மாலை நேரத்தில் மலரும். அப்போதுதான் மலர்ந்த முல்லை மலரைத் தொடுத்து அவள் தன் கூந்தலில் முடித்திருக்கிறாள். சுடர் இழையை உடைய வாணுதல் அரிவையாகிய தன் காதவி முல்லை மலைந்து கொண்டு அருகில் இருக்க, அந்த ஆணழகன், அறப் பெருஞ்செல்வன், காரணி கற்பகம், கற்றவர் நற்றுணை, பாணர் ஒக்கல், அருங்கலை விநோதன், நெடுந்தகை இனிது அமர்ந்திருக்கிறான்.
அவனுடைய வாழ்வுக்கு மங்கலமாக அவள் இருந்தாள். அதற்கு நன்கலமாக ஒரு புதல்வன் இருந்தான். அந்தக் குழந்தையைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவன் செம்மாந்து வீற்றிருக்கிறான். அவன் காதலி முடித்திருந்த முல்லையின் மணம் கம்மென்று வீசுகிறது.
காதலனும் காதலியும் அன்பு செய்து வாழும் நிலையில் இரண்டு வகை உண்டு. மணம் செய்துகொள்ளுவதற்குமுன் களவுக் காதல் செய்வது ஒன்று; மணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்வது மற்றொன்று. முன்னதாகிய களவொழுக்கத்தில் இருவருக்கும் இன்பம் ஒன்றே நாட்டமாக இருக்கும்; பிறர் அறியாதபடி ஒன்றுபடும் அவர்கள் இன்பத்திற்கு வரையறையே இல்லை.
மணம் ஆனபிறகு அவர்கள் இன்பம் நுகர்ந்தாலும் அதனோடு அறமும் செய்யத் தலைப்படுவார்கள். அதற்கு முன் அவர்கள் வெறுங் காதலர்கள். இப்போதோ கணவன் மனைவியர்; ஆதலின் இல்லறம் நடத்தும் கடமையை உடையவர்கள். இல்லறம் என்பது கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு இன்பம் புணர்வது மாத்திரம் அன்று; விருந்தினரை ஓம்பி, இரப்போருக்கு ஈந்து, உறவினரைப் பாதுகாத்து வாழ வேண்டும். இந்த நிலையில் வரவர அறச்செயல்கள் மிகுதியாகும். அதற்குரிய பொருளை ஈட்டுவான் தலைவன். அறச்செயல் மிக மிக, இன்பம் குறையும். ஆனால் அன்பு குறையாது. காதலனும் காதலியும் இடைவிடாது ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் அவர்க ளுடைய இன்பத்திலே பழைய ஊற்றம் இராது. இயற்கையின் நியதியினால் உடல் தளரத் தளர இன்பத்தில் வெறுப்புக்கூட நிழலிடும். .
அப்போது அவர்களுடைய வாழ்க்கைக்குப் புதிய இன்பம் ஊட்ட மக்கள் பிறக்கிறார்கள். இறைவன் அமைத்திருக்கும் நியதியின் உயர்வை என்னவென்று சொல்வது! தான் ஒருவனாக இருந்தவன் மனைவியை அடையும்போது அவனது நினைவும் அன்பும் அவளைப் பற்றிச் சென்று படர்கின்றன. அப்பால் குழந்தைகள் பிறந்தால் அந்த அன்பு பின்னும் விரிகிறது. தாய் தந்தையருடைய தளர்ச்சியைப் போக்க மக்கள் பிறக்கிறார்கள். அதுமட்டும் அன்று; ‘நாம் இன்பம் நன்கு நுகர்ந்தோம். உடல் தளர்ந்தோம். இனி வாழ்வில் என்ன இருக்கிறது?’ என்ற எண்ணம் வராமல், மக் களைப் பேணும் இன்பமும், அவர் அறிவுடையராதலைக் காணும் இன்பமும், அவர் நல்வாழ்வு பெறுவதைப் பார்க்கும் இன்பமும் இல்வாழ்க்கையில் அமைகின்றன. ஆகவே, புதல்வன் இல்வாழ்க்கையின் தளர்ச்சியினால் தோன்ற இருக்கும் வெறுப்பைப் போக்குபவனாக இருக்கிறான்.
இங்கே, முல்லை மலைந்து அமர்ந்திருக்கும் அரிவையோடு இனிது வீற்றிருக்கும் நெடுந்தகைக்கு வாய்த்த புதல்வனும் அத்தகையவன்தான். அவர்களுக்கு இல் வாழ்க்கையில் துனி (வெறுப்பு) வராமல் தீர்க்கும் ஆற்றலுடையவனாக இருக்கிறான். அவன் தனியாக ஒன் றும் செய்யவேண்டியதே இல்லை. பிறந்து மொழி பயில்வதே போதும்; அவர்களுக்கு இல்வாழ்க்கையில் வெறுப்புத் தலைகாட்ட இடம் இல்லை.
தன் மனைவியும் மகனும் உடன் இருக்க, நிலாவொளி படர்ந்த அந்த முற்றத்திலே தலைவன் வீற்றிருந்தபோது சில பாணர் வருகின்றனர். இசைப் பெரும் புலவர்களாகிய அவர்கள் கையில் அழகிய யாழ்கள் இருக்கின்றன. அந்த அமைதியான நேரத்தில் இசையை நுகர்வதைக் காட்டிலும் சிறந்த இன் பம் வேறு இல்லை. அவர்கள் இந்த நெடுங்தகையின் குறிப்பை அறிந்து யாழை மீட்டிப் பாடத் தொடங்குகின்றனர்.
காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றபடி இசை பாடவேண்டும். அப்போதுதான் அது சிறப்பாக இருக்கும். இப்போது இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றது. முல்லைப்பண். அதை இனிமையாகப் பாடுகின்றனர் பாணர்.
முல்லை நிலத்தில் அதற்குரிய மாலை நேரத்தில் முல்லை மணம் பரவ, முல்லையின் இசை மெல்லப் பரவுகிறது. அந்த யாழின் இசையோடு பாணரின் பாட்டும் ஒன்றுகிறது. நிலாமுற்றத்தில் தன் காதலியும் புதல்வனும் உடனிருப்ப முல்லைப் பண்ணிசையைக் கேட்டு வீற்றிருக்கும் அந்த நெடுந்தகையின் உள்ள நிறைவுக்கு உவமை எங்கே கிடைக்கும்? இந்திர போகம் என்று சொல்லலாமா? அமைதி நிரம்பிய வாழ்வு இந்திரனுக்கு ஏது?
தலைவியை வளர்த்த செவிலித்தாய் அவ்வீட்டிற்கு வந்திருந்தாள். அவளைப் பெற்ற நற்றாய் தன் தோழியாகிய செவிலித்தாயை, “அவர்கள் எப்படி வாழ்வு நடத்துகிறார்கள் என்று பார்த்துவிட்டு வா" என்று சொல்லி அனுப்பியிருந்தாள். செவிலி வந்து இரண்டு. நாட்களாயின. அவள் வீட்டிற்குள் இருக்தாள். பாணருடைய இசை அவள் காதில் விழுந்தது. அவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். தன் மகளும் அவள் காதலனும் அவர்களுடைய செல்வ மகனும் ஒருங்கே இருக்கும் காட்சியைக் கண்டாள். அவள் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. கடவுளைத் துதித்து. “இப்படியே இவர்கள் வாழ்க!" என்று வாழ்த்தினாள் .
சில நாட்களுக்குப்பின் அவள் தன் ஊரை அடைந்தாள். தலைவியைப் பெற்ற தாய்க்குத் தான் கண்ட காட்சியை மிக்க மகிழ்ச்சியோடு சொன்னாள். அந்தக் காட்சியை உள்ளபடி சொன்னால் போதாதா? அவர்கள் அன்பு கலந்த இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று தனியாக எடுத்துச் சொல்ல வேண்டுமா?
- பாணர் முல்லை பாடச் சுடர்இழை
வாள்நுதல் அரிவை முல்லை மலைய,
இனிதுஇருந் தனனே நெடுந்தகை,
துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே.
# பாணர் முல்லைப் பண்ணைப் பாட, ஒளி வீசுகின்ற அணிகலன்களையும் ஒளியையுடைய நெற்றியையுமுடைய தலைவி முல்லை மலரைச் சூடி வீற்றிருக்க, வெறுப்பு வாராமல் தீர்க்கின்ற இயல்பையுடைய புதல்வனோடு சேர்ந்து விளங்கி, இனிமையாக இருந்தான், உயர்ந்த குணங்களையுடைய தலைவன்.
பாணர்-பாட்டுப் பாடும் இசைப் புலவர்; இவர்கள் ஒரு சாதியார். 'முல்லை பாட-முல்லைப் பண்ணில் அமைந்த பாட்டைப் பாட. சுடர்-ஒளி வீசும். இழை-ஆபரணம் வாள்-ஒளி. முல்லை மலைய-முல்லை மலரை அணிய. இனிது. இனிமையாக. நெடுந்தகை-உயர்ந்த குணங்களை உடையவன்; அன்மொழித்தொகை. துனி-வெறுப்பு. கொள்கை. ஆற்றல், இயல்பு. பொலிந்து-விளங்கி.
துறை: கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய்
நற்றாய்க்குச் சொல்லியது.
['கடிமனை- தலைவனும் தலைவியும் மணம் செய்துகொண்டு வாழும் வீடு; கடி-கல்யாணம்.]
இது ஐங்குறு நூற்றில் ஐந்தாம் பகுதியாகிய முல்லையில் உள்ளது. 41-ஆவதாகிய செவிலி கூற்றுப் பத்தில் எட்டாவது பாட்டு. இதைப் பாடியவர் பேயனார்.
--------------
12. உண்ணா விரதம்
அவள் இரண்டு காட்களாக உண்ணவில்லை. எப் போதும் சோர்வாக இருக்கிறாள். தன் தாய் அன்புடன் பாலைக் கொடுத்தால் எவ்வளவு ஆர்வத்தோடு அவள் உண்ணுவாள்! அவளுடைய செவிலித்தாய்க்கு இன்ன இன்ன உணவிலே அவளுக்கு விருப்பம் உண்டு என்பது நன்றாகத் தெரியும். அந்தப் பெண்ணின் போக்கு அறிந்து, சுவை அறிந்து, இளமை முதலே அவளுக்கு ஊட்டி வருகிறவள் செவிலி. இப்போது அவள் எது கொடுத்தாலும் வேண்டாம் என்கிறாள்.
அவள் உடம்புக்கு ஏதேனும் நோய் வந்துவிட் டதா? நன்றாக ஒடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தவள் இரண்டு நாட்களாக இப்படி இருக்கிறாள். திடீரென்று நோய் வந்துவிடும்? அதுவும் உண்ணாமல் இருக்கும்படி கடுமையான நோய் வர நியாயம் ஏது?
ஒருகால் அவளுக்கு யார்மீதாவது கோபம் இருக்குமோ? அப்படியானால் அதை வெளிப்படையாகக் காட்டி விடலாமே! அவள் யாருக்குப் பயப்படவேண்டும்? இந்த வீட்டின் கண்ணாக, கண்மணியாக வளர்கிறவள் அவள். அவளிடம் எல்லோருக்கும் அன்பு இருக்கும்போது அவள் தன் குறையையோ கோபத்தையோ வெளிப்படையாகச் சொல்லலாம்.
தளதள வென்று வளர்ந்து அழகு பொங்க நிற்கும் அந்த இளமங்கை சோறு உண்ணாமல் இருக்கும்போது, மற்றவர்களுக்குச் சோறு வேண்டியிருக்குமா? அவளை வளர்த்த செவிலித்தாய்க்கு உண்டான கவலைக்கு அளவே இல்லை.
இப்படி அந்தப் பெண் இருப்பதற்குக் காரணம் என்ன என்று செவிலி ஆராய்ந்தாள். அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இந்தச் சமயத்தில் அந்தப் பெண் எப்படி இருக்கவேண்டும்? அவளுக்குத் திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. யார் யாரோ பரிசம் போட முந்துகிறார்கள். தம் கண் குளிர அவள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திப் பார்க்கவேண்டு மென்று தாய் தந்தையரும் பிறரும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அந்த அழகி பின்னும் கிளர்ச்சியுடனும் மகிழ்ச்சியோடும் இருக்கவேண்டியவள், நீர் இல்லாமல் வாடிய கொடிபோல இருக்கிறாளே !
தலைவியோடு நெருங்கிப் பழகும் தோழி ஒருத்தி உண்டு. அவள் அந்தச் செவிலியின் மகள்தான். அவளிடம் கேட்டால் உண்மை விளங்கும் என்று செவிலி நினைத்தாள். அவளிடம் கேட்கலானாள்.
செவிலி : ஏன் உன் தோழி வாட்டத்துடன் இருக்கிறாள்? அவள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய சமயம் ஆயிற்றே!
தோழி : திடீரென்று அவள் மகிழ்ச்சி அடைவதற்கு என்ன புதுமை நேர்ந்துவிட்டது?
பெரிய இடத்திலிருந்து மனிதர்கள் வருகிறார்களே!
தோழி : அதனால்தான் அவள் வாட்டத்தை அடைக்திருக்கிறாள்,
செவிலி : அவளுக்குத் திருமணம் செய்துகொள்ளும் பிராயம் ஆகவில்லையா? மணம் என்றால் ஏன் வாட்டம் அடைய வேண்டும்?
தோழி : முறைப்படி மணம் நடைபெற்றால் அவள் இன்பம் அடைவாள். முறை தவறினானல் அவளுக்கு எப்படி மகிழ்ச்சி உண்டாகும்? .
செவிலி : முறை தவறுவதா? எனன முறை தவறி விட்டது?
தோழி : பெரியவர்களுக்கு இளம் பெண்களின் உள்ளத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நினைவே இருப்பதில்லை. யாராவது அயலூரிலிருக்து வந்து பரிசம் போட்டுப் பெண்ணைக் கேட்டால் உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதுதான் முறையா? மணம் செய்து கொள்ளப்போகிறவளுக்கும் உள்ளம் உண்டு, உணர்வு உண்டு; அன்பு உண்டு; ஆர்வம் உண்டு இவற்றைப் பற்றிய சிந்தனையே பெரியவர்களுக்கு இருப்பதில்லை.
செவிலி : நீ என்ன சொல்கிறாய்? நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதுபோல அல்லவா பேசுகிறாய் ?
தோழி : காதல் என்ற நுட்பமான உணர்ச்சியைக் கடவுள் மக்களுக்கு அருளியிருக்கிறார். அதோடு கற்பு என்னும் விலை மதிக்க முடியாத மாணிக்கத்தையும் மகளிருக்கு வழங்கியிருக்கிறார். காதல் நிறைவேறிக் கற்பு வழுவாது வாழவேண்டும் பெண்கள் என்பது அவரது திருவுள்ளம். காதலும் கற்பும் ஒன்றற்கொன்று பற்றுக் கோடாக நிற்பவை. இதைத் தேர்ந்து அவை குலையாமல் செய்வதே முறையான திருமணம். அந்த முறையை அறியாதவர்கள் வாழ்வையே குலைத்து விடுகிறர்கள்.
செவிலி : மங்கலமான திருமணத்தைப் பற்றிப் பேசும்போது நீ வாழ்க்கை குலைகிறது என்று பேசுகிறாயே!
தோழி : ஆம்; நீங்கள் மங்கலமான திருமணத்தைப் பற்றித்தான் பேசினீர்கள். ஆனால் என் தோழி ஒரு பருக்கைச் சோறு தின்னவில்லை; பாலும் அருந்தவில்லை. இதுதான் உங்கள் மங்கலமான முயற்சிக்குத் தொடக்கமோ?
செவிலி: இதில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. உன் தோழி ஏன் இப்படி இருக்கிறாள்?
தோழி: அவள் ஒருவன்பால் முன்பே காதல் கொண்டிருக்கிறாள். அவனைத் திருமணம் முடித்தால் அவள் மலர்ச்சி பெறுவாள்.
செவிலி : அப்படியா? அந்தக் காதலன் யார்? .
தோழி : அவன் கடற்கரைக்குத் தலைவன்; வளம் வாய்ந்த நெய்தல் நிலத் தலைவன். உயிரினங்களிடத்தில் கருணை உடையவன். அவனுடைய பெரிய கடற்கரையில் உள்ள காக்கை, கழுத்திலே மட்டும் வெளுத்த காக்கைகூடச் சுகமாகக் காதல் செய்து அதன் பயனாகக் குஞ்சு குழந்தைகளைப் பெற்று இன்புறும்.
செவிலி : எங்குந்தான் காக்கை குஞ்சுகளை ஈனுகிறது.
தோழி: அவனுடைய கடற்கரைத் துறையிலே சில ஒடங்கள் கடலில் செல்லாமல் பழுதுபட்டுத் துறையிலே கிடக்கும். அவற்றில் காக்கைகள் தம்முடைய முட்டைகளை இட்டுப் பொரித்துக் குஞ்சுகளைப் பாதுகாக்கும்; ஒடங்களின் உள்ளே உள்ள கட்டைகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். அங்குள்ளார் அவற்றை ஒன்றும் செய்வதில்லை. அவ்வளவு கருணையுடையோர் வாழும் நாடு அந்தத் தலைவனுடைய நாடு.
செவிலி: அவன் இவளை மணம் பேச ஆள் விடுவானோ?
தோழி : நீங்கள் யார் யாரையோ வரவேற்று உபசரிப்பதைப் பார்த்து, அவன் தன்னை ஏற்றுக் கொள்வீர்களோ மாட்டீர்களோ என்ற ஐயப்பாட்டினுல் சும்மா இருக்கிறான். அவன் என் தோழியை மணம் பேசிச் சான்றேர்களை விட்டான்னால் அவள் மகிழ்ச்சி அடைவாள். அவள் நெற்றியிலே பழைய ஒளி உண்டாகும். பால் உண்ணத் தொடங்குவாள். தன் கற்புக்கு ஊறுபாடு வருவதாக இருந்தால் உண்ணாமலே உயிரை விட்டுவிடுவாள்.
செவிலி : அப்படிப் பேசக்கூடாது. அவளுக்கு இனிய காதலன் ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை இன்றுதானே நான் அறிந்தேன்? இனி அவள் காதலும் கற்பும் சிறப்புறும் முயற்சிகளைச் செய்ய முந்துவேன்.
# #
தோழி செவிலிக்குத் தலவியின் நிலையைச் சொல்வதாக அமைந்திருக்கிறது பாட்டு.
-
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி அம்பி அகமணை ஈனும்
தண்ணக் துறைவன் நல்கின்,
ஒண்ணுதல் அரிவை பால்ஆ ரும்மே.
தலைவனுடைய செல்வத்தைக் குறிப்பதற்குப் பெருங் கடற்கரை என்றாள். சிறுவெண் காக்கை என்றது, தன் உடம்பெல்லாம் கருமையும் கழுத்தில் சிறிதளவு வெண்மையும் உடைய காக்கை என்றபடி பெரிய கடற்கரையானலும் சிறிய காக்கைக்கும் பாதுகாப்பான இடம் கிடைக்கும் என்கிறாள். கடல் நீரில் செல்லவேண்டிய ஒடம் பழுதுபட்டமையினால் துறையிலே படிக் து கிடந்தது. அதில் உள்ள மக்கள் அமரும் மணையில் இப்போது காக்கை குஞ்சு பொரித்தது. நல்குதலாவது, வரையும் முயற்சியைச் செய்தல் ஒண்ணுதல் அரிவை என்றது. இப்போது அந்த நுதல் ஒளியிழக்க வாடியிருக்கிறாள் என்ற இரக்கக் குறிப்பைப் புலப்படுத்தியது. பல நாள் பட்டினி கிடந்தவர் பட்டினியை நீக்கும்பொழுது உடனே பெருவிருந்தை நுகர்ந்தால் தீங்கு நேருமாதலால் குடிப்பதற்குரியதையே உட்கொள்வர். ஆதலின் பால் ஆர்வாள் என்றாள்.
’துறைபடி அம்பி அகமணை ஈனும் என்றது, யாவர்க்கும் எவ்விடத்தும் தீங்கு வாராத் துறைவன் என அவன் சிறப்புக் கூறியவாறாயிற்று' என்று பழைய உரையாசிரியர் எழுதுவர்.
’நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசி அட நிற்புழி, ”இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்ற’து என்பது இதற்குரிய துறை. ’அயலார் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதை விரும்பி மனிதர்களை விட்ட செய்தியைத் தெரிந்துகொண்ட தலைவி, அதைப் பொறாமல், உண்பதை விட்டுப் பசி வருத்த நின்ற காலத்தில், "இவள் இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?" என்று செவிலித்தாய் கேட்கத் தலைவியின் உயிர்த்தோழி உண்மையைக் கூறிக் கற்பு நெறியோடு பொருந்திய நிலையில் நின்றது' என்பது இதன் பொருள்.
இந்தப்பாட்டு ஐங்குறுநூற்றில் அம்மூவனார் பாடிய இரண்டாவது பகுதியாகிய நெய்தலில் ஏழாவது பத்தாகிய சிறுவெண் காக்கைப் பத்தில் எட்டாவது பாட்டு.
-------------------
13. கடவுளை வழுத்தும் காதலி
அவனும் ஒரு மலைக்குத் தலைவன். அவளும் ஒரு குன்றத்தின் தலைவனுடைய அரும்பெறல் மகள்; செல்வத்திருக் குழந்தை. குன்றக் குறவன் காதல் மடமகளாகிய அவளை அவன் கண்டான்; காதல் கொண்டான். இருவர் காதலும் மறைவிலே வளர்ந்தது. அவர்களுடைய களவின்பம் நிறைவுறும்படி துணையாக நின்றாள் தோழி.
நெடுநாள் களவுக் காதல் செய்ய இயலாது என்பதை அறிந்த காதலன் தன் காதலியை உலகறிய மணம் செய்துகொண்டு தன் ஊருக்கு அழைத்துச் சென்று கணவனும் மனைவியுமாக வாழவேண்டும் என்று எண்ணினான். அப்படிச் செய்ய வேண்டுமானால் தானே ஈட்டிய பொருளைப் பரிசமாகப் போடவேண்டும். இந்த மரபை அறிந்த அவன் திருமணத்திற்கு உரிய பொருளைத் தேடச் சில காலம் வெளியூர் போயிருந்தான். இப்போது பொருளை ஈட்டி வந்திருக்கிறான். இனிக் கல்யாணத்துக்கு வேண்டிய முயற்சிகளைத் தொடங்க் வேண்டியதுதான். அவன் ஆண்மகனாதலின் ஒன்றை நினைப்பதும், நினைத்தபடியே செய்வதும் அவனுடைய இயல்புக்கு ஏற்றவையாக இருந்தன. அவ்வாறு செய்வதற்கு ஏற்ற கெஞ்சத் துணிவும் உடம்பாற்றலும் உடையவன் அவன்.
ஆனல் அந்தக் குறவனுடைய காதல் மடிமகளோ மெல்லியல். தன் காதலனுடன் பிரியாமல் ஒன்றி வாழவேண்டும் என்று ஆசைப்படத்தான் அவளுக்குத் தெரியும், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவளால் இயலாது. தன் விருப்பத்தைத் தன் தோழியிடம் அடிக்கடி சொல்லலாம்; அவளைத் தலைவனுக்குச் சொல்லச் செய்யலாம்; அதற்குமேல் அந்தப் பெண்ணால் செய்ய என்ன இருக்கிறது?
இப்போது தலைவன் அவளை வரைந்து கொள்ள - திருமணம் புரிந்து கொள்ள –த் துணிந்துவிட்டான். ஆயினும் அந்தப் பெண்ணின் பேதை மனம் உறுதி பெறவில்லை. திருமணம் நன்கு நடைபெற வேண்டுமே; அதற்கு இடையூறு ஒன்றும் நேரக் கூடாதே என்று அஞ்சினாள். தன் காதலன் முயற்சி செய்வான் என்பதில் அவளுக்கு ஐயம் இல்லை. அயலார் யாரேனும் அதற்குள் வந்து மணம் பேசினால் என் செய்வது? நம்முடைய காதலைப்பற்றி அறியாத நம் தாய் தந்தையர் அயலார் மணம் பேச வருகையில் ஏற்றுக்கொண்டு விடுவார்களோ? நம் காதலர் பரிசத்தோடு சான்றேர்களை அனுப்பும்போது இவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்துவிட்டால் என்ன செய்வது? வேறு ஏதாவது வகையில் இடையூறுகள் நேர்ந்தால் திருமணம் தடைப் படுமே!’ -இப்படி அவளுடைய உள்ளம் ஐயுற்று மறுகியது. தோழி என்ன சொல்லியும் அவளுக்குத் தெளிவு பிறக்கவில்லை. கடைசியில் தோழிக்கு ஒரு வழி தோன்றியது.
"நீ ஏன் இப்படிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் திருமணம் நிச்சயம் நன்முக நிறைவேறப் போகிறது. எந்தக் கடவுள் உங்கள் இருவரையும் கூடும்படி செய்தாரோ, எந்தக் கடவுள் உன்னையும் தலைவரையும் உள்ளம் கலந்து அன்பு கொள்ளச் செய்தாரோ, அந்தக் கடவுள் உங்களுக்குத் துணை நின்று உங்கள் திருமணத்தையும் நன்கு முடித்து வைப்பார். நீ அஞ்சாதே. அவரை வழிபட்டு வேண்டிக்கொள். அவர் திருவருளால் எல்லாம் இனிது நிறைவேறும்” என்று அந்த இளம் பெண்ணிடம் சொன்னாள்.
தலைவிக்கு அது நல்லதென்று தோன்றியது. தம்முடைய குலத்துக்கெல்லாம் தனிப்பெருங் கடவுளாகிய முருகனை வழிபடத் தீர்மானம் செய்தாள்.
முருகன் குறிஞ்சிக் கிழவன், மலையுறை கடவுள். அவனுக்கு அங்கே ஒரு கோயில் இருந்தது. மலையில் வளரும் வேங்கை மரத்தின் மலர் முருகனுக்கு விருப்பமானது. அவனே வேங்கை மரமாக நின்றவன் என்ற வரலாற்றை அவள் கேட்டிருக்கிறாள்.
ஊரில் நாலு பேர் கூடும் மரத்தடிக்கு மன்றம் என்று பெயர். அந்த மன்றத்தில் வேங்கை மரம் இருந்தது. அதில் உள்ள மலர்களைப் பறித்துக் கொண்டாள். இன்னும் முருகனுக்கு விருப்பமான தேனும் தினைமாவும் பிற உணவுகளும் எடுத்துக் கொண்டாள். தண்ணீரும் தினையரிசியும் ஏந்திச் சென்றாள்.
முருகனுடைய திருக்கோயிலில் அவற்றை வைத்துப் பூசை செய்தாள். நீரால் ஆட்டி வேங்கை மலர் தூவி நிவேதனங்களை' வைத்துப் பணிந்தாள். "முருகா, என் உள்ளம் நிறைந்த காதலரை மணம் செய்துகொள்ள உன் அருள் துணை இருக்கவேண்டும். எந்த இடையூறும் இல்லாமல் இந்தத் திருமணம் நன்கு நிறைவேற வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டாள்; உண்மை அன்போடு மனம் உருகி வழி பட்டு வேண்டினாள். அப்போது அவள் கண்ணில் நீர் துளித்தது. அன்புக்கு அடையாளம் அல்லவா அது?
அப்படி அவள் முருகனைக் கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அவள் காதலன் வந்துவிட்டான். அவன் வரவைத் தோழி அறிந்து அவனைப் போய்ச் சந்தித்தாள்.
"என்ன, திருமண முயற்சி எந்த மட்டில் இருக்கிறது?” என்று கேட்டாள்.
"வேண்டிய பொருளை ஈட்டிவிட்டேன். இனி நல்ல காள் பார்த்துப் பெரியவர்களை உங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்” என்றான் அவன்.
"நீ ஆடவனுக்கேற்ற வகையில் முயற்சி செய்கிறாய். உன் காதலியோ தனக்கு ஏற்ற முறையில் முயற்சி செய்கிறாள்.”
"அவள் என்ன முய ற்சி செய்ய முடியும்”
"என்ன அப்படிக் கேட்கிறாய்? மனிதர்கள் செய்யும் முயற்சிகள் அவர்கள் எண்ணிய-படியே நடைபெறுவதில்லை. இறைவன் திருவருள் துணையிருந்தால்தான் அவை நிறைவேறும். அவன் அருளே தோன்றாத் துணையாக இருந்து எல்லாவற்றையும் நடத்தி வைக்கிறது. அந்த அருளைப் பெறும் முயற்சியிலே அவள் ஈடுபட்டிருக்கிறாள். நீ பொருள் ஈட்டினாய், அவள் அருள் ஈட்டுகிறாள்.”
“அவள் என்ன செய்கிறாள் இப்போது?”
"அதோ பார் அவள் என்ன செய்கிறாள் என்பது தெரியும்.”
தலைவன் பார்த்தான். முருகனுக்குப் பூசை செய்த ஈரக்கையோடு, அவனுக்கு இனிய நிவேதனங்களை வழங்கிய கையோடு, அவள் அக்கடவுளை வழுத்திக் கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அன்பின் அடையாளமாகிய நீர் முகிழ்த்ததைக் கண்டான். அவனுக்கும் உள்ளம் உருகியது. “நம்மைத் தன் அழகினால் வருத்திய இந்தப் பெண், குன்றக்குறவன் காதல் மடமகள், என்ன நல்ல காரியம் செய்கிறாள்! காந்தட் பூவின் மணம் வீசும் இந்த மடமங்கை, மலையுறை கடவுளாகிய தம் குல முதல்வனே வேங்கைமலர் கொண்டு பூசித்திருக்கிறாள்; இனிய நிவேதனங்களை வழங்கி அந்த ஈரக்கையோடே கும்பிட்டு நிற்கிறாள். ஆம்: நமக்குப் பொருள் கிடைத்தது பெரிதன்று; இறைவன் அருளும் கிடைத்துவிட்டது. அதை இவள் ஈட்டுகிறாள் என்பது உண்மை” என்று சொல்லிக் கொண்டான். அவனும் அங்கிருந்தபடியே முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டான்.
தலைவன் தனக்குள்ளே சொல்லிக் கொள்வது போல அமைந்திருக்கிறது பாட்டு,
-
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலைஉறை கடவுட் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த ஈர்தறுங் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே!
காதல் - இங்கே, தந்தை மகளிடத்தில் வைத்த அன்பு; மடமகள் - இளைய பெண். மன்றம் - ஊர்க்குப் பொதுவான மரத்தடி, வேங்கையில் நிரம்ப மலர் இருப்பினும் இவள் சிலவற்றையே பறித்தாள்; ஆதலின், 'மலர் சில கொண்டு’ என்றார். கடவுளாகிய குலமுதல்; முதல் - தலைவன்; இங்கே தெய்வம். கடவுளுடைய திருக்கோயிலிடத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்; குலம் - கோயில்; முதல் - இடம். வழுத்தி - வழிபாடு செய்து, துதித்து என்றும் சொல்லலாம் தேம்பலி இனிய நிவேதனம். நீரும் உணவும் எடுத்ததனால் ஈரமாகியும் மலரை எடுத்ததனால் மணமுடையதாகியும் இருத்தலின், "ஈர்நறுங் கையள்’ என்றான்.
காந்தள் மலரின் மணம் போல நல்ல மகளிருடைய மேனியின் மணம் இருக்கும். வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே” (குறுங். 84) என்று வருவது காண்க. கலிழ்ந்த - அழுத; இந்த அழுகை அன்பின் மெய்ப்பாடு, எம்-எம்மை, அணங்கியோள் - வருத்தினவள்; முதற் காட்சியன்றுஅவள் அழகினுல் கட்டுண்டு, இவள் நமக்கு உரியளாவாளோ என்று வருந்தியதை எண்ணியபடி.
மடமகள், அணங்கியோள், கொண்டு, வழுத்தி, கையள், நாறிக் கலிழ்ந்த கண்ணள் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.]
"அன்று, "இவள் இன்பம் நமக்குக் கிடைக்குமா? என்று ஏங்கினோம்; இன்று எங்கள் மணம் இனிது நிறைவேற வேண்டுமென்று இவளே இவ்வாறு கடவுளை வேண்டுகிறாளே! என்று எண்ணி வியந்தான்.
"வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம், தோழி காட்டக் கண்டு, இனி அது கடுக முடியும் என உவந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது" என்பது, இதன் துறை,
[ வரைய - மணம் செய்ய வரைவு = மணம். வருந்துகின்ற வருத்தம் - செய்கின்ற முயற்சி. கடுக - விரைவில்.]
இப்பாட்டு, குறிஞ்சிப் பகுதியில் குன்றக்குறவன் பத்து (26) என்பதில் ஒன்பதாவது பாட்டாக அமைந்தது. குறிஞ்சிப் பகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தையும்பாடியவர் கபிலர்.
------------------
14. கண் புதைத்த காரிகை
ஆணழனாகிய அவன் ஓரிடத்தில் அமர்ந்திருந்தான். மலைச்சாரலில் வாழ்பவன் ஆதலின் தன் முன் பரந்து விரிந்திருக்கும் இயற்கை எழிலில் மனம் புதைத்துக் கண்ணை நாட்டியிருக்கான்,
இப்போது அவனுடைய காதலி அங்கே வந்தாள். அவள் அவனுக்குப் பின்புறமாக வந்தாள். ஆதலின் அவள் வருகையை அவன் தெரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு ஒரு நினைவு தோன்றியது. ஒரு சோதனை செய்ய எண்ணினாள். அவன் நெஞ்சில் தன்னை நினைத் திருக்கிறானே, வேறு பிறருக்கும் அவன் உள்ளத்தில் இடம் உண்டோ என்று தேர்ந்து தெளிய இப்போது நல்ல செவ்வி வாய்த்திருக்கிறதென்று அவள் கருதினாள். ஆகவே, மெல்ல மெல்ல அடிவைத்து அவன் பின்புறம் சென்றாள். அவனருகே சென்றவுடன் பின் இருந்த படியே அவன் கண்களைக் தன் இரண்டு கைகளாலும் பொத்தினாள்.
அவன், "யார்?" என்று கேட்கவில்லை. வேறு ஒரு பெண்ணின் பெயரையும் கூறவில்லை. உண்மையில் அவன் நெஞ்கில் இந்தக் காதலிதான் வீற்றிருந்தாள். ஆகவே, உண்மை வெளிபட்டது. அவன் பேசிய பேச்சிலிருந்து அது வெளியாயிற்று.
அவன் தன் காதலியைக் கண்கொண்டு பார்க்க வில்லை; அவள்தான் அவன் கண்களை மூடிவிட்டாளே! அவளுடைய குரலால் அவளைத் தெரிந்துகொள்ளலாம் என்றாலோ -அவள் பேசவும் இல்லை. ஆயினும் அவன் தன் கண்ணைப் புதைத்தவள் இன்னாள் என்று கண்டு கொண்டான். எப்படிக் கண்டுகொண்டான் என்பதை அவனே சொல்கிறான்.
அவள் அவன் கண்களேக் கைகளால் பொத்தினாள். அந்தக் கைகளின் பரிசத்தை அவன் நன்றாக உணர்ந்தவன். மலைச்சாரலில் கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் காந்தள் பூவைப்போல அழகு பெற்ற கையை உடையவள் அவள். அக்கைகளின் மென்மையும் தண்மையும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கையாலல்லவா அவள் கண்ணேப் பொத்தினாள்? அவை இன்னாருடைய கைகள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். மலைச்சாரலில் மணம் வீசும் காந்தளின் குலையான பூங்கொத்தைப் போன்ற அழகிய கை அது என்பதை முன்பும் அறிவான்; இதோ இப்போதும் மணத்தாலும், மென்மையாலும், தண்மையாலும், உணர்ந்தான்.
-
சிலம்புகமழ் காந்தள் நறுங்சூலை அன்ன
நலம்பெறு கையின்னன் கண்புதைத் தோயே!
எடுத்த எடுப்பில், ”காந்த்ள் குலையைப் போன்ற கைகளால் என் கண்ணை மூடியவளே!’ என்ற அழைக்கிறான், ’உன்னை உன் மெளனம் மறைத்தாலும், என் கண்ணை உன் கை மறைத்தாலும், அக்கைகள் தம்மை மறைக்க முடியுமா என்று அவன் கேளாமல் கேட்கிறான்.
அந்தக் கையின் இயல்பை அவன் எப்படி உணர்ந்தான்? அதை மற்றவர்களிடத்தில் சொல்வதானால் நாணம் உண்டாகும். அவளிடம் சொல்ல நாணம் ஏது? அவளும் அவனும் அறிந்த இரகசியந்தானே அது? பிறருக்கு அது இரகசியம்; அவர்களுக்கு அப்படி அன்று. ஆகவே, அந்தக் கையின் இயல்பைத் தான் உணர்வதற்கு வாய்ப்புப் பெற்றவன் என்ற உரிமையை அவன் அடுத்தபடி எடுத்துச் சொல்கிறன்.
'இப்போது வந்து கண்ணை மூடுகிறவளே! நி எனக்குப் புதியவள் அல்லவே? ஒரு நாளா, இரண்டு நாளா? பல நாள் நாம் பிரிவில்லாமல் பழகுகிறோமே! தனித்து உறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. என் படுக்கையில் இனிய துணையாக இருப்பவள் நீ என்பதை மறந்துவிட்டாயா? பருத்த தோளும் மயிலைப் போன்ற மென்மையும் உடைய மடந்தையே! உன் தோளையும் உடம்பு மென்மையையும் பல நாள் உணர்ந்த எனக்கு இந்தக்கை அடையாளம் தெரியாதா? காட்சியால்தான் உணரவேண்டும் என்பதற்கு நான் அகன்று நின்று பழகுபவனா? உடன் இயைந்து ஒன்றி உன்னைப் பாயலில் இன்துணையாகப் பெற்று வாழும் உரிமையை உடைய எனக்கு உன் கை தெரியாதா?’ - இப்படியெல்லாம் அவன் கூற நினைக்கிறான், அத்தனை எண்ணங்களையும் செறித்து வைத்துச் சுருக்கமாகப் பேசுகிறான்.
பாயல் இன்துணை ஆகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை!
[ படுக்கையில் இனிய துணை ஆன பருத்த தோள்களையும் மயிலின் மென்மைச் சிறப்பையும் உடைய பெண்ணே! பாடல் -படுக்கை, பனைத்தோள் - பருத்த தோள் மூங்கிலப் போன்ற தோள் என்றும் சொல்லலாம். தோகை மாட்சிய - மயிலின் மாண்பைப் பெற்ற மயிலின் மாட்சியாவது இங்கே மென்மை. ]
"உன் கையின் நறுமணமும் இயல்பும் எனக்குக் தெரியும். அவை மட்டுமா? உன் தோளையும் உடம்பு மென்மையையும் யான் அறிவேன்; அப்படியிருக்க, நீ மறைக்க முடியுமா?’ என்ற கருத்துப்படப் பேசியவன் அதோடு நிற்கவில்லை. அவளுடைய கைகளைக் கண்டு கொண்டது ஒரு வகையில் அவன் அவளோடு பழகியதைக் காட்டுவதுதான். ஆனல் அது உடம்பும்: உடம்பும் பழகியதனால் உணரக் கிடப்பது என்று சொல்லி விடலாம் அல்லவா? அவர்களுடைய காதல் வெறும் உடலளவிலே நிலவுவதா? அன்று, அன்று. அவர்கள் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய காதலர்கள். உள்ளங்கள் இரண்டாக இருந்தாலும் அவற்றின் தட்டு ஒன்றுதான். ஒட்டும் இரண்டுள்ளத்தின் தட்டிலே அவன் அவள் உள்ளத்தையே உணர்ந்து கொண்டான்.
"என் நெஞ்சில் யார் இருக்கிறார் என்ப்தைச் சோதிக்கத்தானே இந்தத் தந்திரத்தைச் செய்தாய்? எனக்கு அது தெரியுமே! என் நெஞ்சில் வேறு யாருக்கு இடம் பெறும் உரிமை இருக்கிறது? அங்கே தனித் தலைவியாக வீற்றிருப்பவள் நீ ஒருத்திதான். வேறு யாருக்கும் சிறிதும் இடம் இல்லை' என்ற எண்ணங்களை அவன் சுருக்கமாக வெளியிடுகிறான்.
-
நீஅலது உளரோஎன்
நெஞ்சு அமர்ந்தோரே?
ஒரு பேச்சு இல்லாமல், க ண்முன் காணாமல், கையின் பரிசமும் கருத்தின் எழுச்சியும் காரணமாக அவன் அவளை உணர்ந்து கொண்டான். அவன் கூற்ருக இருக்கிறது பாட்டு.
-
சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை அன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே!
பாயல் இன்துணை ஆகிய பணத்தோள்
தோகை மாட்சிய மடந்தை !
நீஅலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே?
இந்தப் பாட்டுக்கு, களவுக்காதல் நிகழும் காலத்தில் தலைவன் சொன்னதாகத் துறை வகுத்திருக்கிறார்கள். "பகற்குறியிடம் புக்க தலைமகன் தலைவி பின்னாக மறைய வந்து கண்புதைத்துழிச் சொல்லியது" என்பது அக்துறை. பகற்குறியிடம் என்பது, தலைவன் தலைவியை யாரும் அறியாமல் பகலில் சந்திப்பதற்குக் குறித்த இடம்’ என்று பொருள். களவுக்காலத்தில் இத்தகைய ஐயப்பாடு தலைவிக்கு நிகழ்வதாகச் சொல்வது சிறப்பன்று.
நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில், ‘யாம் மறைந்து சென்று இவனைக் கண்ணைப் புதைத்தால், தலைநின்று ஒழுகும் பரத்தையர் பெயர் கூறுவன் என்று உட்கொண்டு தலைவி சென்று கண் புதைத்துழித் தலைவனுக்குக் கூற்று நிகழும்’ என்று கூறி, இதனை மேற்கோள் காட்டினார் (தொல். கற்பு. 5. உரை.) ஆதலின் களவுக் காலத்தைவிடக் கற்புக் காலத்தில் நிகழ்வதாகக் கொள்வதே பொருத்தமென்று தோன்றுகிறது.
பழைய உரையாசிரியர், ‘ நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே என்றது. நீயல்லது பிறர் உளராயினன்றே, நான் கூறுவது அறிதல் வேண்டிக் கண் புதைக்கற் பாலது? அஃது இல்லாத வழிப் புதைப்பது என்னென்று அவள் பேதைமை உணர்த்தியதாம்; என்று இப்பாட்டின் கருத்தை உரைத்திருக்கிறார்,
காதலி தன் காதலன் கண்ணப் பொத்தி அவனுடைய அன்பைச் சோதிப்பதாகப் பிற கவிஞர்களும் பிற்காலத்தில் பாடியிருக்கிறார்கள்.
கம்பராமாயணத்தில் ஓர் ஊடற்காட்சி வருகிறது. மலரைக் கொய்து கொண்டிருந்த தன் காதலன் கண்ணைக் காதலி வந்து பொத்தியதும் அவன், 'ஆர்' என்று கேட்டுவிட்டான். ’நம்மையன்றிவேறு யார் இவர் கண்ணைப் பொத்துவார்? இவர் நம்மை உணர வில்லையே! இவர் கண்ணைப் பொத்துவார் வேறு சிலரும் உண்டோ? என்று எண்ணி அவள் வருந்தினளாம். அதைக் கம்பர் பூக்கொய் படலத்தில் பாடுகிறார்.
-
"போர்என்ன வீங்கும் பொருப்பன்ன திரள்கொன் திண்தோள்
மாரன் அனையான் மலர்கொய்திருந் தானை வந்தோர்
காரன்ன கூந்தற் குயில் அன்னவள் கண்பு தைப்ப
ஆர்என்ன லோடும் அழலென்ன வெய்து யிர்த்தாள்."
இந்தத் தலைவன் நுட்ப உணர்ச்சி அற்றவன் போலும்! சோதனையில் தோல்வியுற்று விட்டான். முன்னே நாம் கண்ட காதலன் அதில் வெற்றி பெற்றான்.
பாரதியார், காதலி செய்த சோதனையில் வெற்றி பெற்ற காதலன் ஒருவனைக் காட்டுகிறார். பாட்டுக்கு விள்ககமே தேவை இல்லை.
-
“மாலப் பொழுதிலொரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலக் கடலினைஅவ் வானவளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன் ;
நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி
நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலuலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயம் தன்னிலிருந்தேன்."
"ஆங்கப் பொழுதில்என்றன் பின்புறத்திலே
ஆள்வந்து நின்றெனது கண்புதைக்கவே
பாங்கினிற் கைஇரண்டும் தீண்டி அறிந்தேன்;
பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்;
ஓங்கி வரும்உவகை ஊற்றில் அறிந்தேன்
ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில்அறிந்தேன்.
“வாங்கி விடடிகையை, ஏடிகண்ணம்மா!
மாயம் எவரிடத்தில்?’ என்றுமொழிந்தேன்."
இந்தக் காதலன் கையைத் தீண்டி அறிந்தான்; பட்டுடையின் மணத்தால் அறிந்தான்; உள்ளத்தே தோன்றும் உவகை உணர்ச்சியால் அறிந்தான்; ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில் தன் காதலியை அறிந்தான். காந்தளனய கையின் பரிசத்தாலும், நெஞ்சு அமர்ந்த திறத்தாலும் தன் காதலியை உணர்ந்து கொண்ட் காதலனுடைய இனத்தைச் சேர்ந்தவன் இவன்.
முதலில் சொன்ன ஐங்குறுநூற்றுப் பாட்டு, கபிலர் பாடியது: "மஞ்ஞைப் பத்து என்ற பகுதியில் அத்தொகை நூலின் 291-ஆம் பாட்டாக அமைந்திருப்பது.
----------------
This file was last updated on September 6, 2016
.